
ஜன.19 - சண்டிகேஸ்வரர் குருபூஜை
கோயிலில் சிவனை தரிசித்த பின் சுற்றி வரும் போது மழுவுடன் இருப்பவரை பார்த்திருப்பீர்கள். அவர்தான் நாயன்மார்களில் ஒருவரான சண்டிகேஸ்வரர். சங்கடம் போக்கும் இவரது குருபூஜை தை மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று நடக்கிறது.
சோழ நாட்டில் சேய்ஞ்ஞலுார் என்னும் ஊரைச் சேர்ந்த அந்தணர் எச்சதத்தன். இவரது மகன் விசாரசர்மன். வேதம், ஆகமத்தைக் கற்ற இவன் தினமும் சிவபூஜை செய்தான். ஒருநாள் பசுக்களை மேய்ப்பவன் அவற்றை அடித்து துன்புறுத்தினான்.
இதைப் பார்த்த விசாரசர்மன் கோபத்துடன், தானே பசுக்களை மேய்த்துவிட்டு வீட்டுக்கு கூட்டி வருவதாக வாக்களித்தான். அதன்படி நடக்கவே பசுக்கள் இவனிடம் இணக்கமாக இருந்தன. மேய்க்கும்போது அங்குள்ள மரத்தடியில் மணலைக் குவித்து சிவலிங்கம் அமைத்து பாலை அபிஷேகம் செய்வான்.
மாலையில் வீடு திரும்பியதும் வழக்கத்துக்கும் அதிகமாக பசுக்கள் பாலைச் சுரந்தன. இவனது செயலை பார்த்த சிலர் வேள்விக்கு பயன்படுத்தும் பாலை வீணாக்குவதாக விசாரசர்மனின் தந்தையிடம் கூறினர். அவரும் மறைந்து நின்று மகன் செய்யும் சிவபூஜையை பார்த்தார். உடனே கோபமுற்றவர் மகனை தடியால் அடித்தார்.
விசாரசர்மருக்கு உடம்பில் அடிவிழுவது கூட தெரியவில்லை. இதனால் மேலும் கோபம் அடைந்த தந்தை பால் இருந்த பாத்திரத்தை காலால் உதைத்தார். நெஞ்சக்கோயிலில் வைத்து வழிபடும் ஈசனுக்கா... இந்த நிலை ஏற்பட வேண்டும். தந்தையின் மீது அருகில் இருந்த குச்சியை எடுத்து வீசினான் விசாரசர்மன். அது மழு என்னும் ஆயுதமாக மாறி அவரது காலை வெட்டியது.
விசாரசர்மனின் பக்தியில் நெகிழ்ந்தார் சிவன். உடனே பார்வதியுடன் அங்கு காட்சியளித்தார். எச்சதத்தனின் கால்களை குணப்படுத்தினார். விசாரசருமனுக்கு சிவகணங்களை நிர்வகிக்கும் 'சண்டேசர்' என்னும் பதவி வழங்கினார். அன்றாடம் கோயிலில் தனக்கு அணிவிக்கும் மாலைகள், நைவேத்யங்களை சண்டிகேஸ்வரருக்கும் வழங்க உத்தரவிட்டார்.
அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு
அதிபன் ஆக்கி அனைத்து நாம்
உண்ட கலமும் உடுப்பனவும்
சூடுவனவும் உனக்காகச்
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று
அங்கு அவர் பொன் தட முடிக்குத்
துண்ட மதிசேர் சடைக் கொன்றை மாலை
வாங்கிச் சூட்டினார்
என்கிறது சேக்கிழாரின் பெரியபுராணம்.
பிரகாரத்தில் பார்க்கும் சண்டிகேஸ்வரர் எப்போதும் சிவ சிந்தனையுடன் தியானத்தில் இருப்பார். இவரிடம் கைதட்டி வணங்குவது, கைகளில் சொடக்கு போடுவது போன்ற செயல்களை செய்வது கூடாது. மீறினால் பாவத்திற்கு ஆளாக நேரும். சண்டேஸ்வரர் குருபூஜையன்று அவர் அவதரித்த தஞ்சாவூர் மாவட்டம் சேங்கனுார் சிவன் கோயிலில் விசேஷ பூஜை நடக்கிறது.