
காஞ்சி மஹாபெரியவர் சின்ன காஞ்சிபுரத்தில் முகாமிட்டிருந்தார்.தினமும் மாடவீதியை முழுவதும் சுற்றி வந்து வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு செல்வார்.
பனி விழும் அதிகாலையில் வெறும் காலுடன் சுற்றுவது கடினம். அப்படி ஒருநாள் கோயில் தரிசனம் முடித்து விட்டு விஷ்ணு சகஸ்ரநாமத்தை சொல்லியபடி பக்தர்களுடன் வந்தார்.
இருபுறமும் பார்த்துக் கொண்டே சென்ற அவர், திடீரென நின்றார். இடதுபுறம் இருந்த வீட்டின் முன் சிறுமி கோலமிடுவதைக் கண்டார்.
குனிந்தபடி கோலமிட்ட அவளும் நிமிர்ந்து பார்த்தாள். ஆச்சரியத்துடன், 'பெரியவா... பெரியவா...' என கையெடுத்துக் கும்பிட்டாள். புன்னகையுடன் ஆசியளித்த மஹாபெரியவர், அவள் இட்ட கோலத்தை ரசித்தார். 'கோலம் ரொம்ப நன்னா இருக்கே...' என பாராட்டினார்.
சிறுமிக்கோ சந்தோஷம்! புன்சிரிப்புடன் இருந்த அவளிடம், 'இனிமே அரிசி மாவுல கோலம் போடு. அப்பத்தான் ஈ, எறும்பு அதை சாப்பிடும். அது உன்னை வாழ்த்த வேண்டாமா... இந்த சுண்ணாம்புக் கல்லு மாவுல கோலம் போடாத... என்ன சொல்றது புரியறதா...' எனக் கேட்டார்.
'ஆகட்டும் பெரியவா' என தலையாட்டியபடி மீண்டும் வணங்கினாள் அந்த சிறுமி.
சுவாமிகளின் அறிவுரை எல்லா பெண்களுக்கும் தான்...
நினைத்தது நடக்க...
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய துார்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
பக்தி இல்லாதவரால் அடைய முடியாதவனே. தாயின் கருவில் பிறந்தால், பக்தனை காக்க தாமதமாகும் என்பதால் துாணில் வந்தவனே. லட்சுமி நரசிம்மனே உன்னை சரணடைகிறேன்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!! -நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com

