
புலிக்கால் முனிவர் எனப்படும் வியாக்ரபாதரின் மகன் உபமன்யு. சிறுவனான இவன் அயோத தவுமியர் என்னும் குருநாதரின் குருகுலத்தில் படித்தான். ஒருநாள் குருவின் கட்டளைப்படி பசுக்களை மேய்க்கச் சென்றான். இரவில் சக மாணவர்களுடன் சேர்ந்து படித்தான். வகுப்பு முடிந்ததும் மாணவர்களுக்கு உணவளிக்கப்பட்டது.
உபமன்யுவுக்கு மட்டும் உணவளிக்க மறுத்தார் சமையல்காரர். காரணம் கேட்ட போது 'குருநாதரின் கட்டளை' என பதில் வந்தது. உபமன்யு பசியுடன் படுத்தான். மறுநாள் காலையும் உணவு தரவில்லை. பகலில் மாடுகளை மேய்க்கச் சென்றவன் மாலையில் குருகுலம் திரும்பினான்.
'' சாப்பிடாவிட்டாலும் இயல்பாக இருக்கிறாயே எப்படி?” கேட்டார் குரு.
“குருநாதா... ஊருக்குள் பிச்சை எடுத்து சாப்பிட்டேன்” என்றான்.
“ பிச்சை எடுத்தும் சாப்பிடக் கூடாது” என உத்தரவிட்டார் குரு. அப்படியே செய்தான். ஆனாலும் அவன் முகத்தில் வாட்டம் இல்லை.
''உன்னைப் பார்த்தால் பசி இருப்பதாகவே தெரியவில்லையே''என்றார் குரு.
“குருநாதா! தாய்ப்பசுவிடம் கன்று பால் குடித்த பிறகு சிறிது பால் கறந்து பசியாறினேன்” என்றான் உபமன்யு.
“பசும்பால் மட்டுமின்றி எந்த உணவையும் கையால் தொடுவது கூடாது. பட்டினியாக கிடந்து மாடும் மேய்க்க வேண்டும்; வேதமும் கற்க வேண்டும்'' என உத்தரவிட்டார் குரு.
செய்வதறியாத உபமன்யு, 'உணவைத் தானே உண்ணக் கூடாது என்கிறார் குருநாதர். எருக்கம்பாலைக் குடித்தால் அது உணவு வகையில் வராதே' எனக் கருதினான். எருக்கம்பாலைக் குடித்த அவனுக்கு கண் பார்வை போனது. மேய்ச்சலுக்குப் போன இடத்தில் தடுமாறி பாழும் கிணற்றுக்குள் விழுந்தான். அதில் இருந்த மரக்கிளை ஒன்றைப் பிடித்தபடி தொங்கினான். சீடனைத் தேடி காட்டுக்கு வந்தார் தவுமியர். கிணற்றுக்குள் அவனது குரல் கேட்ட அவர், ''உபமன்யு! நான் சொல்லும் மந்திரத்தை திரும்பச் சொல், தேவலோக வைத்தியர்களான அசுவினி தேவர்களின் அருளால் உன் பார்வை கிடைக்கும்'' என்றார். உபமன்யுவும் அவ்வாறே சொல்ல பார்வை பெற்றான்.
'' உன் குருபக்தியைச் சோதிக்கவே கடுமையாக நடந்து கொண்டேன். அத்தனை சோதனையையும் முறியடித்து சாதனை படைத்த நீ முக்காலம் உணர்ந்த ஞானியாக திகழ்வாய்'' என வாழ்த்தினார்.