ADDED : மார் 20, 2025 02:01 PM

ஸ்கந்தகிரியும் தத்தகிரியும்
ஸ்கந்தகிரி குருநாதா தந்துடுவீர் ஞானமுமே
சப்தகிரி குருநாதா வந்துடுவீர் வந்துடுவீர்
கந்தகுரு கவசம் பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. காபி குடித்துக் கொண்டிருந்த யுகன், “ஸ்கந்தகிரி தத்தகிரின்னு வருதே. இந்த கோயில் எங்கே இருக்கு?” என சந்தேகம் கேட்டான்.
“கந்தகுரு கவசம் உருவான இடமே கந்தகிரி தான். சாந்தானந்த சுவாமிகள் தான் இங்கு முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார்”
“இரண்டுமே கிரின்னு முடியுதே பாட்டி?”
“இரண்டும் மலைக்கோயில்கள்தான்”
“ஏன் முருகன் மலை மீதே இருக்கார்?”
“ஒரு மனிதன் எப்போ உடம்ப வருத்திக் கொள்கிறானோ அப்ப அவனோட கர்மாவை கரைத்து கொள்கிறான் என்பது நம் கோட்பாடு. அதனால் தான் கால் கடுக்க மலையேறி முருனை தரிசிக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. விரதம் இருந்து வருத்திக் கொண்டு பாத யாத்திரை போறவங்களோட கர்மாக்கள் எல்லாம் கரைந்து விடும். முருக வழிபாட்டின் நோக்கமே கர்மா களையப்பட்டு ஞானம் அடைவது தான். அது மட்டுமல்ல மலை ஏறினால் உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் சிறப்பாக வேலை செய்யும். ஆரோக்கியம் மேம்படும்”
“பாட்டி... இந்த கோயில்கள் எங்க இருக்குனு சொல்லலையே” என யுகன் அவசரப்படுத்தினான்.
''சேலம் உடையார் பட்டியில் உள்ள கந்தாஸ்ரமம் தான் கந்தகிரி. இங்கு போகும் போது வழியில் உள்ள கன்னிமார் ஓடையில் கை, கால்களை நனைச்சுட்டு மலை ஏறணும். 1965ல் இந்த ஆஸ்ரமத்தை நிறுவிய சாந்தானந்த சுவாமிகளின் கனவில் வந்த முருகன் குறிப்பிட்ட இடத்தில் தன்னை பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். இப்போது உள்ள இடத்துக்கு வந்ததும் கனவில் கண்ட இடம் இது என உணர்ந்து முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார்.
காலப்போக்கில் அழகிய கோயிலாக மாறி விட்டது. சேலத்துக்கு பக்கத்துல மலைப்பாங்கான இடத்தில் எழில் மிக்கதாக கந்தகிரி இருக்கு. சாந்தானந்த முருகனுக்கு எதிரில் பராசக்தி இருக்கிறார். இருவருக்கும் சேர்ந்து ஆரத்தி காட்டுவது வழக்கம். இது போல தாயும், மகனும் நேருக்கு நேர் சன்னதி எங்கும் இல்லை. அம்மனுக்கு முன்பாக சாந்தானந்த சுவாமிகளின் சமாதி இருக்கு. அதன் மீது சிவலிங்கம் இருக்கு”
“இப்படி சன்னதி எதிர் எதிராக இருப்பது விசேஷமானதா... பாட்டி''
“ஆமாம் யுகா, முக்தி பெறணும்னா அஷ்டமா சித்தி கைகூடணும். அதை அருள்பவர் முருகன் தான். கந்தகுரு கவசத்தை ஆழ்ந்து படிச்சா இந்த உண்மை புரியும். ஸ்ரீவித்யா உபாசகர்கள் கூட முக்தி பெற முருகனிடம் தான் வருவாங்க. கந்தகிரி முருகனைப் பார்த்து கந்தகுரு கவசம் படித்தால் அற்புதம் நடக்கும். நீதிமன்ற வழக்கு, கல்வி தடை காணாமல் போகும். முருகனைச் சுற்றி நவக்கிரக சன்னதி உள்ளது. அதுவும் தங்களின் மனைவியருடன். 16 அடி உயர தத்தாத்ரேயர், சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் இருக்கு. காலை 6:00 - 12:00 மணி வரை, மாலை 4:00 - 9:30 வரை கோயில் திறந்து இருக்கும்”
“சரி, தத்தகிரி கோயில் பத்தி சொல்லு பாட்டி''
“சரி சொல்றேன். நாமக்கல் மாவட்டம் முத்துக்காப்பட்டி கிராமத்துக்கு அருகில் தத்தகிரி இருக்கு. நாமக்கல்லில் இருந்து 10 கி.மீ.,. சன்னியாசி கரடு எனப்படும் இது சித்தர்கள் தவம் செய்த மலை. பழமையான கோயிலான இங்கு சுயம்பிரகாச அவதுாத சரஸ்வதி சுவாமிகள் சமாதி அடைஞ்சாரு”
“பேரே வித்தியாசமா இருக்கே! பாட்டி”
“யோக பாரம்பரியத்தில் 'தத்த' பாரம்பரியம் தனித்துவம் மிக்கது. இதன் ஆதி குருநாதர் தத்தாத்ரேயர். இந்த பாரம்பரியம் தென்னகத்தில் வளர காரணமாக இருந்தவர் மகாயோகி சுயபிரகாச சுவாமிகள். அவரே தத்தகிரியில் சமாதி அடைந்தார்.
திருக்கோவிலுாருக்கு அருகில் உள்ள கல்பட்டில் 1871ல் பிறந்தார். அரசு பணியாளரான இவர் துறவில் ஈடுபட்டு ஜட்ஜ் சுவாமிகளிடம் சீடர் ஆனார். மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், விருதாச்சலம், சிதம்பரம், திருவானைக்காவல் கோயில்களுக்குச் சென்று இறுதியாக திருவண்ணாமலையில் ரமணரை சந்தித்தார். 'கிரம்ப்ஸ் பிரம் ஹிஸ் டேபிள்' (CRUMBS FROM HIS TABLE) என்ற நுாலில், 'சுயபிரகாச சுவாமிகள் ஒரு வைராக்கிய புருஷர்' என ரமணர் குறிப்பிட்டதாக குறிப்பு உள்ளது.
திருவண்ணாமலையில் இவர் இருப்பதை அறிந்த உறவினர்கள் அடிக்கடி வந்தாங்க. அதை விரும்பாத சுவாமிகள் அங்கிருந்து சேந்தமங்கலத்திற்கு சென்றார்”
“இவரோட வரலாறு பெரிசா இருக்கே பாட்டி”
''ஆமாம், சேந்தமங்கலத்தில் இரண்டு ஆண்டுகள் தங்கி அற்புதம் பல நிகழ்த்தினார். பிறகு காசி, ஹரித்வார், பத்ரிநாத், அயோத்தி, இமயமலை என யாத்திரை சென்றார். குஜராத்தில் உள்ள கிரிமினார் என்னும் மலை சுவாமிகளை ஈர்த்தது. அங்குள்ள குகையில் பகவான் தத்தாத்ரேயர் நேரில் காட்சியளித்து, தனக்கு தென்னகத்தில் கோயில் கட்டுமாறு உத்தரவிட்டார். அதன்படி திருப்பணி செய்து தத்தகிரியில் 1931ல் கும்பாபிஷேகம் நடத்தினார். மண்ணில் பிறந்ததற்கான பணி முடிந்ததை உணர்ந்த சுயபிரகாச சுவாமிகள் டிச. 29, 1948ல் தத்தகிரியில் சமாதி அடைந்தார்.
அதன்பின் சீடரான சாந்தானந்த சுவாமிகள் இங்கு முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து 1983ல் கும்பாபிஷேகம் நடத்தினார். இதன் பின் கோயில் பிரபலம் அடைந்தது. கந்தகிரி, தத்தகிரி இரண்டையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்” என்றார் பாட்டி.
“இப்படி மகான்கள் இறப்பைப் பத்தி கவலைப்படாமலே சமாதி அடையறாங்க. ஆனா சாதாரணமான நமக்கு வாழ்வின் முடிவை நினைச்சாலே கவலையா இருக்கே பாட்டி”
“எம பயம் விலக கந்தர் அலங்கார பாட்டை பாடு
ஓலையும் துாதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக்
காலையும் மாலையும் முன்னிற்குமே
கந்தவேள் மருங்கில்
சேலையும் கட்டிய சீராவும் கையில்
சிவந்த செச்சை
மாலையும் சேவல் பதாகையும்
தோகையும் வாகையுமே
இந்த பாடலை தினம் பாடுறேன் யுகா...”
“சூப்பர் பாட்டி. உன்கிட்ட கத்துக்க நிறைய விஷயம் இருக்கு”
“நான் என்ன சாதாரண பிறவி. நம் மண்ணில் வாழ்ந்த மகான்களிடம் கத்துக்க எவ்வளவோ இருக்கு. கந்தகுரு கவசம் பத்தி சொன்னேனே... இப்போ சண்முக கவசம் பாடிய பாம்பன் சுவாமிகள் பத்தி தெரிஞ்சுக்கோ. அவருக்கு 13 வயசு இருக்கும் போது ஒரு நாள் அதிகாலையில் அவரது உதடுகள், 'கங்கையைச் சடையிற் பரித்து' என்னும் மங்கல வரியை உச்சரித்தது.
இதை தொடர்ந்து தினமும் ஒரு பாடலைப் பாடும் வழக்கத்தை மேற்கொண்டார். வேதம், ஆகமம், உபநிடதம், இதிகாசம், புராணம் என அனைத்தையும் உணர்ந்து ஞான ஆற்றல் பெருகியது.
பிறப்பன் வலசையில் தவமிருந்த காலத்தில் முருகன் அளித்த உபதேச பொக்கிஷமே தகராலய ரகசியம் என்னும் நுால். ஒருமுறை சுவாமிகளின் கால் மீது குதிரை வண்டியின் சக்கரம் ஏறவே கால் முறிந்தது.
சண்முக கவசம் என்னும் மந்திர நுாலை பாராயணம் செய்யவே முருகன் அருளால் ஒடிந்த எலும்பு ஒட்டிக் கொண்டது. இப்படி வாழ்வில் முழுவதும் 6666 பாடல்களை பாடினார் சுவாமிகள். இப்படிப்பட்ட மகான்களின் பாடல்களை பாடினால் பிறவிக்கடலை நாம் சுலபமாக கடக்கலாம்”
“நல்லது பாட்டி. உன்னிடம் சொல்ல மறந்துட்டேன். அம்மாவும், அப்பாவும் அடுத்த வாரம் மலேசியாவில் இருந்து வர்றாங்க”
“புள்ளைய பார்த்து எத்தனை நாளாச்சு... இனிப்பான செய்தி சொல்லியிருக்கே. வீடே களை கட்ட போகுதுன்னு சொல்லு” என மகிழ்ச்சி கடலில் மூழ்கினார் பாட்டி.
-இன்னும் இனிக்கும்
பவித்ரா நந்தகுமார்
94430 06882