sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 26

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 26

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 26

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 26


ADDED : டிச 20, 2024 10:48 AM

Google News

ADDED : டிச 20, 2024 10:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரு ஆவினன்குடி

பாட்டியும், பேரனான யுகனும் பல்லாங்குழி விளையாடினர். பாட்டியின் வேகத்தையும் அவள் ஆடும் லாவகத்தையும் பார்த்து ரசித்தான் யுகன்.

“பாட்டி... பல்லாங்குழியில உன்னை யாரும் ஜெயிக்க முடியாது போல. ஆடத் தொடங்கும் போதே இந்தக் குழியில இருந்து எடுத்து ஆடினா ஒத்த காய் தான் கிடைக்கும், அந்தக் குழியில இருந்து எடுத்து ஆடினா புதையல் கிடைக்கும்னு முன்னாடியே யூகிச்சு சொல்றியே”

“இதெல்லாம் ஒரு கணக்கு. எப்படி பிரபஞ்சமும் கிரகங்களும் நேர்த்தியான ஒழுங்கு முறையில இயக்கப்படுதோ அப்படித்தான் இது போன்ற ஆட்டங்களும்”

“அப்போ எல்லாமே ஏற்கனவே விதிக்கப்பட்டதுதானா?”

“விதிக்கப்பட்டதுதான். ஆனால் அதை மாற்றும் வலிமை வழிபாட்டுக்கு உண்டு. விதியை மதியால் வெல்லலாம்னு சொல்வாங்க... அப்படித்தான் வழிபாடுகளால் நம் வாழ்வு வளமாகும்”

“ஆமா பாட்டி, எனக்கும் அந்த நம்பிக்கை ஆழமா மனசுல விழுந்திருக்கு. அது சரி பூம்பாறை குழந்தை வேலப்பர் போலவே இன்னொரு குழந்தை வேலப்பர் பத்தி சொல்றேன்னு சொன்னியே.”

“பழநியில் இரண்டு முக்கிய கோயில்கள் உள்ளன. ஒன்னு பழநி மலை மீதுள்ள கோயில். இன்னொன்னு மலை அடிவாரத்தில் உள்ள திரு ஆவினன்குடி. இதை ஆதி கோயில்னு சொல்லுவாங்க. இதை தரிசிச்சிட்டு தான் மலைக்குப் போய் தண்டாயுதபாணியை வணங்கச் சொல்வாங்க. சிறப்பு மிக்க ஆவினன்குடியில் மட்டும் தான் ஒரே இடத்தில் (திரு) மகாலட்சுமி, (ஆ) காமதேனு, (இனன்) சூரியன், (கு) பூமாதேவி, (டி) அக்னி ஆகிய ஐந்து தெய்வங்கள் ஒன்னா அருள்புரியுறாங்க. ”

“ஐந்து தெய்வம் இங்கு வர என்ன காரணம்”

“ஒரு சமயம் மகாலட்சுமிக்கும் திருமாலுக்கும் முரண்பாடு வந்தது. உடனே மகாலட்சுமியை புறக்கணித்தார் திருமால். மகாலட்சுமி இங்கு தவமிருந்து கணவனை மீட்டாள். அடுத்து விஸ்வாமித்திரரின் ஆயுதத்தை வென்ற காமதேனு அகம்பாவம் கொண்டது. இதனால் ஏற்பட்ட பாவம் தீர இங்கு வழிபட்டது.

அடுத்ததாக உயிர்கள் வாழ்வதெல்லாம் என்னால் தான் என கர்வம் கொண்ட சூரியனை சபித்தார் சிவபெருமான். அந்த பாவம் தீர வழிபட்டார் சூரியன். மருமகனான சிவனுக்கு அழைப்பு விடுக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் பங்கேற்றதால் சாபம் பெற்ற அக்னி, வாயு பகவானும் இங்கு வழிபட்டு பரிகாரம் தேடினர். அதனாலேயே இக்கோயில் சிறப்பு பெற்றது''

“குழந்தை வடிவில் முருகனை மட்டும் இல்லாமல் மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி எல்லோரையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம்”

“ஆமா, அதோட அருணகிரிநாதருக்கு ஜபமாலை தந்தது இந்த திரு ஆவினன்குடி முருகன் தான். அவர் இங்கு 12 திருப்புகழ் பாடல்கள் பாடினார். பழநி மலைமுருகன் மீது 85 பாடல்கள் பாடினார். திரு ஆவினன்குடி கோயில் வளாகத்தில அருணகிரிநாதர், நக்கீரர் இருக்காங்க. கருவறையில குழந்தை வேலாயுத சுவாமியாக ஒரு முகம் நான்கு கைகள், இடது திருவடியை மடித்தும், வலது திருவடியை தொங்கவிட்டும், மலர்ந்த முகத்துடன் மயில்மீது அமர்ந்தபடி உள்ளார்”

“மூன்றாம் படைவீடு திரு ஆவினன்குடியா இல்ல பழநியா பாட்டி? குழப்பமா இருக்கே!”

“மூன்றாம் படைவீடா தொடக்க காலத்தில் இருந்தது திரு ஆவினன்குடி தான். பிற்காலத்தில் பழநி பெரும் பெயர் பெற்றதால் மலைக்கோயில் மூன்றாம் படை வீடானது”

“போகர் எப்படி இந்த சிலையை செஞ்சாரு? உனக்கு தெரியுமா?”

“ஒருசமயம் சதுரகிரி மலையில் அமர்ந்து 18 சித்தர்களும் கலியுகம் தொடங்கப் போவதைப் பற்றி பேசிக் கொண்டனர். அப்போது கலியுகத்தில் நோய்கள் அதிகரிக்கும். இதற்கு மருந்தாக முருக வழிபாடு என போகர் அங்கு நிலைநாட்டினார். நவ பாஷாணத்தால் முருகன் சிலையை செய்ய எண்ணி பலவித மூலிகைகளை தயாரிக்க முற்பட்டார். போகரை சித்தருன்னு சொல்றோம் உண்மையில அவர் விஞ்ஞானி போல. எப்படி விஞ்ஞானிகள் ஒரு கண்டுபிடிப்பை அடையும் முன் பலமுறை சோதனை செய்கிறார்களோ அதுபோல போகரும் பலமுறை சோதனை செய்தார். அதில் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருந்தது.

முருகனிடம் முறையிட்டார். அவர் திரு ஆவினன்குடி அருகிலுள்ள மலைக்குச் சென்று அக்னி நட்சத்திர நாளில் குறிப்பிட்ட மூலிகையை பறித்து சிலை செய்ய உத்தரவிட்டார். அப்படியே போகரும் மூலிகைகளில் முருகன் முகஅமைப்பில் மூன்று குடுவைகளை உருவாக்கினார்”

“குடுவைன்னா என்ன பாட்டி?”

“அதான்டா... அச்சு. மோல்டுன்னு சொல்லுவீங்கல்ல, அதுதான். அத செஞ்சு குடுவைக்கு மேல சின்ன துவாரமிட்டு இந்த ஒன்பது பாஷாண கலவையையும் உருக்கி அந்த துவாரத்தில் ஊற்றினார்”

“ம் என்னாச்சு, உடனே சிலை வந்துடுச்சா?”

“நல்ல வேளை! உன்ன மாதிரி போகர் அவசரப்படல. பொறுடா! உடனே சிலை வந்துடுமா என்ன? இப்படியா அந்த மூணு குடுவைகளையும் மண்ணுக்கு அடியில் புதைச்சு வெச்சார். நல்ல நாள், நட்சத்திரம் பார்த்து மண்ணுக்கடியில் இருந்து ஒரு சிலையை மட்டும் எடுத்த போது, அது உடல் முழுக்க வெள்ளை வெளேர்னு இருந்தது. பின்னாடி அதற்கு மேல் மூலிகை பூச்சு கொடுத்து பழநி மலை மீது பிரதிஷ்டை செய்து தானும் ஜீவசமாதி ஆயிட்டார் போகர்”

“அப்ப பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட மற்ற இரண்டு சிலைகள் என்ன ஆச்சு?”

“போகருக்கு பிறகு அவருடைய சீடர்கள் வெளியே எடுத்த போது அந்த சிலை முழுக்க வெள்ளை வெளேர்னு தான் இருந்தது. போகர் மூலிகையால சிலைக்கு மேல் பூச்சு கொடுத்தது போல் அவர்களுக்கு திறமை இல்லை. அதை திருச்செங்கோட்டுல பிரதிஷ்டை செய்தாங்க. இது பற்றி முன்பே சொல்லி இருக்கேன், ஞாபகம் இருக்கா?”

“ம்... செங்கோட்டு வேலவர்ன்னு ஞாபகம் இருக்கு. வேறெதுவும் நினைவில் இல்லயே”

“ஒன்னு பண்ணு. ஞாபக சக்தி பெருக கந்தர் அனுபூதியில் ஒரு பாடல் இருக்கு. தொடர்ந்து படி. அப்புறம் பாரு உங்க ஆபீஸ்ல இருக்குறவங்க எல்லாம் உன்கிட்ட வந்து கேட்டு தெரிஞ்சிக்கிட்டு போவாங்க.”

“ஏற்கனவே இந்த போன் வந்ததுல இருந்து அதை துாக்கிட்டுப் போக மட்டும் தான் ஞாபகத்துல இருக்கு. மற்றதெல்லாம் மறந்து போச்சு. சொல்லு பாட்டி”

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து

உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்

பொரு புங்க வரும் புவியும் பரவும்

குரு புங்கவ, எண் குண பஞ்சரனே

கந்தர் அனுபூதியில் வரும் 15வது பாடல் இது. இன்னொரு முக்கியமான பாடலைப் பத்தியும் சொல்றேன். அதில் வரும் 11வது பாடல் இது. வீட்டில் ஐயோ அம்மான்னு அழுகுரல் கேட்காமல் இருக்க இந்த பாடலை தினமும் பாடலாம்.

கூகா என என் கிளை கூடி அழப்

போகா வகை மெய்ப்பொருள் பேசியவா

நாகாசல வேலவ நாலு கவித்

தியாகா சுரலோக சிகாமணியே

யுகா... இதைப் பாடி வர எல்லா நன்மைகளும் கிடைக்கும். சரி, இனி பழநிக்குப் போனா திரு ஆவினன்குடிக்கும் போயிட்டு வரனும் புரியுதா”

“அப்ப அடுத்த வாரம் எந்த ஊர் பாட்டி?”

“பட்டும் வேலும் பெயரில் வர்ற ஊரு. கண்டுபிடி பார்ப்போம்” என பாட்டி சொல்வதற்கும் பல்லாங்குழி ஆட அடுத்த வீட்டு அபர்ணா உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.



-இன்னும் இனிக்கும்

பவித்ரா நந்தகுமார்

94430 06882






      Dinamalar
      Follow us