sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 23

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 23

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 23

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 23


ADDED : நவ 28, 2024 01:44 PM

Google News

ADDED : நவ 28, 2024 01:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓதிமலை

பேரன் யுகன் தன் மனைவியின் மாமா உடல் நலம் தேறி விட்டதை பாட்டியிடம் தெரிவித்தான். ''நம்ம தலையில எழுதி இருக்கிற வரைக்கும் வாழந்தாகணும். நாமெல்லாம் முருகப்பெருமான் படைப்புத் தொழிலை செய்த போது பிறந்த புண்ணிய ஆத்மாவா என்ன? அப்படி இருந்தால் இறப்பே இல்லாமல் வாழலாம்” என்றாள் பாட்டி.

“என்ன பாட்டி... ஓதிமலை முருகனைப் பத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டியா” எனச் சொல்லி யுகன் அமர்ந்தான். மனைவி தேவந்தியும் பூஜையறையில் விளக்கு ஏற்றிவிட்டு வந்தாள்.

''யுகா, ஓதிமலை வரலாறை சொல்றேன் கேளு. பிரம்மா ஒருமுறை சிவனை தரிசிக்க கைலாயம் செல்லும் போது வழியில் இருந்த முருகனை பொருட்படுத்தாமல் சென்றார். விடுவாரா முருகன். அவரை அழைத்து பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். அவருக்கு தெரியவில்லை. 'மந்திரத்திற்கு விளக்கம் தெரியாமல் படைப்புத் தொழிலை செய்யக் கூடாது' என சிறையில் அடைத்தார். பின்னர் படைக்கும் தொழிலை தானே ஏற்றார். முருகனின் இந்த படைப்பு 'ஆதிபிரம்ம சொரூபம்' எனப்பட்டது. முருகனால் படைக்கப்பட்ட உயிர்கள் எல்லாம் புண்ணிய ஆத்மாவாக பிறப்பு எடுத்ததால் யாரும் இறக்கவில்லை. பூமியால் இந்த பாரத்தை தாங்க முடியவில்லை. படைக்கும் தொழிலை மீண்டும் பிரம்மாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பூமாதேவி கோரிக்கை வைத்தாள். இந்நிலையில் இங்கு வந்த முருகன் ஆகம விதிகளை சிவனுக்கு ஓதியதால் இத்தலம் 'ஓதிமலை' எனப் பெயர் பெற்றது.கைலாயத்தில் இருந்து சிவன் மட்டும் இங்கு வந்ததால் அம்மனுக்கு சன்னதி இல்லை. பிரம்மாவிற்கும் பிரணவ மந்திரத்தின் விளக்கத்தைக் கூறி, படைக்கும் தொழிலை ஒப்படைத்தார்”

''ஓதியதால் ஓதிமலை எனப் பெயர் வந்ததா?”.

''ஐந்து முகம், எட்டு கைகளுடன் காட்சி தரும் இத்தலத்தில் உள்ள முருகனை எங்கும் காண முடியாது. இவருக்கு 'கவுஞ்சவேத மூர்த்தி' என்பது பெயர். மலையேறுவதற்கு முன் அடிவாரத்தில் உள்ள சுயம்பு விநாயகரை வழிபட வேண்டும். அடிவாரத்தில் சிவனுக்கு தனி கோயில் இருக்கு. ஓதிமலை வரலாற்றில் இருந்து தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா… அதிகாரிகளுக்கு வணக்கம் சொல்லத் தவறக்கூடாது” எனச் சொல்லி யுகனின் காதைப் பிடித்துத் திருகினார் பாட்டி.

“நான் அதிகாரிகளுக்கு வணக்கம் சொல்லாம இருந்ததே இல்ல. நீ கோயிலை பத்தி சொல்லு பாட்டி”

“இந்த கோயில் எல்லா நாளும் திறப்பதில்லை. திங்கள், வெள்ளி, கார்த்திகை, சஷ்டி, அமாவாசை நாட்களில் காலை 11:00 மணி - மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும். கோயம்புத்துாரில் இருந்து 48 கி.மீ., துாரத்தில் புளியம்பட்டி. அங்கிருந்து 10 கி.மீ., போனால் இரும்பறையை அடையலாம். அங்கிருந்து ஓதிமலை கொஞ்சம் துாரம் தான். சத்தியமங்கலம் வழியாகவும் போகலாம். ஆனா ஓதிமலை செங்குத்தாக இருக்கும்.

1850 படிகள். ஒவ்வொரு 300 படிக்கட்டுக்கும் ஒரு இளைப்பாறும் மண்டபம் உண்டு. அதுவும் 850 படிகள் வரைக்கும் தான். அதன்பின் சமதளமோ, இளைப்பாறும் மண்டபோ இருக்காது. மலை மீதிருந்து பார்த்தால் பவானிசாகர் அணை தெரியும். மலையேற சாலை வசதி கிடையாது. படி ஏறித்தான் போகணும். வெயில் நேரத்துல காலில் செருப்பு இல்லாம ஏற முடியாது.

இது வறட்சியான பகுதி. பெரும்பாலும் மரங்கள் முள்மரம் தான். ஆனாலும் அதிசயமா இத்தனை உயரமான மலையிலும் கிணறு இருக்குன்னா பார்த்துக்கோயேன்”

“மலையில கிணறா…”

“ஆமா நீ போகும் போது அவசியம் பாரு. ஒரு சமயம் பழநி மலைக்கு போறதுக்கு முன் அங்கு செல்ல வழி தெரியாத காரணத்தால் போகர் இங்கு வந்து வேண்டினாரு. அப்போ முருகனே நேரில் வழிகாட்டினார். அவரே ஓதி மலையில் சற்று தொலைவில் இருக்கும் குமாரபாளையம் நாகநாத ஈஸ்வரர் கோயிலில் இருக்கிறார். இன்னொரு தகவல் என்னன்னா…

ஓதிமலையின் உயரம் 3000 அடி. முருகன் இருக்கும் மலைகளில் உயரமானது இதுவே. அடிபாகம் வட்டமாகவும், மேல் பாகம் கூம்பாகவும் பிரமிடு போல இருக்கும். இந்த மலையை வடகிழக்கில் இருந்து பார்த்தால் அடிவாரத்தில் ஒரு பகுதி மட்டும் வெள்ளை நிறமாக தெரியும். அதை பூதிக்காடுன்னு சொல்வாங்க. இங்கதான் போகர் யாகம் நடத்தினார். இங்கு மண்ணே விபூதியாகி வெள்ளையாக இருக்கும்”

“ஓதிமலை தான் முருகனுக்கு உயரமான மலையா... இது தெரியாம போச்சே”

“இங்கு பக்தர்கள் பூ வைத்து உத்தரவு கேட்கிறார்கள். இதை 'வரம் கேட்டல்' எனச் சொல்றாங்க. இங்கு மயில், குரங்கு, பறவைகள் நிறைய இருக்கு. இது சித்தர்களின் பூமியாக திகழ்கிறது. இங்குள்ள முருகனின் கோலத்திற்கு கிரவுஞ்ச பேதனர் என்று பெயர்”

“ஓ! அப்படின்னா முருகருக்கு நிறைய கோலங்கள் இருக்கா?”

“சக்திதரர், கந்தசுவாமி, தேவசேனாதிபதி, சுப்பிரமணியர், கஜவாகனர், சரவண பவர், கார்த்திகேயர், குமாரசுவாமி, சண்முகர், தாரகாரி, சேனாபதி, பிரம்மசாத்தர், வள்ளி கல்யாண சுந்தரர், பாலசுவாமி, கிரவுஞ்ச பேதனர், சிகிவாகனர் என 16 கோலங்கள் உண்டு”

“அப்படியா பாட்டி... கோயிலுக்குப் போனா முருகனை தரிசிப்பேனே தவிர அது என்ன கோலம் என யோசிச்சதில்லை”

“தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு யுகா... 'இருமலு ரோக' எனத் தொடங்கும் திருப்புகழை பாடிட்டு வர்ற இல்ல. அது கூட இந்த கந்தரலங்கார பாடலையும் தொடர்ந்து பாடு”

“அப்படி பாடினா…” அப்படி பாடினால் வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.

பாட்டைக் கேளு.

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச்

செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ்

நுால் விரித்தோனை விளங்கு வள்ளி

காந்தனை கந்தக்கடம்பனை கார்மயில் வாகனனை

சாம் துணைப் போது மறவாதவர்கொரு தாழ்வில்லையே

“ரொம்ப சுலபமா இருக்கே. இதை நானே சொல்வேனே” என பாட்டியிடம் நெருங்கினான் கொள்ளுப்பேரன் அமுதன்.

“அப்படி சொல்லுடா தங்கக்குட்டி. நம்ம அமுதன் கந்த சஷ்டி கவசத்தை நல்லா மனப்பாடம் பண்ணிட்டான் தெரியுமா? எங்கே உங்க அப்பாவுக்கு சொல்லு” என்றார் பாட்டி. அமுதன் தன் பிஞ்சு குரலில் கந்த சஷ்டி கவசத்தை பாட யுகனுக்கு கண்ணீர் வந்தது. அதே நேரத்தில் தேவந்தியின் அக்காவும், மாமாவும் திருக்கடையூரில் நடக்க இருக்கும் தன் அப்பாவின் அறுபதாம் கல்யாண அழைப்பிதழை தர காலிங் பெல்லை அழுத்தினர்.



-இன்னும் இனிக்கும்

பவித்ரா நந்தகுமார்

94430 06882






      Dinamalar
      Follow us