ADDED : ஜன 16, 2025 02:37 PM

மகரிஷி மேதாவி சிறந்த விஷ்ணுபக்தராக இருந்தார். மகாலட்சுமி தன் மகளாக பிறக்க வேண்டும் என தவமிருந்தார். அதைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி ஒரு பங்குனி உத்திரத்தன்று மகளாக அவதரித்தாள்.
அவளுக்கு வஞ்சுளாதேவி எனப் பெயரிட்டு வளர்த்தார் மகரிஷி. திருமண வயதை அடைந்ததும் பெண் கேட்டு வந்தார் மகாவிஷ்ணு. அவரிடம், 'என் மகளைத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் அவளின் சொல் கேட்டே நடக்க வேண்டும். அவளே அனைத்திலும் முன்நிற்பாள்' என நிபந்தனை விதித்தார் மகரிஷி. இதற்கு மகாவிஷ்ணுவும் சம்மதிக்க கருடன் முன்னிலையில் திருமணம் நடந்தது.
அப்போது 'என் மனைவியின் சொல் கேட்பவனாக இங்கிருப்பதால் பக்தர்கள் கேட்கும் வரத்தை நீயே வழங்கு' என கருடனுக்கு கட்டளையிட்டார். இதனால் கருடன் சன்னதி இங்கு பிரதானமாக திகழ்கிறது. தாயாரின் பெயரால் இத்தலம் 'நாச்சியார் கோயில்' எனப்பட்டது.
கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ துாரத்தில் உள்ளது. பெருமாளின் திருநாமம் சீனிவாசப்பெருமாள். தாயாரின் திருநாமம் வஞ்சுளாதேவி. நிர்வாகம் தன் வசம் இருப்பதை உணர்த்தும் விதமாக சாவிக்கொத்துடன் தாயார் இருக்கிறார். இவளை தரிசித்தால் நிர்வாகத்திறன் அதிகரிக்கும்.