sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 21

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 21

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 21

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 21


ADDED : நவ 14, 2024 01:57 PM

Google News

ADDED : நவ 14, 2024 01:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்

உற்சாகத்துடன் இருந்தான் பேரன் யுகன். கந்த சஷ்டி கவசம் பாடியதால் வீடெங்கும் நல்ல அதிர்வலை பரவியது.

“என்னடா, வீடெங்கும் பக்தி மணம் கமழுதே...” என்றார் பாட்டி.

“ஆமா... முருகனை மாதிரியே பட்டையை கிளப்ப வேண்டியதுதான்”

“திருப்போரூர்ல முருகன் பட்டையை கிளப்பின மாதிரியா” என பாட்டியும் கேட்டார் உற்சாகமாக.

“பரவாயில்லயே பாட்டி, மெட்ராஸ் பாஷையை கத்துக்கிட்டியே. ஆமா... முருகன் எப்படி திருப்போரூர்ல பட்டையை கிளப்பினார்?”

“முருகனோட அவதார நோக்கமே அசுரர்களோட சம்ஹாரம் தானே. தீமைகளை அழித்து எல்லோருக்கும் நன்மை உண்டாக்குவார். அப்படி திருச்செந்துார், திருப்பரங்குன்றத்துக்கு அடுத்து திருப்போரூரில் பறந்து பறந்து சண்டையிட்டார்''

“கேட்கவே குதுாகலமா இருக்கே. அந்த சண்டை எப்படி நடந்தது?”

“சொல்றேன் கேளு. சூரபத்மன் என்னும் அசுரனின் மாயையை முருகன் அடக்கினார். இந்த போர் திருச்செந்துார் கடலில் நடந்தது. அடுத்து திருப்பரங்குன்றத்தில் அசுரர்களின் செயல்களை அடக்கினார். இந்தப் போர் நிலத்தில் நடந்தது. அப்புறம் தாரகாசுரனை திருப்போரூரில் எதிர்கொண்ட முருகன் அவனது ஆணவத்தை அடக்கினார். இந்தப் போர் வானத்தில் நடந்தது. இப்படி முருகன் தன் அவதார நோக்கத்தை மூன்று தலங்களில் நிறைவேற்றினார். அதிலும் திருப்போரூரில் போரிட்டபோது தாரகாசுரன் மாய வித்தை மூலம் மறைந்து போரிட்டான். ஞான திருஷ்டியால் இதை தெரிந்து கொண்ட முருகன் சாதுர்யமாக வதம் செய்தார். சென்னைக்கு 40 கி.மீ., தொலைவில் உள்ள திருப்போரூர் கோயில் பழமையானது. பிரளய வெள்ளத்தால் ஆறு முறை அழிந்து போன இக்கோயில் ஏழாவது முறையாக கட்டப்பட்டது”

“அப்படியா, ஏழாவது முறை யார் கட்டினாங்க?”

“அது ஒரு சுவாரஸ்யமான கதை. மதுரையில் 16ம் நுாற்றாண்டில் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வாழ்ந்தார். சிதம்பர சுவாமியை ஆட்கொண்ட முருகன் திருப்போரூர் கோயிலை கட்ட வைத்தார். 500 ஆண்டுக்கு முன் இந்த அதிசயம் நடந்தது. ஒருநாள் இவர் தியானம் செய்த போது மயில் ஒன்று தோகை விரித்து ஆடும் காட்சியைக் கண்டார். இந்தக் கனவு ஏன் வந்தது என்பதற்கு விடை காண மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டு 45 நாள் தவம் செய்தார். பிறகு மீனாட்சி மீது கலிவெண்பா பாடினார்.

இதனால் மனமகிழ்ந்த அம்மன் காட்சியளித்து திருப்போரூரில் புதைந்திருக்கும் முருகன் சிலையைக் கண்டுபிடித்து கோயில் கட்டு என ஆணையிட்டாள். சிதம்பர சுவாமிகள் திருப்போரூருக்கு வந்த காலத்தில் அந்த இடம் பனங்காடாக இருந்தது. அங்கு பெண் பனை மரத்தின் அடியில் சுயம்பு வடிவில் முருகன் காட்சியளிப்பதைக் கண்டார். இந்நிலையில், இந்தப் பகுதியை ஆண்ட நவாப் மன்னரின் மனைவி வயிற்று வலியால் அவதிப்பட்டார். சிதம்பர சுவாமிகளின் தெய்வீக சக்தியை அறிந்து உதவி கேட்டு வந்த நவாப்பின் மனைவிக்கு திருநீறு பூசினார். வலி நீங்கியது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த நவாப் 650 ஏக்கர் நிலத்தை தானம் அளித்தார். திருப்பணி முடிந்து கோயில் உருவானது. அதுவே திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில். கோயிலை கட்டி முடித்த போது சுவாமிக்கு என்ன பெயர் வைக்கலாம் என குழப்பம் ஏற்பட்டது. அப்போது சிறுவன் ஒருவன், 'பெரியவரே... பெயர் வைப்பதில் குழப்பமாக உள்ளதா?' எனக் கேட்டான். சிதம்பர சுவாமிகள் ஆச்சரியத்துடன் பார்க்க அவன், 'கந்தசாமி கோயில் என வைக்கலாமே' எனக் கூறியபடி கருவறைக்குள் சென்று மறைந்தான். “வேறு என்னவெல்லாம் இந்த கோயிலின் சிறப்பு பாட்டி”

“மூலவர் சுயம்பு என்பதால் சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செஞ்சிருக்காங்க. கூர்ம பீடத்தின் மீது இருக்கும் யந்திரத்துல முருகனுடைய முன்னுாறு பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கு. இந்த எந்திரத்துக்கு அபிஷேகம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும், வியாபாரம் பெருகும். முருகனின் ஒரு வடிவமான 'குக்குடாப்தஜர்' என்னும் சேவல் வடிவ சிலை உள்ளது. இவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் பாஸ்போர்ட், விசா தொடர்பான பிரச்னை, தடை விலகும்”

''சூரனுடன் பறந்து பறந்து சண்டையிட்டதால இங்க விமானத்தில் பறப்பதில் ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுமா?”

“ஆமா... மூலவர் சுயம்பு என்பதால் அபிஷேகம் செய்வதில்லை, புனுகு மட்டும் சாத்துவர். பிரம்மா போல அட்சரமாலை, கண்டிகை வைத்திருக்கிறார். சிவன் போல வலது கையால் ஆசீர்வதித்தும், மகாவிஷ்ணு போல இடது கையை தொடையில் வைத்தும் மும்மூர்த்தியின் அம்சமாக உள்ளார். இந்த கோயிலில் எல்லா சன்னதிகளும் ஓம் வடிவில் இருக்கும். அதோட ஒருமுறை பெருமாள் லட்சுமி சாபம் தீர இங்கு வழிபட்டாங்க. வள்ளிக்கும் தெய்வானைக்கும் தனித்தனி சன்னதி இருக்கு. கருவறைக்கு எதிரில் வெள்ளை யானையான ஐராவதம் இருக்கு. அதன் பக்கத்தில் ஸ்ரீசக்கரம் இருக்கு. தல விருட்சம் வன்னி மரத்தில் தொட்டில் கட்டிச் சென்றால் குழந்தை பிறக்கும். இதில் மஞ்சள் கயிற்றால் முடிச்சு போட்டு கட்டுகிறார்கள். சிதம்பர சுவாமிகளுக்கு தனி சன்னதி இருக்கு. இவர் ஒரு வைகாசி விசாகம் அன்று முருகனுடன் இரண்டறக் கலந்தார் . அதனால வைகாசி விசாகம் அன்று கருவறைக்கு எதிரே சிதம்பர சுவாமியை எழுந்தருளச் செய்வர். சஷ்டி, கார்த்திகையில் கூட்டம் அதிகமாக இருக்கும். கந்த சஷ்டி சிறப்பாக நடைபெறும். அருணகிரிநாதர் திருப்போரூர் முருகன் மீது நான்கு பாடல் பாடியிருக்கார்.”

“சரி பாட்டி நீ முருகனோட பெயர்களை 50 பெயர்களை சொல்லு பாப்போம்.”

“ம்... விரல் விட்டு எண்ணு” எனத் தொடங்கியவர் ”அழகப்பன் அன்பழகன் ஆறுமுகம் இந்திரமருகன் உதயகுமாரன் உத்தமசீலன் கந்தசாமி கிருபாகரன் கருணாகரன் கார்த்திகேயன் குகன் குருபரன் குருமூர்த்தி சக்திபாலன் சந்திரமுகன் சண்முகம் சுகிர்தன் சுசிகரன் சுதாகரன் சுப்பய்யா சுப்ரமண்யன் சூரவேல் செவ்வேல் ஞானவேல் சௌந்தரீகன் தமிழ்செல்வன் தயாகரன் தீனரீசன் படையப்பன் பவன் பவன்கந்தன் மயில்வீரன் ரத்னதீபன் வைரவேல் ஜெயபாலன் கங்காதரன் கடம்பன் நிமலன் உமைபாலன் தேவசேனாபதி கருணாயன் திரிபுரபவன் விசாகனன் சிவகுமார் கதிர்காமன் முத்தப்பன் சங்கர்குமார் முத்துக்குமரன் மயூரகந்தன் சங்கர்குமார் தங்கவேல்” பாட்டி போன வேகத்துக்கு அவசரமாக இடைமறித்தான் யுகன்.

“பாட்டி... என்னா வேகம். 50 பெயர தாண்டி போயிடுச்சு.”

“மனசுக்குள்ள முருகன் இருக்கறதால அருவி போல கொட்டுது. ஒவ்வொரு பெயருக்கும் அர்த்தம் இருக்கு தெரியுமா?”

“சரி, என் பெயருக்கும் அமுதன் பெயருக்கும் அர்த்தம் சொல்லு பார்ப்போம்.”

“சொல்லிட்டா போச்சு. யுகன் என்ற பெயருக்கு சுப்ரமணியன் என்று அர்த்தம். இந்தப் பெயரை உடையவர்கள் சுதந்திரமாக வாழ விரும்புவார்கள்”

“சரி அமுதனுக்கு என்ன அர்த்தம்?'

“ம்... எல்லாத்தையும் நானே சொல்லிட்டா எப்படி... அவன் பெயருக்கு அர்த்தம் என்ன சொல்லு பார்ப்போம்.”

“சரி, கண்டுபிடிக்கிறேன்” எனச் சொல்லி எழுந்தான் யுகன்.



-இன்னும் இனிக்கும்

பவித்ரா நந்தகுமார்

94430 06882






      Dinamalar
      Follow us