ADDED : நவ 14, 2024 02:36 PM

நவ.15 - நெடுமாற நாயனார் குருபூஜை
பாண்டிய நாடான மதுரையை ஆட்சி செய்தவர் நின்றசீர் நெடுமாறர். நீதி தவறாத ஆட்சியும் உயிர்களிடத்தில் அன்பும் கொண்டவர். எதிரிநாட்டு அரசர்கள் படையெடுத்த போது அவர்களை நெல்வேலிப் போர்க்களத்தில் தோற்கடித்தார். இதனால் இவர் 'நெல்வேலி வென்ற நெடுமாறர்' என அழைக்கப்பட்டார். இவருக்கும் சோழ வம்சத்தைச் சேர்ந்த மங்கையர்க்கரசியாருடன் திருமணம் நடந்தது. மங்கையற்கரசியாரோ சிவபக்தையாக இருந்தார்.
அதைப் போல் பாண்டிய நாட்டின் அமைச்சரான குலச்சிறையாரும் சிவபக்தர். இங்கே தான் விதி தன் ஆட்டத்தை ஆட ஆரம்பித்தது. அப்போது பாண்டியநாடே சமணர்களின் கோட்டையாக இருந்தது. அவர்களால் ஈர்க்கப்பட்ட மன்னர் நெடுமாறரும் சமணராக மாறினார். மன்னரின் வழியில் மக்கள் சமணர்களாக மாறினர்.
இதைக் கண்ட மங்கையர்க்கரசி, அமைச்சர் குலச்சிறையார் மனம் வருந்தினர். அவர்கள் முயற்சி எதுவும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் தான் அம்பிகையிடம் ஞானப்பால் உண்ட தெய்வீகக் குழந்தையான திருஞானசம்பந்தரின் தொடர்பு கிடைத்தது. அவர் திருமறைக்காட்டுக்கு வந்திருப்பதை அறிந்தனர்.
உடனே அவரை மதுரைக்கு வரவழைத்தார் மங்கையர்க்கரசி அம்மையார்.
இதையறிந்த சமணர்கள் ஞானசம்பந்தருக்கு நெருக்கடிகளை கொடுத்தனர். இதையெல்லாம் சிவனின் அருளால் எளிதில் முறியடித்தார். இந்த நேரத்தில் மன்னர் நெடுமாறருக்கு வெப்பு நோய் தாக்கியது.
சமண குருமார்களால் குணப்படுத்த முடியவில்லை. இறுதியில் மதுரை சொக்கநாதரை எண்ணி திருநீற்றுப்பதிகம் பாடினார் திருஞானசம்பந்தர். பின் திருநீற்றை பூசச் செய்து நோயை குணப்படுத்தினார். மகிழ்ந்த மன்னர் பெற்ற தாய்க்கு சமமான சைவ மதத்திற்கு மீண்டும் திரும்பினார். அவரை பின்பற்றி பாண்டிய நாட்டு மக்களும் தாய்மதத்தை பின்பற்றினர்.
இதன் பின் ஆகம முறைப்படி கோயில்களில் பூஜை நடக்க ஆரம்பித்தன. சிவபெருமானுக்கு தொண்டு செய்த நெடுமாறர் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று சிவபதம் அடைந்தார். இவரின் குருபூஜை இன்று (நவ.15, 2024) சிவபெருமான் கோயில்களில் நடக்கும்.
வையம் நீடுக மாமழை மன்னுக
மெய் விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக
தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.