தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/உபதேசம்

உபதேசம்

உபதேசம்


ADDED : ஜூலை 09, 2026 09:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 09:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துறவி ஒருவரிடம் அரசன், ''சுவாமி... எனக்கு மந்திர உபதேசம் செய்ய வேண்டும்'' என்றான்.

''அதற்கெல்லாம் தகுதி வேண்டுமே''

''என்ன தகுதி?''

''சொன்னால் உனக்கு புரியாது''

''இப்போதே எனக்கு உபதேசம் செய்ய முடியுமா முடியாதா?'' எனக் கேட்டான் அரசன்.

மறுத்தார் துறவி. அரண்மனைக்கு திரும்பியதும் அமைச்சரிடம், ''உடனடியாக நான் உபதேசம் பெற்றாக வேண்டும்'' என ஆவேசப்பட்டான் அரசன்.

பண்டிதர் ஒருவர் மூலம் உபதேசம் பெற ஏற்பாடு செய்தார் அமைச்சர். அப்போது துறவியும் வரவழைக்கப்பட்டார்.

''தகுதி இல்லை என மறுத்தீர்களே... நீங்கள் இல்லாவிட்டால் என்னால் உபதேசம் பெற முடியாதா'' என கர்ஜித்தான் அரசன்.

புன்னகைத்த துறவி, ''சரி... தங்களை சோதிக்க விரும்புகிறேன்; நான் சொல்வதைச் செய்வீர்களா?'' தலையசைத்தான் அரசன்.

''இப்போது சிம்மாசனத்தை விட்டு கொஞ்ச நேரம் இறங்கி வாருங்கள்'' என்றார்.

அரை மனதுடன் வந்தான். வேகமாக படியேறிய துறவி ஆசனத்தில் அமர்ந்தார்.

அதிர்ச்சியான அரசன்,''என்ன செய்கிறீர்கள்?''

''நான் சொல்வதை செய்வதாக சம்மதித்தீர்களே'' அமைதியானான் அரசன்.

''இவரை இப்போது கைது செய்யுங்கள்'' என மன்னரைக் காட்டி உத்தரவிட்டார் துறவி.

வீரர்கள் திகைத்தனர். அப்போது அரசன், ''இந்த மதிகெட்ட துறவியைக் கைது செய்யுங்கள்'' என்றதும் வீரர்கள் அவரைச் சூழ்ந்தனர்.

''என்ன அரசே... நான் சொல்லாததை செய்கிறீர்களே...'' என்றார் துறவி. வீரர்களும் விலகிச் சென்றனர்.

''இப்போது என்ன தான் சொல்கிறீர்கள்?'' எனக் கேட்டான் அரசன்.

''நடந்ததை கவனித்தீர்கள் அல்லவா... நாம் இருவர் சொன்னதும் ஒரே விஷயம் தான். ஆனால் நான் சிம்மாசனத்தில் அமர்ந்து சொன்னதை வீரர்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால் நீங்கள் சிம்மாசனத்தை விட்டு வந்து சொன்னாலும் மதிக்கின்றனர்''

மன்னனுக்குள் பொறி தட்டியது. துறவியை உற்று கவனித்தான்.

''என்ன சொல்கிறோம் என்பதை விட யார் சொல்கிறார்கள் என்பதே முக்கியம். குழப்பமாக இருக்கிறதா? உபதேசம் செய்யும் தகுதி எனக்கு இருந்தாலும் அதை பெறும் தகுதி உமக்கு இல்லை. யாரோ ஒரு பண்டிதர் மூலம் எதையோ ஒன்றை தெரிந்து கொள்வது உபதேசம் ஆகாது. பொறுத்தார் பூமியாள்வார்''

தவறை உணர்ந்து துறவியை வணங்கினான் அரசன்.

இந்த அரசனைப் போல பக்தனுக்குரிய தகுதியை வளர்க்காமல், என் விருப்பத்தை கடவுள் நிறைவேற்றவில்லை எனச் சொல்வதில் அர்த்தமில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us