
நவ.14 - திருமூல நாயனார் குருபூஜை
நாயன்மார்களில் ஒருவராகவும், சித்தர்களில் ஒருவராகவும் போற்றப்படுபவர் திருமூலர். இவர் ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார். இந்நாள் இந்த வருடம் நவ.14,2024 அன்று வருகிறது. இதையொட்டி அவரது நெறியை அறிந்து கொள்வோம்.
கயிலாயத்தில் சிவபெருமானிடம் உபதேசம் பெற்றவர் நந்தீஸ்வரர். இவரிடம் இருந்து உபதேசம் வாங்கினார் சுந்தரநாதர். இவர் பூமிக்கு இறங்கி வந்ததும் 'திருமூலர்' என்ற பெயர் கிடைத்தது. எப்படி தெரியுமா...
ஒருமுறை பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய முனிவரைத் தரிசிக்க வந்தார். அப்போது வழியில் திருவாவடுதுறைக்கு அருகில் சாத்தனுாரில் பசுமாடுகள் மேய்க்கும் 'மூலன்' என்பவர் இறந்து கிடப்பதை பார்த்தார். அதனால் பசுமாடுகள் கலங்கி நிற்பதை கண்டு கலங்கினார் சுந்தரநாதர். உடனே 'பரகாயப்பிரவேசம்' செய்தார். கூடுவிட்டு கூடு பாய்தல் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம் இல்லையா. அதுதுான். இறந்து கிடந்த மூலனின் உடம்பில் தன் உயிரை செலுத்தினார் சுந்தரநாதர். இவர் உயிர்பெற்று வந்ததை பார்த்ததும் பசுக்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டன. பின் தன் உடலிற்குள் புகுவோம் என நினைத்தபோது அவரது உடல் காணவில்லை. இது சிவபெருமானின் விளையாட்டு என்பதை உணர்ந்து அங்கிருந்த அரசமரத்தின் கீழ் தவம் செய்ய ஆரம்பித்தார். ஒரு வருடம் தவமிருப்பார். இதன் மூலம் பெற்ற அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடுவார். இப்படியாக மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்து மூவாயிரம் பாடல்களை பாடினார். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு மந்திரமாக இருந்ததால் இதற்கு 'திருமந்திரம்' எனப் பெயர் வந்தது. இப்பாடல்களே பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக உள்ளது. இதில் இருந்து ஒன்றை பார்ப்போம்.
கடவுளை அறிவதற்கும் அடைவதற்கும் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அக வழிபாடு, மற்றொன்று புற வழிபாடு. இதில் கோயிலுக்குச் செல்வது, பூஜை செய்வது, மந்திரம் சொல்வது, நைவேத்யம் படைப்பது எல்லாம் புறவழிபாடு. இங்கு முக்கியமாக ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். முதலில் அகமாகிய நம் மனதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதாவது பொறாமை, கோபம், காமம் போன்ற தீய சிந்தனைகளை விட்டொழித்து மனதை அன்பால் நிரப்ப வேண்டும். அப்போதுதான் கடவுளின் அருளை பெற முடியும்.
அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றிஎன்போன் மணியினை எய்த ஒண்ணாதே
- திருமந்திரம் 272
உண்மையான அன்பு மனம் குழைந்து அவனை சரணடைவோம். அப்போதுதான் ஒப்பற்ற மணியாகிய அவனது திருவருள் கிடைக்கும். எனவே உள்ளத்தில் அன்பு இல்லாமல் கூடைகூடையாய் கோயிலுக்கு லட்சார்ச்சனை செய்தாலும் பலன் கிடைக்காது. உள்ளன்போடு கடவுளை வணங்குங்கள்.