ADDED : பிப் 20, 2025 11:00 AM

கந்தன் குடி
பள்ளியில் அமுதனுக்கு இன்று செஸ் போட்டி. நான்கு நாளாக அமுதனுக்கு பயிற்சி கொடுப்பதை பார்க்க பாட்டிக்கு பாவமாக இருந்தது. 'குழந்தைக்கு தைரியம் சொல்லி அனுப்புங்க. இன்னைக்கு தானே போட்டி, இப்ப அவனுக்கு எந்த பயிற்சியும் வேண்டாம். ரெண்டு பேருமா சேர்ந்து உலுக்கி எடுக்காதீங்க' என்றார் பாட்டி. பள்ளிக்கு கிளம்பும் முன் பாட்டியிடம் ஆசி வாங்க வந்தான் அமுதன்.
“போருக்கு போற முருகனைப் போல ஜெயிச்சுட்டு வா. கிருஷ்ண பரமாத்மா கீதையில படைத்தலைவர்களில் நான் கந்தனாக விளங்குகிறேன் என்கிறார்”
“ நிஜமாவா பாட்டி?”
“ஆமா யுகா. கீதையோட பத்தாம் அத்தியாயம் விபூதி யோகத்துல 'சேனாதிபதிகளில் இவர் தம் ஸ்வரூபம்'னு சொல்கிறார். வால்மீகி ராமாயணத்துல விஸ்வாமித்திரர் மூலம் முருகனின் அவதார பெருமையை விவரிக்கிறார்.
குமார சம்பவஸ் சைவ தன்ய: புண்யஸ்த தைலச
பக்தஸ்சய: கார்த்திகேயே காகுஸ்த புவிமானவ:
என அந்த பாடல் தொடங்கும்” என தன் டைரியில் படித்துக் காட்டினார் பாட்டி. பின் கண்ணாடியை கழற்றியபடி மேலே தொடர்ந்தார். ''அது மட்டுமில்ல யுகா, முருகனின் பிறப்பைப் பற்றி படிப்பவர்களுக்கு பணம் கொழிக்கும். புண்ணியம் சேரும். மகாபாரதத்தில் வீரர்களை பற்றி பேசும் இடங்களில் எல்லாம் வியாசர் நம் முருகனையே குறிப்பிட்டுச் சொல்கிறார்னு படிச்சிருக்கேன். இன்னொரு விஷயம் கேளு... வேதத்தின் உட்கருத்தான 'ஓம்' என்ற பிரணவத்தின் பொருள் முருகன் தான்... அவரே பிரம்மா, விஷ்ணு, சிவனின் சொரூபம். முருகனே வேதத்தின் பொருளாக விளங்குகிறான். ஆக, போட்டிக்கு போற அமுதனுக்காக வழிபட்டு அனுப்பி வைப்போம். சரிதானே யுகா?”
“வெற்றியோடு வா அமுதா'' என ஆசிர்வதித்தார் பாட்டி.அமுதனை பள்ளிக்கு அனுப்பி விட்டு வந்த யுகன், “என்ன பாட்டி, முருகன் போர் புரிந்த கோயில் பற்றி சொல்லப் போறியா?” எனக் கேட்டான்.
“இல்ல. தெய்வானை தவம் இருந்த கந்தன்குடி பற்றி சொல்லப்போறேன்”பாட்டியின் அருகில் அமர்ந்தான் யுகன். ''தெய்வானை தவம் இருந்த கோயில் எது?”
“திருவாரூர் மாவட்டம் பேரளத்துக்கு பக்கத்துல இருக்கு. பேரளத்தில இருந்து திருநள்ளாறு போற வழியில் 5 கி.மீ., முன்னொரு காலத்தில துர்வாசர் வழிபாட்டுக்காக வான் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போ அசுரர் குலப்பெண் ஒருவர் இடைமறித்து 'முனிவரே, எனக்கு உம்மால் பிள்ளை பேறு வேண்டும்' என கேட்டாள். வழி மறிக்கிறாளே என கோபித்த முனிவர், 'அழிவு ஒன்றையே செய்து கொண்டிருக்கும் அசுரர் இருவர் பிறக்கட்டும்' என சபித்தார். அந்த நிமிடமே இரு மகன்களை பெற்றெடுத்தாள் அவள். அம்பரன், அம்பன் என பெயர் சூட்டினாள். இருவரும் பெரியவர்களானதும் தேவர்களை வதைத்தனர். கொடுமை தாளாமல் பார்வதியிடம் சரணடைந்த தேவர்களை அவள் அமைதிப் படுத்தி தன்னுடைய கோப சக்தியை திரட்டி காளியை உருவாக்கி அனுப்பினாள்”
“அப்போ அசுரர்களை பார்வதி தான் அழிச்சாங்களா? முருகன் அழிக்கலையா”
“ஆமாம், பார்வதி தானே காளியாக வந்து அழித்தாள். மதுவனம் என்ற அந்த இடத்திற்கு வந்த முருகனை இங்கேயே குடிகொள்வாய் என்றார். அப்படி கந்தன் குடி கொண்ட இடமே கந்தன்குடி ஆயிற்று. காடான இங்கு ஒரு பன்னீர் மரத்தடியில் புற்று ஒன்று இருந்தது. அந்தணர் ஒருவரின் பசு ஒன்று மேய்ச்சல் முடிந்து திரும்பும் வழியில் அந்த புற்றின் மீது தினமும் பால் சொரிந்தது. இதை கவனித்த அந்தணர் புற்றை அகற்ற அதனுள் இருந்த முருகன் சிலை வெளிப்பட்டது. அவர் தான் கந்தன்குடி சுப்பிரமணியர். இந்த ஊருக்கு தேன்காடு என்றும் பெயருண்டு. தேன் சிந்தும் மலர்களைக் கொண்ட ஊர் என்பதால் இப்பெயர். வைகாசி விசாகம், ஆனி உத்திராடம், ஆடிக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, தை கார்த்திகை, பங்குனி உத்திரம் இங்கு விசேஷம்”
“ அது சரி பாட்டி, தெய்வானை முருகனுக்காக தவம் இருந்தாங்கன்னு ஆரம்பத்துல சொன்னியே…”
“அது யுகாந்திர காலம். தேவர்களை விட அசுரர்கள் தவம் இருந்து வேண்டியதை வரமாக பெற்ற காலம். முருகன் அப்போதுதான் குமரப் பருவத்தை எட்டியிருந்தான். அம்பரனும் அம்பனும் செய்யும் அட்டகாசத்தை பார்த்து முருகனுக்கு கோபம் அதிகமானது. முருகனை சமாதானம் செய்த பார்வதி 'இவர்களை வதம் செய்வது என் பொறுப்பு' எனத் தெரிவித்து முருகனையும் அழைத்துக் கொண்டு பூலோகம் வந்தாள். அங்கிருந்த மது வனத்துக்குள் செல்லுமாறு கட்டளையிட்டாள்.
தன்னை யாரோ அங்கு அழைப்பது போல முருகனும் உணர்ந்தான்.
வழியெங்கும் தேனடைகளில் தேன் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. அங்கு தெய்வானை தன்னை திருமணம் செய்வதற்காக மதுவனத்தில் தியானத்தில் இருப்பதைக் கண்டான். இந்திரன் மகளாக இருந்தாலும் எளிய பெண்ணாக மாறி தியானத்தில் இருந்த தெய்வானையைக் கண்டதும் மனதை இழந்தான் முருகன். மனதில் அன்பு பெருக்கெடுத்தது. தியானத்தில் இருந்து எழுந்த தெய்வானை வணங்கினாள். அப்போது அம்பரன், அம்பன் இருவரும் அழிந்த செய்தி காடெங்கும் பரவியது. பார்வதி தன் மகன் முருகனை(கந்தன்) இங்கு தங்கியிருக்குமாறு சொன்னதால் இக்கோயிலுக்கு கந்தன்குடி என்று பெயரானது”
“ஓ”
“இன்னைக்கும் இந்த கோயில் காட்டுக்கு நடுவில் தான் இருக்கா”
“ இல்லை. இப்போ தென்றல் தவழும் இயற்கை சூழல் நிறைந்துள்ளது. இந்த கோயிலின் விதானத்தின் மீது மண்டபம் ஒன்னு இருக்கு. அங்கு அறுபடைகளும் ஓவியமாக வரைஞ்சிருக்கு. தெற்கு நோக்கி தெய்வானை சன்னதி இருக்கு. அம்மன் நிற்கும் நிலை நம்மை ஆச்சரியப்படுத்தும்”
“அது எப்படி?”
“தவம் முடித்த களைப்பு முகத்திலும், கையில் கிளியும் இருக்க சாந்தம், நாணத்துடன் காட்சியளிக்கிறாள் தெய்வானை. நெருங்கி போய் பார்த்தால் தெய்வீக வசீகரம் பொழிவதை உணரலாம். திருமணம் தள்ளிப் போறவங்க தெய்வானையை தரிசனம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். கந்தன்குடி சின்ன கோயிலாக இருந்தாலும் புகழ் மிக்க பழமையான கோயில். அருணகிரிநாதர் இங்கு ஒரு பாடல் பாடியிருக்கிறார். கந்த புஷ்கரணி என்ற குளம் இருக்கு. இதில் நீராடி வழிபடுவோருக்கு மன அழுக்கு நீங்கும். ஐராவதம் எனும் வெள்ளை யானையை தெய்வானைக்கு துணையாக கந்தன்குடிக்கு அனுப்பி வைத்தாராம் இந்திரன். அந்த ஐராவதம் இந்த குளத்தில் மூழ்கி புனிதம் அடைந்தது”
“ அப்ப சரி அமுதன் போட்டியில் ஜெயிச்சுட்டு வரட்டும்; நானும் அந்த குளத்துல மூழ்கிட்டு வரேன்”
“யுகா, கடவுளே... நீ எனக்கு இதை செஞ்சு கொடுத்தா நான் உன்னை வந்து பார்ப்பேன், அதை செஞ்சு கொடுத்தா நான் உனக்கு இவ்வளவு தானம் கொடுப்பேன் என்றெல்லாம் கடவுளிடம் பேரம் பேசக் கூடாது யுகா. நாமாகவே விரும்பி கோயில்களுக்கு போய் வரணும்; நம்பிக்கையுடன் இருக்கணும்''
“சரி பாட்டி, அப்படி செய்றேன். தெய்வானை போல தேவந்தி வாரம்
ஒருநாள் செவ்வாயன்று மவுன விரதம் இருந்தா கூட வீடு அமைதியா இருக்கும். எடுத்துச் சொல்லு பாட்டி” என மனைவியின் பக்கம் திரும்பாமல் ஆபிசுக்கு நேரமாச்சு என ஓடினான் யுகன்.
தேவந்தியை வம்பிழுக்காமல் இருக்க யுகனை ஞானமலைக்கு போகச் சொல்லணும் போலிருக்கே என யோசித்தபடி இருந்த பாட்டி, மலேசியாவில் இருந்து அழைத்த தன் மகனிடம் அலைபேசியில் பேசத் தொடங்கினார்.
-இன்னும் இனிக்கும்
பவித்ரா நந்தகுமார்
94430 06882