ADDED : மே 15, 2025 08:35 AM

மதுரை வைத்தியநாத ஐயர்
இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது வட இந்தியா, தென்னிந்தியா என்ற இரு பகுதிகளின் தனித்தனி போராட்டமோ என குழப்பும் வகையில் அங்கிருந்த தியாகிகளைப் பற்றி இங்கும், இங்கிருந்த தியாகிகளைப் பற்றி அங்கும் அறியப்படாமல் இருந்து வருகிறது. ஆனால் அந்தத் தியாகிகளைப் பொறுத்தவரை, மொழி பிரச்னையே இல்லாமல், ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் சந்தித்திருக்கிறார்கள்; கருத்துப் பரிமாற்றம் செய்திருக்கிறார்கள். இந்த உண்மையை மதுரை வைத்தியநாத ஐயரின் வாழ்க்கை புலப்படுத்துகிறது.
ஆமாம், தென்னிந்தியாவிலும், சுதந்திர வேட்கை மங்காமல் எரிந்து கொண்டிருக்க, வட இந்திய தியாகிகள் வருகை புரிந்திருக்கிறார்கள்.
அவர்களை மதுரையில் உள்ள தம் இல்லத்திற்கு வரவழைத்து, அன்புடன் உபசரித்து, உரையாடி, விடுதலை ஆர்வத்தை மேலும் வளர்த்துக் கொண்ட பெருமகன் வைத்தியநாத ஐயர். பாபு ராஜேந்திர பிரசாத், வல்லபாய் படேல், வி.ஜே.பட்டேல், கமலாதேவி சட்டோபாத்யாயா, மதன் மோகன் மாளவியா, ஜமன்லால் பஜாஜ் போன்ற இந்திய சுதந்திரப் போராளிகள் அவ்வாறு வந்தவர்களில் சிலர்.
விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்ட பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் என்ற தியாகி விடுதலையான நாளில் அவரை வரவேற்க அவருடைய சுற்றமோ, நண்பர்களோ யாரும் வரவில்லை. விபரம் அறிந்த ஐயர், தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்று கதராடை அளித்து உபசாரம் செய்தார். சொந்த மாநிலமான கேரளத்திற்கு அவர் செல்ல தேவையான உதவிகளையும் செய்தார்.
அதே போல மதுரை சிறையில் இருந்து விடுதலையான ஆந்திராவை சேர்ந்த துர்காபாய் தேஷ்முக் என்ற பெண் தியாகியை அழைத்து பாராட்டி, அவர் ஊருக்கு திரும்ப உதவினார். இப்படி சுதந்திர தியாகி என யாராக இருந்தாலும் அவருக்குரிய மரியாதை செய்ய அவர் தயங்கியதில்லை.
தஞ்சாவூர் மாவட்டம், விஷ்ணம் பேட்டையில் அருணாசலம் ஐயர் - லட்சுமியம்மாள் தம்பதிக்கு 1890, மே16ல் பிறந்தவர் வைத்தியநாத ஐயர். புதுக்கோட்டை மகாராஜாவுக்குச் சொந்தமான பள்ளிக்கூடத்தில் கணித ஆசிரியராகப் பணியாற்றிய தந்தையார், ஓய்வுக்குப் பிறகு குடும்பத்துடன் மதுரையில் குடியேறினார்.
வைத்தியநாத ஐயர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியின் பெருமையாகத் திகழ்ந்தார். ஆமாம், படிப்பில் அத்தனை அசாத்திய திறமை கொண்டிருந்தார். இதுவே கல்லுாரி காலத்திலும் தொடர்ந்தது. அதனாலேயே அவரால் பட்டப் படிப்பு, வழக்கறிஞர் படிப்பு, அரசுத் தேர்வில் வென்று பிளீடர் (Pleader) தகுதி பெற முடிந்தது. நடுவே பட்டப்படிப்பு தேர்வுகள் எழுதியபின் 18ம் வயதில், அகிலாண்டம் என்ற 9 வயதுப் பெண்ணை திருமணம் புரிந்தார்.
வழக்கறிஞர் தொழிலில் தனி முத்திரை பதித்தவர் ஐயர். முக்கியமாக தான் வழக்காடும் நபர் நிரபராதி, அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு வழக்கும் தொடுக்கப்பட்டவர் என தெரிந்தால் மட்டுமே வாதாடி, அவருக்கு விடுதலை பெற்றுத் தருவார். அநியாயம், அக்கிரமச் செயலில் ஈடுபட்டவர்கள் வாதிடும்படி கேட்டால், அவர்களை நிராகரித்து விடுவார். ஆங்கிலேய நீதிபதிகளே அசந்து போகும் வகையில் ஆங்கில வாதத் திறமையை நிரூபித்த இவருக்கு புகழும், வருமானமும் சேர்ந்தன. தன் வருமானத்தை தேசிய விடுதலை நடவடிக்கைகளுக்கு வாரி வழங்கினார் வைத்தியநாத ஐயர்.
முக்கியமாக காந்திஜியின் கொள்கைகளைப் பின்பற்றி கள்ளுக்கடை மறியல், அந்நியப் பொருள் புறக்கணிப்பு, உப்பு சத்யாகிரகப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தல் என செலவுகளை மேற்கொள்ள இவர் தயங்கியதேயில்லை.
சட்ட மறுப்பு இயக்கப் போராட்டத்தில் பங்கேற்றதற்காகக் கைது செய்யப்பட்டார் ஐயர். போராட்டத்தை தொடர்ந்து நடத்த மதுரை காங்கிரஸ் கமிட்டியிடம் போதிய நிதி வசதி இல்லை என்பதை அறிந்தார். ஆகவே வேலுார் சிறைக்குத் தான் அழைத்து செல்லப்படும் முன், நம்பிக்கைக்குரிய ஒரு நபரிடம் தன் நகைகளைக் கொடுத்து அவற்றை அடகு வைத்துக் கிடைக்கும் பணத்தில் போராட்டத்தைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த கட்டத்தில் அவரது மனைவி அகிலாண்டம் எந்த மறுப்பும் சொல்லாமல், கணவரை ஆதரித்தது போற்றத்தக்கது. 7000 ரூபாய்க்கு (1932ல்) அடகு வைக்கப்பட்ட அந்த நகைகளை, ஐயர் விடுதலையாகி வந்த பிறகு, வக்கீல் தொழில் வருமானத்தால் நகைகளை மீட்டார்.
மூதறிஞர் ராஜாஜி, உப்பு சத்யாகிரகப் போராட்டத்தை நடத்தப் பேருதவி புரிந்த ஐயர், அது வெற்றிகரமாக நடந்தேறியபின் ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது திடீரென காவலர்கள் கூட்டத்துக்குள் புகுந்து புளிய சவுக்கால் விளாசித் தள்ளினர். ஐயரையும் கடுமையாகத் தாக்கி, கீழே தள்ளி தரதரவென சாலையிலேயே இழுத்துச் சென்றனர். ஆறுமாத கடுங்காவல் தண்டனையாக திருச்சி சிறையில் அடைத்தனர். ஆனால் 1931ம் ஆண்டு காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகே விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கு முன் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்திய காந்திஜிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போது அதனைக் கண்டிக்கும் விதமாக பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. மதுரையில் ஒரு கூட்டத்தில் ஐயர், ஆங்கிலேயரின் அடாத செயல்களை கண்ணியமான சொற்களால் கண்டித்தார். ஆனாலும் கைது செய்து 500 ரூபாய் அபராதம், ஓராண்டு சிறை விதித்தனர். அபராதத் தொகையை வசூலிக்க, அவருடைய காரைப் பறிமுதல் செய்து ஏலம் விட்டனர். யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. ஐயரின் மீது ஊரார் வைத்திருந்த நன்மதிப்பு, ஆட்சியாளர்களுக்கு விளங்கியது.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் கடும் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது கைத்தறித் தொழில்தான். தயாரித்த ஆடைகள் விற்பனை ஆகாததாலும், கொள்முதல் செய்த மூலப் பொருட்களைப் பயன்படுத்த இயலாததாலும் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் வாடின. இந்த சமயத்தில் உணவு, மருத்துவம் என எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். இயல்பு நிலை திரும்பும்வரை அந்த உதவிகளை அவர் நிறுத்தவே இல்லை.
இதற்குப் பிறகு இஸ்லாமியர்கள் தனிநாடு கோரிக்கையை முன்வைத்தனர். இதில் அவசியமே இல்லாமல் ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர். ஹிந்து, முஸ்லிம்களுக்கு இடையே விரோதம் வெடித்தது. பொதுவாக அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என இரு தரப்பினரும் விரும்பினார்களே தவிர, தனி நாடு என பிரிந்து போனாலும் நட்புதொடர வேண்டும் என ஆசைப்பட்டார்களே தவிர, எந்த வகையிலும் வன்முறைக்கு வித்திடவில்லை! ஆனால், நற்செய்தியை விட தீய செய்தி விரைவில் பரவும் என்பதை நிரூபிப்பது போல ஹிந்து, முஸ்லிம்களுக்கிடையே பகை வளர்ந்தது. அதனாலேயே 1940ல் மதுரையில் நடந்த போராட்டத்தை சில விஷமிகள் திசை திருப்பி விட திரிக்கப்பட்ட உண்மையை உணராமல், இரண்டு பக்கமும் தீப்பற்றிக் கொண்டது.
இதனால் தெற்கு மாசி வீதியும், மேல மாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் இரு தரப்பினரும் கொடிய ஆயுதங்களுடன் திரண்டனர்.
இதைக் கேள்விப்பட்ட ஐயர் அங்கு ஓடி வந்தார். இரு தரப்பிலும், ஒவ்வொருவர் காலில் விழுந்து அமைதி காக்குமாறும், ஒற்றுமையை இழக்க வேண்டாம் என்றும் வருந்திக் கேட்டுக் கொண்டார். இதைக் கண்டு நெகிழ்ந்த இரு தரப்பினரும், 'வீணான வதந்திக்கு பலியாகிறோமே' என்ற தெளிவு ஏற்பட, அமைதியாக கலைந்து சென்றனர்.
தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், அனைத்து மக்களிடையேயும் ஒற்றுமை ஓங்க வேண்டியது அவசியம் என்ற நாட்டுப்பற்றுடன் இயங்கியவர் ஐயர்.
--தொடரும்
பிரபு சங்கர்
72999 68695