தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 22

பெண்பிள்ளை ரகசியம் - 22

பெண்பிள்ளை ரகசியம் - 22


ADDED : ஜூலை 09, 2026 09:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 09:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரகவியைப் போலே

“கிருஷ்ணவேணி... தேவு மற்றறியேன் என்றேனோ மதுரகவியைப் போலே இதுதானே 21வது வாக்கியம். இதை பற்றி தானே பார்க்கிறோம்'' என்றார் அமிர்தம்.

ஆர்வமுடன் தொடங்கினார் கிருஷ்ணவேணி. 14வது ரகசியம் அவன் 'சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே' என்பதன் தொடர்ச்சி தான் இது”

''ஆனாலும் முதலில் இருந்தே சொல்லுங்க''

''திருக்குருகூர் கோயிலில் 16 ஆண்டாக புளியமரத்தின் பொந்தில் நம்மாழ்வார் தியானம் செய்தார். இந்த நிலையில் தான் மதுரகவியாழ்வார் அங்கு வந்தார். யாத்திரை சென்ற போது அயோத்தியில் தங்கியிருந்தார். அங்கு இரவில் ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்தபடி வானத்தை பார்த்தார். வானத்தில் பேரொளி தெரிந்தது. அது தெற்கில் இருந்து தான் வருகிறது என அறிந்து நடக்க ஆரம்பித்தார். ஒளி வரும் திசையை நோக்கி பல மாதம் நடந்த பின் ஒரு நாள் ஒளி மறைந்தது.

ஒளி தோன்றிய இடம் வந்து விட்டதை உணர்ந்து அங்குள்ளவர்களிடம் இங்கே ஏதாவது விசேஷம் உண்டா எனக் கேட்டார். இது திருகுருகூர். இங்கு ஒரு குழந்தை பதினாறு ஆண்டாக வாய் பேசாமல், கண் திறக்காமல், உணவு உண்ணாமல் வாழ்கிறது என்றனர். அது விசேஷமான குழந்தையாக இருக்க வேண்டும் என மனதிற்கு பட்டதால் புளிய மரத்தை தேடிப் போனார். என்ன ஆச்சரியம்! வானத்தில் பார்த்த அதே ஒளி அந்த குழந்தையின் முகத்தில் தெரிந்தது.

ஆனால் குழந்தை அசைவு இல்லாமல் இருந்தது. மவுனத்தில் இருந்த குழந்தையைக் கண்டு மதுரகவியாழ்வார் சிறு கல்லைத் துாக்கி வீசினார். உடனே குழந்தை கண் திறந்தது.

மதுரகவியாழ்வார் குழந்தையை நோக்கி 'செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்” எனக் கேட்டார். சற்றும் யோசிக்காமல், 'அத்தை தின்று அங்கே கிடக்கும்' என்றது. அது தான் அந்த குழந்தை பேசிய முதல் வாக்கியம்”

அதாவது இந்த உடம்பில் ஜீவன் என்ற சிறியது பிறந்தால் அது எங்கே இருக்கும்' என மதுரகவியாழ்வார் கேட்டதற்கு 'இந்த உடல் எடுக்க காரணம் அவரவர் செய்த வினை, அந்த வினை தீரும் வரை அந்த உடலிலேயே கிடக்க வேண்டியது தான்' என பதில் அளித்தது அந்த குழந்தை. உடனே மதுரகவியாழ்வார் அந்த குழந்தையின் ஞானத்தை வியந்து காலில் விழுந்து குருவாக ஏற்றார். அந்த குழந்தையான ஆழ்வார் தான் பின்னாளில் நம்மாழ்வார் எனப்பட்டார்.

நான்கு பிரபந்தங்களை பாடினார் நம்மாழ்வார். பெருமாளைப் பற்றி இருந்த இடத்திலிருந்தே நம்மாழ்வார் பாசுரங்களைப் பாட அதை அனைவரிடமும் கொண்டு சேர்த்தவர் மதுரகவியாழ்வார் தான்.

குருவே அனைத்தும் என சொல்லக்கூடிய தத்துவம் மதுரகவியாழ்வாரின் ஆச்சாரிய பக்தியால் ஆரம்பம் ஆனது. நம்மாழ்வாரை தரிசித்த போது அவருக்கு வயது 16. நம்மாழ்வார் இந்த உலகத்தை விட்டு புறப்பட்ட போது அவருக்கு வயது 32. அப்போது வருந்திய மதுரகவியிடம், 'கலங்காதே; தாமிரபரணி நீரை எடுத்து காய்ச்சினால் நான் வருவேன்'' என்றார்.

மதுரகவியும் அதே போல காய்ச்ச முதலில் ஒரு சிலை கிடைத்தது. மதுரகவியாழ்வாருக்கு அந்த சிலை நம்மாழ்வாரைப் போல இல்லை. மீண்டும் நம்மாழ்வாரை தியானித்தார். அப்போது, 'மீண்டும் நீர் எடுத்து காய்ச்சு' என உத்தரவிட்டார் நம்மாழ்வார். இப்படி அவர் மீண்டும் காய்ச்ச நம்மாழ்வார் போலவே சிலை கிடைத்தது. அதையே பிரதிஷ்டை செய்து திருவிழா ஏற்பாடு செய்து திருவாய் மொழியை பலருக்கும் உபதேசம் செய்து நம்மாழ்வாரின் பெருமைகளை பரப்பினார்.

நம்மாழ்வாரின் பாசுர ஓலைகளை தலையில் சுமந்து கொண்டு, 'வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார்' என பிரகடனம் செய்தபடி ஊர் ஊராக சென்றார். அப்படி அவர் மதுரையிலும் சொல்லிக் கொண்டு சென்றார்.

ஆனால் மதுரை சங்கப் புலவர்கள் அதை ஏற்கவில்லை. 'உங்கள் ஆழ்வாரை தமிழ் புலவர் என நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் சங்கம் வளர்த்த மதுரையில் உங்கள் ஆழ்வாரின் பாடல்களை சங்கப் பலகையில் ஏற்றினால் தான் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்' என்றனர்.

மதுரகவியாழ்வார் தன் ஓலை சுவடியில் இருந்து ஒரு ஓலையை உருவி அதை படித்தார். 'கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே' என்றிருந்தது.

உங்கள் சங்கப் பலகைக்கு இந்த ஓலையில் இருக்கும் இரண்டு வரி போதும் என திடமுடன் நம்பினார் மதுரகவி. சங்கப் புலவர்கள் அந்த ஒரு ஓலையை எடுத்து சங்கப் பலகையில் வைத்தனர். மறுபுறம் 300 சங்க புலவர்கள் அமர்ந்திருந்தார்கள். சங்கப் பலகை அனைவரையும் புறந்தள்ளி இந்த ஓலைச்சுவடியை ஏற்றுக் கொண்டது.

அனைவரும் நம்மாழ்வாரின் மகிமையை உணர்ந்தனர். மற்ற ஆழ்வார்கள் எல்லாம் பெருமாளை போற்றிப் பாட இவர் மட்டும் நம்மாழ்வாரை மட்டுமே போற்றினார். குருவான நம்மாழ்வாரைத் தவிர வேறு தெய்வம் கிடையாது என வாழ்ந்த மதுரகவியாழ்வார் போல நான் இல்லையே சுவாமி. அதனால் இந்த ஊரை விட்டு போகிறேன் என்றாள் திருக்கோளூர் பெண் பிள்ளை” என முடித்தார் கிருஷ்ணவேணி.

“நம்மாழ்வாரை குருவாக ஏற்றுக் கொண்ட மதுரகவியாழ்வாரைப் போல கணநாதர் திருஞானசம்பந்தரை குருவாக ஏற்றார். அந்த வரலாறு தான் என் நினைவில் நிற்கிறது”

“நிற்பதை கொஞ்சம் நடக்க விடுங்க” என்றார் கிருஷ்ணவேணி.

“சீர்காழியில் பிறந்தவர் கணநாதர். அவர் மறையோருக்கு கற்பிக்கும் குருவாகவும் பக்தர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். தான் தொண்டு செய்ததோடு பல்வேறு பக்தர்களையும் தொண்டில் ஈடுபடுத்தினார். கோயிலுக்கு தொண்டு செய்ய விரும்பி வந்தவர்களை அவரவருக்கு ஏற்றவாறு தொண்டு செய்யும் வழிமுறைகளை சொல்லிக் கொடுத்தார். அதாவது நந்தவனப் பணி செய்கிறேன் என்று வந்தவர்களுக்கு செடிகொடிகளை வளர்ப்பது எப்படி என கற்றுத் தந்தார்.

பூக்களை பறிக்கும் முறை, அதை மாலையாகத் தொடுக்கும் பயிற்சியைக் கற்றுக் கொடுத்தார். அதே போல திருமஞ்சன பணி, கோயிலை மெழுகுபவர், விளக்கு ஏற்றுபவர், திருமுறைகளை எழுதுபவர், ஓதுபவர் போன்ற பல விதமான பயிற்சிகளை பக்தர்களுக்கு அளித்து ஊக்குவித்தார்.

இதனால் கணநாதரை சுற்றி எப்போதும் தொண்டர் கூட்டம் இருக்கும். இல்லறத்தில் நின்று சிவத்தொண்டில் ஆர்வமுள்ள பக்தருக்கு ஊக்கம் அளித்து அனைவரும் பாராட்ட வாழ்ந்தார் கணநாதர். அவருக்கு சீர்காழியில் தோன்றிய திருஞானசம்பந்தரிடம் அளவற்ற பக்தி ஏற்பட்டது.

எப்போதும் ஞான சம்பந்தரையே சிந்தித்தார். அவரை குருவாக ஏற்று அவருடைய திருவடியே தனக்கு காப்பு என வாழ்ந்து சிவனடி சேர்ந்தார். சிவன் மீதும், திருஞானசம்பந்தரின் மீதும் கொண்ட பக்தியின் காரணமாக கைலாயத்தில் சிவ கணங்களின் தலைமை பதவி கிடைக்கப் பெற்றார் கணநாதர். அதனால் 63 நாயன்மார்களில் ஒருவரானார்.

''அடடா! மதுரகவியாழ்வாரும் கணநாதரும் அவரவர் குருவையே தெய்வமாக கொண்டாடி இருக்காங்க. மாதா, பிதா, குரு, தெய்வம்... இந்த வரிசையில் தெய்வத்திற்கும் முன்னால வருபவர் குரு தான். குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும் என சும்மாவா சொன்னாங்க” என முடித்தார் அமிர்தம்.

-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us