ADDED : பிப் 20, 2025 08:38 AM

அயோத்தி மன்னர் சித்திரபானுவை ஒரு சிவராத்திரியன்று சந்திக்க வந்தார் அஷ்டவக்கிர முனிவர். அன்று விரதமிருந்த மன்னர் தன் முற்பிறவி பற்றி முனிவரிடம் விவரித்தார்.
''நான் சுஸ்வரன் என்னும் வேடனாக வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள் பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை. மாலையில் மான் ஒன்று சிக்கவே அதைக் கொன்றேன். இருட்டி விட்டதால் காட்டிலேயே தங்கினேன். அன்று சிவராத்திரி என்பது எனக்கு தெரியாது.
மிருகங்களிடம் இருந்து தப்பிக்க ஒரு மரத்தில் ஏறி அமர்ந்தேன். பசியாக இருந்ததால் துாக்கம் வரவில்லை. பொழுது போகாமல் இலைகளைப் பறித்து கீழே போட்டபடி இருந்தேன். மறுநாள் வீட்டுக்கு புறப்பட்டேன். நான் மரணமடைந்ததும் சிவதுாதர்கள் என்னை அழைத்துச் சென்றனர்.
செல்லும் வழியில் அவர்கள், ''நீ வேட்டையாடச் சென்ற நாள் சிவராத்திரி. ஏறி அமர்ந்தது ஒரு வில்வமரத்தில். மரத்தடியில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. வில்வ இலைகளைப் பறித்துப் போட்டபடி இருந்தாய். பசியுடன் உறங்காமல் விழித்திருந்தாய். அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று விரதம் இருந்து வில்வ அர்ச்சனை செய்த பலனை பெற்றாய்'' என்றனர். அதனால் மன்னராகும் வரத்தையும் பெற்றேன்'' என்றார்.
பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் நலமாக வாழ்வர்.