
திருச்சி மாவட்டம் திருவானைக்காவில் உள்ளது ஜம்புகேஸ்வரர் கோயில். சக்தி பீடங்களில் ஒன்றான இங்கு அகிலத்தை காப்பவளாக அம்பிகை அருள்வதால் அகிலாண்டேஸ்வரி எனப்படுகிறாள். இவள் காலையில் மகாலட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் இருக்கிறாள்.
கல்வியில் சிறக்க அம்மனுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர். எதற்காக தெரியுமா...
வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில் வல்லமை பெற அம்மனை வேண்டினார்.
அவருக்கு அருள்வதற்காக பெண் வடிவில் தாம்பூலம் போட்டபடி அம்மன் கோயிலுக்குள் நுழைந்தாள். வேதியரிடம், ''நான் வெற்றிலை சாப்பிட்டுள்ளேன். கோயிலுக்குள் உமிழ்வது தவறு. எனவே உம் வாயை திறக்கிறீரா... உமிழ்கிறேன்'' என்றாள். கோபப்பட்ட அவர் அந்தப் பெண்ணை விரட்டினார். அந்நேரத்தில் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார் பக்தரான வரதர். அவர் கோயிலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என விரும்பி, ''பெண்ணே! கோயில் சுத்தமாக இருக்க வேண்டும்.
இந்த ஒருமுறை என் வாயில் உமிழ்ந்து கொள். இனி இந்த தவறை செய்யாதே'' எனக் கேட்டுக்கொண்டார்.
அவளும் அப்படியே செய்ய, அவர் பிரபலமான புலவராக மாறினார். அவரே சிலேடை பாடுவதில் வல்லவரான கவி காளமேகப்புலவர். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு தாம்பூலம் படைத்து பெற்றோர் இங்கு வழிபடுகின்றனர்.