யாராவது தவறு செய்தால் அவரை கோபத்தில் மடையன் என திட்டுவதுண்டு. உண்மையில் மடையன் என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா... மடை என்பது குளம், ஏரி, கண்மாய்களில் உள்ள நீரை விளைநிலங்களின் பாசனத்திற்கு திருப்பி விடுவதற்காக நிறுவப்பட்ட கதவு. இது மரம் அல்லது இரும்பால் செய்யப்பட்டிருக்கும். கைகளால் இவற்றைத் திறக்கவும் அல்லது மூடவும் இயலும்.
மழைக்காலத்தில் ஏரி, குளம் நிரம்பினால் ஊருக்குள் வெள்ளம் வருவதை தடுக்க மடை பயன்படும். அதற்குள் மூழ்கினால்தான் இதை திறக்க முடியும். இப்படி மக்களுக்கு உதவி செய்ய துன்பத்தை தாங்கிக் கொண்டு இப்பணியை செய்வோர் மடையன் என சொல்வதுண்டு. அதைப்போல் கோயில் பிரசாதங்கள் செய்யும் இடத்திற்கு மடப்பள்ளி என்று பெயர்.
இதற்கு காரணம் ஐம்புலன்களை அடக்கி கடவுளுக்கு சேவை செய்யும் பணியில் இவர்கள் ஈடுபடுவதால் மடையர்(பரிசாரகர்) என சொல்வர். இப்பணியை செய்து கோயில் தலபுராணம், பாடல்கள் எழுதியவர்களும் உண்டு.
அவர்களில் திருச்செந்துார் முருகன் கோயிலில் பணியாற்றிய வென்றிமலைக்கவிராயரும், ஸ்ரீரங்கம் கோயிலில் பணியாற்றிய காளமேகப்புலவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இப்ப சொல்லுங்க... உங்களை யாராவது மடையன்னு சொன்ன வருத்தப்படுவீங்களா...