தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 28

பச்சைப்புடவைக்காரி - 28

பச்சைப்புடவைக்காரி - 28


ADDED : அக் 22, 2026 12:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 12:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நரகத்திலிருந்து சொர்க்கத்திற்கு...

“நீ போய்ப் பாக்கலேன்னா ஒரு உயிர் போயிரும்”, என நண்பர் அச்சுறுத்தியதால்தான் வாசுவைப் பார்க்கப் போனேன். வீல் சேரில் இருந்த வாசுவுக்கு 35 வயது.

“அடிக்கடி கீழ விழுந்துக்கிட்டிருந்தேன். முதுகுத் தண்டுல கட்டி. ஆப்பரேஷனுக்கு அப்புறமா கால் விளங்காமப் போயிருச்சி. கொஞ்ச நாள்ல சரியாயிரும்னு சொன்னாங்க. ரெண்டு வருஷமாச்சு. அப்படியேதான் இருக்கு. என் பொண்டாட்டி விட்டுட்டுப் போயிட்டா. விவாகரத்து ஆயிருச்சி”

“வேலை?”

“அரசு வேலையில இருந்தேன். நல்ல சம்பாத்தியம். ரெண்டு வருஷம் சம்பளம் இல்லாத லீவுல இருக்கேன். அதுவும் முடியப் போகுது. அப்பாவும் அம்மாவும் செத்துட்டாங்க. எங்க குலதெய்வமே பச்சைப்புடவைக்காரிதான். அவ பேர கல்மனசுக்காரின்னு மாத்திக்கிட்டாளோ?”

கண்ணீரை மறைத்தபடி விடை பெற்றேன்.

வாசுவிற்காக இரவு உணவைத் துறந்து தினமும் கோயிலுக்கு நடந்தே போனேன்.

அன்று கோயிலை விட்டு வரும் போது ஒரு நடுத்தர வயதுப் பெண் கையைப் பிடித்தாள்.

“வாசுவிற்கு நான் என்ன செய்ய வேண்டும்”

“வாசு வாழ்வதும், அழிவதும் உங்கள் கையில்தான் உள்ளது.”

“நாளை நீ அவனைப் பார்க்கும் போது நான் தோற்றுவிப்பதை சொல்”

மறுநாள் வாசுவைப் பார்த்தேன். அவன் புலம்பினான். “நான் எவ்வளவு பேருக்கு உதவி செஞ்சிருக்கேன் தெரியுமா?”

பட்டியல் போட ஆரம்பித்தவனை பாதியிலேயே நிறுத்தினேன்.

“நீ செஞ்ச துரோகத்த எல்லாம் வசதியா மறந்துட்டியே, வாசு!”

வாசுவின் முகம் வெளிறியது.

“காலேஜ்ல கூடப் படிச்ச சவுமியாவ உயிருக்குயிராக் காதலிச்ச. உன்னை நம்பித் தன்னையே கொடுத்துட்டா. நீயும் உங்கப்பா அம்மாகிட்ட தைரியமா உன் காதலச் சொன்ன. உங்கப்பா சவுமியாவோட ஜாதகத்தை வாங்கிப் பாத்துட்டு அதில செவ்வாய் தோஷம் இருக்கு, அதனால உன் உயிருக்கு ஆபத்துன்னு சொன்னாரு. கருப்பசாமி தன் பொண்ண உனக்குக் கட்டி வைக்கத் துடியாத் துடிச்சிக்கிட்டிருக்காரு. 100 பவுன் நகை. அஞ்சு லட்ச ரூபாய் ரொக்கம் அது போக உனக்கு ஒரு அரசு வேலை. அந்த வேலையில நீ லட்சக் கணக்குல சம்பாதிக்கலாம். உனக்கு சவுமியா வேணுமா இல்ல கருப்பசாமியோட பொண்ணு வேணுமான்னு உங்கப்பா கேட்டாரு. நீ சவுமியாவ அம்போன்னு விட்டுட்ட.”

“செவ்வாய் தோஷம் இருந்தா உயிருக்கு ஆபத்து, சார்.”

“அந்த நம்பிக்கையிருந்தா ஜாதகத்தப் பாத்தப்புறம்தானே காதலிச்சிருக்கணும்? ஜாதகத்துல தோஷமும் இல்லைன்னு தெரிஞ்சிக்கிட்டுத்தானே அவளோட நெருக்கமா இருந்திருக்கணும்? உன்னால சவுமியா கர்ப்பமாகி அதனால அவளோட அப்பா அம்மா அவள வீட்ட விட்டுத் துரத்தி இப்போ ஒரு முதியோர் இல்லத்துல ஆயாவா இருக்கா. அவ வாழ்க்கையையே நாசமாக்கிட்டியே.”

“அதான் நான் செஞ்ச பாவமா?”

“உன் பாவங்கள்ல ஒண்ணு .”

“வேற?”

“ கொஞ்சமாவா லஞ்சம் வாங்கின?

பத்தே வருஷத்துல சென்னையில ஒரு டூ பெட்ரூம் பிளாட் வாங்கிட்டியே! செய்யறத எல்லாம் செஞ்சிட்டு பச்சைப்புடவைக்காரி கல்நெஞ்சுக்காரியான்னு கேக்கற. வாசுவுக்கு இன்னொரு பேரு வஞ்சகன்னு நான் சொல்லலாமா?”

வாசு அழுதான்.

“இப்போ என்னதான் செய்யறது?

“நான் சொல்றத உன்னால நிச்சயமா செய்ய முடியாது.”

“சொல்லுங்க.”

“லஞ்சம் வாங்கி சம்பாதிச்ச சென்னைபிளாட்ட ஒரு நல்ல காரியத்துக்குக் கொடுத்திரு. ரெண்டாவது, சவுமியா எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சி இந்த வீட்ட அவ பேருக்கு மாற்று”

“விளையாடறீங்களா? என்கிட்ட இருக்கறதே இந்த ரெண்டு சொத்துதான். இதையும் கொடுத்துட்டு பிச்சை எடுக்கறதா?'”

“வேண்டாம், வாசு. நீ வீல் சேர்லயே வாழ்ந்து முடிச்சிரு. பாத்ரூம் போகறதுக்குக் கூட அடுத்த ஆளு உதவி தேவைப்படற நிலைமையில வாழு. நான் கிளம்பறேன்”

பத்து நாள் கழித்து அவள் கோயிலை வலம் வந்த போது ஒரு பெண் என்னை வழிமறித்தாள்.

“கோபத்தில் கத்தி விட்டு வந்தால் உன் கடமை முடிந்து விட்டதா? வாசு என்ன ஆனான் என தெரிந்துகொள்ள ஆவல் இல்லையா?”

“நீங்கள் தோற்றுவித்ததைச் சொல்லிவிட்டேன். உங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறேன்.”

'என்ன நடக்கப் போகிறது எனக் காட்டுகிறேன்”

வாசு ஒருநாள் முழுவதும் பச்சைப்புடவைக்காரியின் படத்திற்கு முன் அழுது கொண்டிருந்தான். எதுவும் சாப்பிடவில்லை. அன்றிரவு அவனுக்கு ஒரு உற்சாகம் பிறந்தது.

அடுத்த பத்து நாட்களில் தன் சென்னை பிளாட்டை ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்து வந்த ஒரு மருத்துவருக்கு தான செட்டில்மெண்டாக எழுதினான். அதன் பின் சவுமியாவைத் தேடி அலைய ஆரம்பித்தான். ஒரு மாதம் கழித்து அவள் பணிபுரியும் முதியோர் இல்லத்திற்குச் சென்றான். வாசுவின் நிலையைப் பார்த்த சவுமியா அதிர்ந்தாள்.

“நான் வீல் சேர்ல இல்லேன்னா உன் கால்ல விழுந்து கதறியிருப்பேன், சவுமியா. என்னை மன்னிச்சிருன்னு கேக்கக்கூட எனக்கு உரிமையில்ல. உனக்குச் செஞ்ச துரோகத்திற்கு எனக்குப் பச்சைப்புடவைக்காரி சரியான தண்டனை கொடுத்துட்டா. எங்க பரம்பரை வீட்ட உன் பேர்ல எழுதி வச்சிட்டேன். அடுத்த வாரம் ஒரு நாள் ரிஜிஸ்ட்ரார் ஆபீசுக்கு வந்து கையெழுத்துப் போட்டு பத்திரங்கள வாங்கிட்டுப் போயிரு.

“உனக்கு பத்து நிமிஷம் இருந்தா என் கதையக் கேளு”

சவுமியாவிடம் அவன் எதையும் மறைக்கவில்லை.

வாசு கிளம்பும்போது சவுமியா கத்தினாள்.

“நில்லுங்க, வாசு. எல்லாத்தையும் கொடுத்துட்டு நீங்க என்ன செய்வீங்க?”

“பச்சைப்புடவைக்காரி என் தாய். அவ சொன்ன மாதிரி செஞ்சிட்டேன். என்னைக் காப்பாத்தறதோ கைவிடறதோ அவ இஷ்டம்”

“என் கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டாதான் நான் வீட்ட வாங்கிப்பேன்”

“சொல்லு.”

“இப்போ நீங்க தனியா இருக்கீங்க. சொத்தும் இல்ல. விவாகரத்தும் ஆயிருச்சி. இப்பவாவது என்னைக் கல்யாணம் பண்ணிக்கங்க. நாம அந்த வீட்டுலயே இருக்கலாம். கடைசிவரைக்கும் நான் உங்களுக்குத் துணையா இருப்பேன் வாசு.”

சவுமியாவின் கைகளில் முகம் புதைத்து அழுதான் வாசு.

“வாசு கேட்டதுக்கு மேலேயே கொடுத்து விட்டீர்கள், தாயே!”

“இன்னும் இரண்டு மாதத்தில் அவன் கால்கள் செயல்படத் தொடங்கிவிடும். வேறு ஒரு துறைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போய் நேர்மையாகச் சம்பாதிப்பான். அவனும் சவுமியாவும் நன்றாக வாழ்வார்கள். உனக்கு என்னப்பா வேண்டும்?”

“நரகத்தில் உழன்றவனை இரண்டே மாதத்தில் சொர்க்கத்திற்கு இடம் மாற்றிவிட்டீர்களே! ஒரு வேளை நான் நரகத்தில் மாட்டிக்கொண்டால்...”

“உன்னையும் சொர்க்கத்திற்கு அனுப்ப வேண்டும். அது தானே?”

“இல்லை, தாயே! நரகத்தில் உழன்றாலும் உங்களையே நினைந்துருகும் மனம் வேண்டும். தாயே... உங்களைத் தவிர வேறு எதையும் வேண்டாத மனம் வேண்டும். அதை விட மேலான சொர்க்கம் எதுவுமில்லை”

பச்சைப்புடவைக்காரியின் புன்னகையில் நான் கரைந்துவிட்டேன்.

-தாயின் அன்பு தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us