
ஜன.29 - தை அமாவாசை
தஞ்சாவூரை சரபோஜி மன்னர் ஆட்சி செய்த காலம் அது. சுப்பிரமணிய பட்டர் தினமும் திருக்கடையூர் அபிராமியை வழிபடுவார். ஒருநாள் அம்மனின் முகத்தை பார்த்து மெய் மறந்த நிலையில் இருந்தார். அப்போது சரபோஜி மன்னர் கோயிலுக்கு வந்தார். ஆனால் அது பட்டருக்கு தெரியவில்லை.
ஏற்கனவே பட்டர் மீது பொறாமை கொண்டிருந்த சிலர் இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர். ''ஐயா... உங்களை இவர் அலட்சியப்படுத்துவதை பாருங்கள்' என்றனர். மன்னரும் அதை நம்பி பட்டரிடம், 'இன்று என்ன திதி' எனக் கேட்டார். அம்மனின் பிரகாசமான முகத்தைப் பட்டர் பார்த்தபடி இருந்ததால், 'இன்று பவுர்ணமி' என்றார். என்ன துரதிருஷ்டம். ஆனால் அன்றோ தை அமாவாசை.
கோபப்பட்ட மன்னர், 'இரவு நிலா வராவிட்டால் உமக்கு மரண தண்டனை' என்றார். சுயநினைவுக்கு வந்த பட்டர் தவறை உணர்ந்தார். தன்னை காப்பாற்றும்படி அம்மனை வேண்டினார்.
அமாவாசையன்று எப்படி நிலா வரும் என அங்கிருந்தவர்கள் சிரித்தனர். அபிராமி மீது அந்தாதி பாடல்களை பாடினார் பட்டர். 79வது பாடல் பாடும் போது காதில் அணிந்திருந்த தாடங்கம் என்னும் தோட்டை வானில் எறிந்தாள் அபிராமி. அது முழுநிலவாக பிரகாசித்தது. இதைப் பார்த்ததும் மன்னிப்பு கேட்டார் மன்னர்.
இந்த நிகழ்ச்சி தை அமாவாசையன்று இன்றும் விழாவாக நடக்கிறது. புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளும் அம்மனின் முன் அர்ச்சகர்கள் அந்தாதி பாடல்கள் பாடுவர். மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் பழைய தாலியை உண்டியலிலும், புதுத்தாலியை அம்மன் பாதத்தில் வைத்தும் கட்டிக் கொள்கின்றனர்.