ADDED : அக் 22, 2026 12:14 PM
படிப்பில் அக்கறை இல்லாத ராமலிங்கம் மீது அவரது அண்ணன் சபாபதிக்கு கோபம் உண்டானது. அதனால், மனைவியிடம், “படிக்க எண்ணம் இல்லாத ராமலிங்கத்திற்கு உணவு கொடுக்காதே” என கட்டளையிட்டிருந்தார். அன்று இரவு திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்குச் சென்ற ராமலிங்கம், இரவு வீட்டுக்கு வர நீண்ட நேரமானது. வீட்டுக்கு வந்த போது கதவு தாழிட்டிருந்தது.
வெளியிலுள்ள திண்ணையில் ராமலிங்கம் படுத்துக் கொண்டார். பசியாக இருந்ததால் துாக்கம் வரவில்லை. அப்போது ராமலிங்கத்தின் சகோதரி உண்ணாமுலையின் கோலத்தில் வடிவுடையம்மனே நேரில் வந்து அன்னமிட்டு மறைந்தாள். பசியாறிய ராமலிங்கமும் நிம்மதியாக துாங்கினார்.
நள்ளிரவில் கண் விழித்த அண்ணியார் பாப்பாத்தியம்மாளுக்கு உடனே ராமலிங்கத்தின் நினைவு வந்தது. சாப்பிடாமல் இருக்கும் ராமலிங்கத்திற்கு உணவு அளிக்க எண்ணினாள். அதற்காக நாத்தனாரான உண்ணாமுலை மூலம், ராமலிங்கத்தை சாப்பிட எழுப்பும்படி வேண்டினாள்.
ஆனால் ராமலிங்கம், “அக்கா! கோயிலில் இருந்து வந்ததும் நீ தானே உணவு அளித்தாய். அதோ நான் சாப்பிட்ட இலை கூட அங்கு கிடக்கிறது பார்” எனக் காட்டினார்.
அதன் பின்னரே, வடிவுடையம்மனே பசி தீர்க்க நேரில் வந்ததை ராமலிங்கம் புரிந்து கொண்டார்.
