
நவ.30, 2024 - கார்த்திகை அமாவாசை
மயிலாடு துறை மாவட்டம் திருவிசநல்லுார் ஸ்ரீதர ஐயாவாள் வீட்டுக் கிணற்றில் கார்த்திகை அமாவாசையன்று (நவ.30,2024) கங்கை நதி பொங்கி வரும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் விழாவாக நடக்கிறது.
கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் இவர். பதவி, சொத்துக்களைத் துறந்து விட்டு திருவிசநல்லுாரில் குடியேறினார். அருகில் உள்ள திருவிடைமருதுார் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தினமும் அர்த்த ஜாம பூஜையை தரிசித்து வந்தார்.
ஒருமுறை இவரது தந்தையாருக்கு திதி கொடுப்பதற்காக உணவு தயாரித்து விட்டு காவிரியில் நீராடச் சென்றார். வழியில் ஒருவர் அவரிடம், 'பசிக்கிறது' என சொன்னார். அவரை அழைத்து வந்து உணவு கொடுத்தார்.
திதி கொடுப்பவர் தான் அந்த உணவை சாப்பிட வேண்டும். மீதம் இருந்தால் பசுவிற்கு கொடுக்கலாம். ஆனால் ஐயாவாள் அப்படிசெய்யவில்லை. செய்த தவறுக்கு பரிகாரமாக 'காசிக்குச் சென்று கங்கையில் நீராடி வந்த பின்னரே, திதி கொடுக்க முடியும்' என பண்டிதர்கள் அவரிடம் தெரிவித்தனர். காசிக்கு சென்று உடனே திரும்ப முடியுமா என வருந்திய அவர், கங்கையை நினைத்து 'கங்காஷ்டகம்' பாடினார்.
வந்தே வாராணஸீவாஸாம்
வந்தே பதித பாவனீம்!
வந்தே த்ரிபதகாம் கங்காம்
வந்தே த்வாம் கூபஸம்பவாம்!!
என மேலே உள்ள பாடலை பாடிய போது, அவரது வீட்டில் உள்ள கிணற்றில் கங்கை நதி பொங்கியது. 'காசிக்கு செல்' என சொல்லிய பண்டிதர்கள் இதை பார்த்த உடன் மன்னிப்பு கேட்டனர். பின்னர் அவர்களும் அங்கேயே நீராடினார்கள். ஒவ்வொரு கார்த்திகை அமாவாசையன்றும் அந்தக்கிணற்றுக்கு பூஜை நடக்கும். அதன்பின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீராடுவர்.