ADDED : நவ 14, 2024 01:59 PM

வாழ்வின் குறிக்கோள்
தியானம் செய்து முடித்து விட்டு கண்களைத் திறந்தான் கந்தன். ''இந்த தியானத்தை நான் செய்வதால் என்ன பயன்'' என ராமசாமி தாத்தாவிடம் கேட்டான்.
''பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையின் 6ம் அத்தியாயம் 44ம் ஸ்லோகத்தில்
பூர்வாப் 4யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஸோ²பி ஸ:|
ஜிஜ்ஞாஸுரபி யோக³ஸ்ய ஸ²ப்³த³ப்³ரஹ்மாதிவர்ததே ||6-44||
என்கிறார்.
முற்பிறவிகளில் ஏற்பட்ட பழக்கத்தால் மனிதன் தன் வசமின்றி உலக ஆசைகளால் இழுக்கப்படுகிறான். அவற்றில் ஈடுபடுகிறான். அஷ்டாங்க யோகத்தை (யோகாசனம், தியானம், தவம் என்னும் படிநிலைகள்) பற்றி அறிய வேண்டும் என விருப்பம் கொண்டவனால் மட்டுமே உலகத்தைக் கடந்து தனக்குள் செல்ல முடியும்.
திருவள்ளுவர் 371வது குறளில்
'ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி' என்கிறார்.
ஆக்கம் உண்டாவதற்கு காரணமான நல்ல ஊழால் விடாமுயற்சியும், கைப்பொருள் ஒருவரை விட்டுப் போவதற்கு காரணமான ஊழால் சோம்பலும் ஒருவருக்கு உண்டாகும்.
ஒரு பொருள் கைக்கு வரவேண்டும் என்றால் முற்பிறவியில் அதற்கான தொடர்பு இருந்திருக்க வேண்டும். அப்போது தான் இடைவிடாமல் அந்த பொருளைப் பெறும் முயற்சியில் ஈடுபடுவோம். சாதாரண பொருள் கிடைப்பதற்கே நமக்கு முற்பிறவியின் தொடர்பு இருக்க வேண்டும். முற்பிறவியில் ஒருவன் தியானம் பழகி இருக்கலாம். ஆனால் கடவுளை அடைவதற்குள் வாழ்நாள் முடிந்து விட்டால் என்ன செய்வது... மறுபிறவியில் தியானம் செய்யும் சூழ்நிலை உருவாகும். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் கடைசியில் கடவுளை அடைவது ஒன்றே வாழ்வின் குறிக்கோள்'' என்றார் தாத்தா.
கடவுளை அடைவதற்காகவே தியானம் செய்கிறோம்
என்பதை அறிந்த கந்தன் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டான்.
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554