ADDED : டிச 06, 2024 07:31 AM

எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ்
நாடக மேடையில் வேலேந்திய முருகனும், நாணம் பொங்க வள்ளியும் நின்றிருந்தனர்.
அதில் முருகன் உரத்த குரலில் ''கொக்கு பறக்குதடி பாப்பா, நீயும் கோபமின்றி கூப்பிடடி பாப்பா, கொக்கென்றால் கொக்கு, அது நம்மைக் கொல்ல வந்த கொக்கு, வர்த்தகம் செய்ய வந்த கொக்கு, நமது வாழ்க்கையைக் கெடுக்க வந்த கொக்கு, அக்கரைச் சீமை விட்டு வந்து இங்கே கொள்ளை அடிக்குதடி பாப்பா...'' எனப் பாடினார் முருகன் வேடத்தில் நின்ற சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ்.
இப்படி நுாறாண்டுக்கு முன்பே புராண, இதிகாச நாடகங்களில் சுதந்திர வேட்கையை மக்கள் மத்தியில் பரப்பியவர் இவர்.
ஆங்கிலேய அரசுக்கு எதிராக செயல்பட்டதைக் கண்டித்து போலீசார் இவரைக் கைது செய்த போது ''சுதந்திர வேட்கை பாடல்களை நான் எங்கே பாடினேன்? முருகப்பெருமான் அல்லவா பாடினார்? போய் அவரைக் கைது செய்யுங்கள்'' எனக் கிண்டல் செய்தார் தாஸ்.
1886, ஜூன் 16ல் சிவகாசியில் சுப்ரமணிய பண்டிதர், ஞானாம்பாள் தம்பதிக்கு பிறந்தவர் விஸ்வநாததாஸ். இயற்பெயர் தாசரிதாஸ். குரல் வளமும், நடிப்புத் திறனும் கொண்டிருந்தார்.
ஒருசமயம் மகாத்மா காந்தி துாத்துக்குடிக்கு வந்த போது தாஸைப் பற்றிக் கேள்விப்பட்டு பார்க்க வரவழைத்தார். அப்போது இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அர்ப்பணித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். தீரர் சத்திய மூர்த்தி, வ.உ.சி,, காமராஜர் போன்ற தலைவர்களுடன் பழகினார். இவரது கலைத் திறமையை அறிந்த சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
புராண, சமூக நாடகங்களில் சுதந்திர வேட்கைப் பாடல்களை பாடி விடுவார். இதை அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் தொடர்ந்து பலமுறை கைது செய்தனர். ஆனால் சிறையில் இருந்து வந்த பின் தாஸ், தொடர்ந்து தேசிய சுதந்திர உணர்வை மக்களிடையே பரப்புவதை குறிக்கோளாக கொண்டார். சண்முகானந்தம் குரூப் என்ற பெயரில் நாடக நிறுவனம் ஆரம்பித்து, தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கைக்குச் சென்று நாடகம் நடத்தி விடுதலை தாகத்தை ஏற்படுத்தினார்.
ஒருசமயம் நாடகத்தில் இவர், 'போலீஸ் புலிக் கூட்டம் நம்மேல் போட்டு வருகிறது கண்ணோட்டம்' என பாடியவுடனேயே மேடை மீது தாவி ஏறியது போலீஸ். அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
இவர் சிறையில் இருந்த நாட்களில் அவருடைய மூத்த மகன் சுப்ரமணிய தாஸ் (அப்போதுதான் திருமணமானவர்) தந்தையின் நாடகங்களை நடத்தி வந்தார். இவரையும் கைது செய்து, '' நீ புதிதாகத் திருமணமானவன், தேச விடுதலைப் பாடல்களைப் பாட மாட்டேன் என எழுதிக் கொடுத்தால் உன்னை விடுவிக்கிறோம்'' என மிரட்டினர்.
இதை தந்தையிடம் தெரிவித்த போது, ''மகனே நீ மன்னிப்பு கேட்டு, விடுதலையாவதை உன் மனைவி விரும்ப மாட்டாள். அவள் கேலி செய்யும் நிலையில் வாழ்வதைவிட, சிறையில் கிடப்பதே சுதந்திரப் போராட்ட வீரனுக்கு அழகு'' என அறிவுறுத்தினார் தாஸ். மகனும் தண்டனையை ஏற்றார். 29 முறை சிறைக்குச் சென்ற விஸ்வநாத தாஸ் மூட்டி வைத்த சுதந்திர வேட்கையால் எங்கும் ஆங்கிலேயருக்கான போராட்டமாக வெளிப்பட்டது.
அந்தக் கனல் தணிந்துவிடாமல் இருக்க ரசிகர்களை இணைத்து மன்றங்களை உருவாக்கினார். மன்ற உறுப்பினர்கள் தன்னையும், தன் நாடகங்களையும் கொண்டாடுவதை விட்டு விட்டு, தன் கருத்துகளை மேற்கொண்டு, சுதந்திரம் என்ற லட்சியத்தை அடைய வேண்டும் என வலியுறுத்தினார்.
டிச.31, 1940 அன்று வள்ளி கல்யாணம் நாடகம் நடந்தது. அரங்கிற்குள் போலீஸ்காரர்கள் தாஸை கைது செய்யக் காத்திருந்தனர். திரை விலகியது. பார்வையாளர்களின் ஆரவாரத்திற்கு இடையே காட்சிகள் நகர்ந்தன.
ஒரு காட்சியில் மயில் மீது விஸ்வநாத தாஸ் அமர்ந்தபடி உரத்த குரலில் கணீரென, 'கொக்கு பறக்குதடி பாப்பா, வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா' என உணர்ச்சி ததும்பப் பாடினார். உடனே மேடையேறிய போலீஸ் திகைத்தது. ஆமாம், அந்த மயில் மீது அமர்ந்திருந்த தாஸ் எழுந்திருக்கவில்லை. அவரது உயிர் முருகப்பெருமானுடன் கலந்திருந்தது.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695