
பக்தரான சதாசிவம் ஓய்வு பெற்ற அரசுப்பணியாளர். மனைவி பவானி. மூத்த மகன் ஹரி பட்டப்படிப்பும், இளைய மகன் ராம் பொறியியல் பட்டமும் பெற்றனர். இருவருக்கும் வெளியூரில் வேலை கிடைத்தது.
மகன்களுக்கு திருமணம் நடத்தி வைத்த பின், வேலை பார்க்கும் ஊரிலேயே அவர்கள் குடியேறினர். ஹரியை விட ஐ.டி. கம்பெனியில் வேலை செய்த ராம் அதிக சம்பளம் வாங்கினான். ஆண்டுகள் சில ஓடின. சொந்தமாக வீடு கட்ட ஆரம்பித்தான் ராம். இதையறிந்த ஹரியின் மனைவி பொறாமை கொண்டாள்.
''நாமும் எப்பத்தான் உங்க தம்பி மாதிரி வீடு கட்டப் போறோமே தெரியலே?'' என அடிக்கடி சண்டையிட ஆரம்பித்தாள். மனஉளைச்சல் அடைந்த ஹரி ஆறுதல் தேடி பெற்றோரைப் பார்க்கப் போனான். மகனைப் பார்த்த அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நலம் விசாரிக்கத் தொடங்கும் முன்பே பிரச்னையை கொட்டித் தீர்த்தான்.
''அப்பா! எனக்கு வேலை பார்க்க பிடிக்கலை! நான் எப்போ முன்னுக்கு வருவேனோ தெரியலை?'' என புலம்பினான். சமாதானப்படுத்தியும் அவன் ஏற்கவில்லை.
''டேய் ஹரி இது சின்ன பிரச்னைதான்டா! எல்லாம் சரியாயிடும். பேங்க் வரை அப்பா போயிட்டு வந்துடறேன்'' என சதாசிவம் புறப்பட்டார். அவனும் அப்பாவுடன் கிளம்பினான்.
''வெயில் இப்படி கொளுத்துதே'' என ஆதங்கப்பட்டான் ஹரி.
களைப்பு தீர ஒரு கடையில் இளநீர் வாங்கி குடித்தனர்.
சிறிது துாரம் நடந்தனர். ஓரிடத்தில் கட்டுமானப்பணி நடப்பதைக் கண்டனர். வேர்க்க விறுவிறுக்க பணியாளர்கள் வெயிலில் செங்கல் சுமந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த ஹரி பரிதாபம் கொண்டான்.
பணியாளரில் ஒருவரிடம் சதாசிவம், ''இங்கே... என்ன வேலை நடக்குது? எனக் கேட்டார்.
''பார்த்தால் உங்களுக்குத் தெரியலையா! வேகாத வெயிலில் செங்கல் சுமக்கிறேன். எல்லாம் வயிற்றுப்பாட்டுக்குத் தான்'' என சிடுசிடுத்தார்.
இதே கேள்வியை மற்றொரு இளைஞரிடம் கேட்டார்.
''என் வயதான பெற்றோரின் மருத்துவத் தேவைக்காக பாடுபடுறேன்'' என முணுமுணுத்தார்.
மற்றொருவரிடம் கேட்க, ''கோயில் கட்டும் புனிதமான பணியைச் செய்றேன்'' என்றார். ''பார்த்தாயா ஹரி! மூவரும் ஒரே பணியைச் செய்தாலும் எண்ணத்தால் மாறுபடுகின்றனர். பணம், பாசம், பக்தி என மூவரும் மூன்று விதமான பதிலைச் சொல்கிறார்கள். இதுபோலத் தான் வாழ்க்கையும்.
வெயிலில் கல்லைச் சுமந்தாலும், கடவுளுக்காக சுமப்பதாக சொல்பவரின் மகிழ்ச்சியான மனநிலையைப் பார்!
கடவுள் உனக்கு கொடுத்திருக்கும் வாழ்வை எண்ணி சந்தோஷப்படு! கடமையைச் செய்! உனக்கும் கீழே உள்ளவர் கோடி என்பதை மறக்காதே! காலம் வரும் வரை காத்திரு. அப்போது வீடு கட்டலாம். நான் சொல்வது உனக்கு மட்டுமல்ல! என் மருமகளுக்கும் சேர்த்து தான்...'' என்றார்.
இதைக் கேட்ட ஹரிக்கு மனதில் நிம்மதி நிறைந்தது.