
சிவனடியார் ஒருவர் 'பொன்னம்பலம்' என சொல்லியபடி இலங்கையில் உள்ள சிவத்தலங்களை தரிசித்து வந்தார். அங்கிருந்த புத்தபிட்சுகள் பொறாமையால் அவரைப் பற்றி மன்னரிடம் புகார் செய்தனர். சிவனடியாரை அழைத்து, ''நீங்கள் பொன்னம்பலம் எனச் சொல்கிறீர்களே. உங்கள் சிவபெருமான் பொன் தருவாரா'' எனக் கேட்டார் மன்னர்.
அதற்கு அடியவர், '' பொன்னை விட சிறந்த ஞானத்தை தருபவர் அவர்'' என்றார். இதற்கு ''புத்தரே மேலான கடவுள்'' என பிட்சுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சிவத்தலமான சிதம்பரத்தில் புத்த மதத்தை பரப்ப பிட்சுகள் வந்தனர். அவர்களுடன் பேசும் திறனற்ற தன் மகளுடன் இலங்கையின் மன்னரும் வந்தார்.
அப்போது அங்கு சிவனடியான மாணிக்க வாசகர் இருந்தார். மதத்தை பரப்ப வந்த பிட்சுகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பிட்சுகள் பேசும் சக்தியை இழந்தனர்.
அப்போது, 'என் மகளை பேச வைத்தால் நாங்கள் அனைவரும் சிவனின் அடிமையாக மாறுகிறோம்'' என சவால் விட்டார். மாணிக்கவாசகரும் அதை ஏற்று 'திருச்சாழல்' என்னும் பாடல் பாடினார். என்ன அதிசயம்... மன்னரின் மகளுடன் பிட்சுகளும் பேசினர். உடனே அனைவரும் சிவபக்தராக மாறினர்.
திருச்சாழல் பாடலைப் பாடினால் பேச்சாளராக திகழலாம்.