தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி -13

பச்சைப்புடவைக்காரி -13

பச்சைப்புடவைக்காரி -13


ADDED : ஜூலை 09, 2026 09:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 09:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வினை தீர்த்த வித்தகி

என்னை பார்க்க வந்த புற்று நோய் சிகிச்சை நிபுணர் குமாரின் முகம் வாடியிருந்தது.

“வக்கீல் ஜெயராமனைத் தெரியுமா?”

எனக்குத் தெரியாது.

“ரொம்ப நல்ல மனுஷன், சார். பாவம் வயித்துல புற்றுநோய். முத்தினப்பறம்தான் கண்டுபிடிச்சோம். வயித்துல பெரும் பகுதியையும் குடல்ல ஒரு பகுதியையும் எடுத்தாச்சு. கீமோ, ரேடியேஷன் நடந்துக்கிட்டிருக்கு. ஜெயராமன் பச்சைப்புடவைக்காரி கோயிலுக்கு நெறைய செஞ்சிருக்காரு. அவருக்கு ஏன் இப்படி நடக்கணும்?.”

எனக்கு எப்படித் தெரியும்?

“மனுஷன் வாழவும் முடியாம சாகவும் முடியாமத் தவிச்சிக்கிட்டிருக்காரு, சார். ஒரு நடை வந்து பாக்கலாமா?”

என் முன் மலை போல் குவிந்திருந்த வேலையைப் பார்த்தேன். வாக்கு கொடுக்கத் தயங்கினேன்.

“போன் பண்ணிட்டு வரேன்”

அன்று மாலை கோயிலுக்குச் சென்றேன். வழியில் ஒரு கூடைக்கார பெண்ணைப் பார்த்தேன்.

“தலையில இருக்கற கூடைய கொஞ்சம் இறக்கி வைங்கய்யா”

கூடையைப் பிடித்து இறக்க முயற்சித்தேன். மிகவும் பாரமாக இருந்தது. பாவம் இவள் இந்த வயதில் இவ்வளவு பாரத்தைச் சுமக்க வேண்டியதிருக்கிறதே என வருந்தினேன். சட்டென்று கூடை லேசாகிவிட்டது.

“இந்தக் கூடை பாரத்தை சில நொடிகள் கூட உன்னால் சுமக்க முடியவில்லையே! அந்த வக்கீல் புற்று நோய்க்காரன் எவ்வளவு கர்ம பாரத்தைச் சுமக்கிறான் தெரியுமா?”

“என்ன செய்யட்டும்?”

“அவனைப் போய்ப் பார். நான் தோற்றுவிப்பதைச் சொல்லிவிடு. இன்னும் இரண்டு நாட்களில் அவன் நிறையச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவனது அடுத்த பிறப்பு...'' பச்சைப்புடவைக்காரி வாக்கியத்தை முடிக்கவில்லை.

அவளை விழுந்து வணங்கி விட்டு மருத்துவமனைக்கு ஓடினேன்.

நல்ல வேளையாக டாக்டர் குமார் அங்கே இருந்தார். என்னை வழக்கறிஞர் ஜெயராமனுக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டுச் சென்று விட்டார்.

“எனக்கு இன்னும் அறுபது வயசுகூட ஆகல. தொழில்ல பேரையும் புகழையும் நெறையச் சம்பாதிச்சிட்டேன். அது உங்க பச்சைப்புடவைக்காரிக்குப் பொறுக்கலையா? என்னை இப்படி போட்டுப் பாத்துட்டாளே அந்த ராட்சசி”

அவருடைய வார்த்தைகள் எல்லை மீறவும் நான் கத்தினேன்.

“வாய மூடுறா” ஜெயராமன் அடங்கினார்.

“எனக்கு ஏதாவது செய்யின்னு பச்சைப்புடவைக்காரி உங்கிட்ட பிச்சை எடுத்தாளா? அவ நம்மகிட்ட ஒண்ணே ஒண்ணத்தான் எதிர்பார்க்கறா. நம்மை சுற்றியுள்ளவர்களிடம் அன்பு காட்டணும். அதைச் செய்யலையேய்யா நீ”

“என்ன இப்படி சொல்லிட்டீங்க? எத்தனை ஏழைக்குழந்தைங்களப் படிக்க வச்சி...''

“நிறுத்துய்யா. நீ செஞ்ச நல்லத மட்டும் வாய் கிழிய பேசற? நீ செஞ்ச துரோகம் மறந்து போயிருச்சா?”

“நான் துரோகம் செஞ்சேனா?”

“உன் கண்ணுக்கு ஏதாவது கேமரா தெரியுதா?”

“இல்லையே, எதுக்கு கேக்கறீங்க?”

“இங்க சினிமா ஷூட்டிங் நடக்கல. உன் நடிப்புத் திறமைய இங்க காட்ட வேண்டாம்” ஜெயராமன் அடங்கினார்.

“உன் கூடப் பிறந்த தம்பியும் அவன் பொண்டாட்டியும் ஆக்சிடெண்ட்டுல செத்துட்டாங்க. அவனுக்கு ஒத்தப் பிள்ள. பத்து வயசு. நீ தான் அவனுக்கு கார்டியன். விபத்துக்கு நஷ்ட ஈடா முதல்ல மூணு லட்சம்தான் கொடுத்தாங்க. அத எதிர்த்து வழக்கு போட்ட. உன்னுடைய உணர்ச்சிபூர்வமான வாதங்களால கூடுதலா 35 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கெடைச்சது. அதுல ரெண்டு லட்சத்த மட்டும் அந்தப் பையனுக்குக் கொடுத்துட்டு பாக்கிய நீ ஆட்டையப் போட்ட. உன் தம்பி பிள்ளைய உன் பிள்ளையாப் பாக்காம அவன் வயத்துல அடிச்சேல்ல, அந்தக் கர்மக் கணக்கு உன் வயித்தையே அடிச்சிருச்சி. புற்று நோய் வந்து தவிச்சிக்கிட்டிருக்க.

“செய்யறத செஞ்சிட்டு என் பச்சைப்புடவைக்காரிய ராட்சசின்னு திட்டறியே! அவ என்னடான்னா பெத்த தாய் மாதிரி உன் அடுத்த பொறப்பு நல்லா இருக்கணுமேன்னு கவலைப்பட்டுக்கிட்டிருக்கா”

ஜெயராமன் என் கையைப் பிடித்துக்கொண்டு அழுதார்.

“பணத்தாசையால ஏதோ செஞ்சிட்டேன். பச்சைப்புடவைக்காரி மன்னிப்பாளா?”

“மனம் திருந்தி பிராயச்சித்தம் செஞ்சா பச்சைப்புடவைக்காரி நிச்சயமா மன்னிப்பா”

“நான் என்ன செய்யணும்?”

“உன் ஒரே பொண்ணு ஆஸ்திரேலியாவுல இருக்கா. உன் மாப்பிள்ளை பணக்காரன். அவனுக்கு உன் சொத்து தேவையில்ல. உனக்கு இன்னிக்குத் தேதிக்கு பத்து கோடிக்கு மேல சொத்து இருக்கு. பேசாம அத உன் தம்பி மகன் பேருக்கு எழுதி வச்சிரு”

'நான் ஏமாத்தினது முப்பது லட்சம்தானே! அதுக்கு ஏன் பத்து கோடி ரூபாய் சொத்தை தரணும்?”

“கடன் வாங்கியிருந்தா அத வட்டியோட கொடுத்தாப் போதும். ஆனா நீ செஞ்சது பச்சை துரோகம். ஒரு அப்பனா உன் தம்பி பையனக் காப்பாத்தும் பொறுப்பு இருக்கும்போது அவன் பணத்தை கொள்ளையடிச்சது பெரிய துரோகம். அதுக்கு பத்து கோடி ரூபாய் அபராதம் ரொம்பக் குறைச்சலான தண்டனை”

கிளம்பப் போனவனைக் கையைப் பிடித்து இழுத்து அமர வைத்தார் ஜெயராமன்.

“நான் சொத்த என் தம்பி பையனுக்கு எழுதி வச்சிட்டா புற்று நோய் குணமாயிருமா?”

“ஆசையப் பாரேன்! அன்னிக்குத் தேதிக்கு உன் தம்பி பையனுக்கு முப்பது லட்சம் கூடுதலாக் கெடைச்சிருந்தா அவனுடைய வாழ்க்கை எப்படியோ இருந்திருக்கும். அவன் தொலைச்ச வாழ்க்கைய உன்னால திருப்பிக் கொடுக்க முடியுமா?”

ஜெயராமன் கண்களில் கண்ணீர் வந்தது.

“இந்த வாழ்க்கைய மனம் போன போக்குல வாழ்ந்து முடிச்சிட்டீங்க. செஞ்ச பாவத்துக்குப் பிராயச்சித்தம் செஞ்சா அடுத்த பிறப்பு நல்லா இருக்கும். என் வேலை முடிஞ்சது. கிளம்பறேன்”

ஜெயராமன் என்னைத் தடுக்கவில்லை.

மறுநாள் மதியம் சற்று தள்ளியிருந்த ஒரு உணவகத்திற்குச் சென்ற போது என் அலைபேசி அலறியது. டாக்டர் குமார்.

“வக்கீல் ஜெயராமன் இறந்துட்டாரு. அவரு இருந்த நிலைமைக்குச் சாவு பெரிய வரபிரசாதம். அவர் அனுபவச்சிருக்க வேண்டிய வலி, வேதனையிலருந்து பச்சைப்புடவைக்காரி காப்பாத்திட்டா. ஜெயராமன் சார் சாகறதுக்கு முன்னால மொத்த சொத்தையும் தன் தம்பி பையனுக்கு எழுதி வச்சிட்டாரு சார். அந்த மனசு யாருக்கு வரும்”

குமாருடன் உரையாடல் முடிந்த பிறகு தான் உணவகத்தின் கல்லாவில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தேன். கம்பீரமாக இருந்தாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

“அடுத்த பிறவியில் அவன் ஆனந்தமாக வாழ்வான். உனக்கு என்ன வேண்டும் சொல்”

“பெரும் பாவங்களைச் செய்தவர்களின் மறுபிறவி கூட நன்றாக இருக்க வேண்டும் என கவலைப்படும் உங்கள் தாயன்பை புரிந்து கொண்டேன். அதன் பிறகும் உங்களிடம் அதைக் கொடு, இதைக் கொடு எனக் கேட்பது பெரிய பாவம். கடைசி வரை அந்த பாவத்தைச் செய்யாமல் இருக்கும் வரத்தையே உங்களிடம் யாசிக்கிறேன்”

பச்சைப்புடவைக்காரி மறைந்த பின்னும் அவள் சிரிப்பொலி காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.



-தாயின் அன்பு தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us