
ரமண மகரிஷி திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது வெளிநாட்டுக்காரர் ஒருவர் தரையில் உட்கார முயற்சித்தார். ஆனால் காலை மடக்க முடியவில்லை. எனவே ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து அதில் உட்கார்ந்தார். உபதேசம் செய்யும் குருநாதர் கீழேயும், பக்தர்கள் ஆசனத்திலும் உட்காரக் கூடாது என்பதை வெளிநாட்டுக்காரர் அறியவில்லை.
அதைக் கண்டதும் ஆஸ்ரம நிர்வாகி கோபமுற்று, அவரைக் கீழே உட்காரும்படி கூறினார். அவரோ தன் இயலாமையைச் சொல்லி வருந்தினார். அப்படியானால் இங்கிருந்து வெளியேறுங்கள் என தெரிவித்தார். வெளிநாட்டுக்காரரும் வருத்தமுடன் சென்றார். அப்போது ரமணர் ''என்னப்பா ஆச்சு?'' எனக் கேட்டார்.
''ஒண்ணுமில்லை சுவாமி! இவரால் கீழே உட்கார முடியாதாம். அதனால வெளியே போகச் சொல்லி விட்டேன்'' என்றார்.
ரமணர் அங்கிருந்த மரத்தை அண்ணாந்துவிட்டு, ''இதோ இந்த மரத்து மேல குரங்கு உட்கார்ந்திருக்கு பார்! அதுவும் என்னை விட உசரமான இடத்தில தான் உட்கார்ந்திருக்கு! அதையும் வெளியில் அனுப்புவோமா?'' என்றார்.
அமைதியுடன் நின்றார் நிர்வாகி. ''இதோ பார்! உலகில் உசத்தி, தாழ்ச்சி என்று யாருமில்லை. அவரைக் கூப்பிட்டு உட்காரச் சொல்'' என்றார். குரங்கால் நல்ல புத்தி கிடைத்ததை எண்ணி நிர்வாகி அமைதியானார்.