sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 27

/

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 27

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 27

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 27


ADDED : மே 23, 2025 09:08 AM

Google News

ADDED : மே 23, 2025 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை வைத்தியநாத ஐயர்

ஆண்டாண்டு காலமாக நமக்குள்ளேயே நட்பும், பாசமும் இல்லாததுதான் அந்நியர் படையெடுப்புக்கும், நம் மீது அவர்கள் ஆட்சி, அதிகாரம் செலுத்துவதற்கும் காரணம் என்பதை உணர்ந்த வல்லபாய் படேல், ஜதீந்திரநாத் தாஸ் போன்ற விடுதலை போராளிகள், இந்தியர்களின் ஒற்றுமைக்குப் பெரிதும் பாடுபட்டனர். வடக்கில் இவர்கள் இப்படி என்றால், தெற்கில் வைத்தியநாத ஐயர் இந்த இணக்கத்துக்காகப் பெரிதும் முயற்சிகளை மேற்கொண்டார்.

முன்னர் சென்னை மாநிலக் கல்லுாரியில் படித்த போது, கடற்கரையில் தியாகி பிபின் சந்திரபால் ஆற்றிய உரையைக் கேட்டார் ஐயர். அந்த உரை இவர் மனதில் சுதந்திரக் கனலை வளர்த்தது. இவர் இவ்வாறு கூட்டத்தில் பங்கேற்றார் என்பதற்காக, கல்லுாரியின் ஆங்கிலேய முதல்வர், இரண்டு வாரத்திற்கு வகுப்பறை பெஞ்ச் மீது நின்றபடியே பாடம் கற்க வேண்டும் என தண்டனை விதித்தார். கொஞ்சமும் எதிர்க்காமல் தண்டனையை ஏற்றார் ஐயர். இதனால் விடுதலை வேட்கை அவருக்கு மேலும் அதிகரித்தது.

1920ல் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த போது ஐயர், நல்ல வருமானம் தரும் வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு இந்திய தேசிய காங்கிரசில் முழு நேரப் பணியாளராக பொறுப்பேற்க முயன்றார். அச்சமயத்தில் மதுரையில் விடுதலை பிரசாரத்தை மேற்கொள்ள வந்த சித்தரஞ்சன் தாஸ் இந்த முடிவைக் கேட்டு, அவர் வழக்கறிஞராகவே பணியாற்றிக் கொண்டு பகுதி நேர ஊழியராக சேவை செய்ய அறிவுறுத்தினார்.

ஏற்கனவே சித்தரஞ்சன் தாஸ் 1921ம் ஆண்டுகளில் வழக்கறிஞர் தொழிலில் மாதம் ரூ.50,000 சம்பாதித்தவர். அந்தப் பணியை விட்டு விட்டு தேசப் பணிக்குத் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டதால், அந்த வருவாய் மூலம் ஏழைகளுக்கு உதவ முடியாமல் போனதே என வருத்தம் கொண்டிருந்தார். இந்த நிலை ஐயருக்கு வர வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் அவ்வாறு அறிவுரை அளித்தார் தாஸ். ஐயரும் அதை ஏற்று இரண்டு சேவைகளிலும் தன்னை மேலும் உற்சாகமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

முதலில் அந்நியத் துணிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டார். மதுரை மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் கைராட்டையை அறிமுகப்படுத்தி, கதராடை உற்பத்தியை அதிகரித்தார். நெசவாளர்களுடன் இணைந்து, தோள்களில் கதராடைகளை சுமந்து ஊர் ஊராகச் சென்று விற்று தேசிய உணர்வை வளர்த்தார். தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக கதர் துணி விற்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார் வைத்தியநாத ஐயர். இவர்களின் நலனுக்காக பாடுபடும் அமைப்புகள் எதுவும் ஆரம்பிக்கப்படு முன்னரே அவர்களுக்காக தொண்டு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனி நபர் சத்தியாகிரக போராட்டத்துக்காக காந்திஜி அறைகூவல் விடுத்தபோது, தென்னாட்டில் அதை முதலில் ஏற்று செயல்படுத்தினார். அதற்காக காங்கிரஸ் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் பொறுப்பை மேற்கொண்டார். அவ்வாறு தேர்வானவர்களில் அவரது மனைவி அகிலாண்டமும் ஒருவர். அப்படி போராட்டத்தில் ஈடுபட்ட அம்மையாரை கைது செய்து மூன்று மாதம் சிறையில் அடைத்தனர்.

'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை காந்திஜி ஆரம்பித்தார். நாடெங்கும் இந்த முழக்கம் ஒலித்தது. அதனால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காந்திஜி உட்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இது மதுரையிலும் எதிரொலித்தது. பொதுக்கூட்டத்தை ஐயர் முன்னின்று நடத்தினார். போலீசார் கடுங்கோபத்துடன் தடியடி, துப்பாக்கிச் சூடு என நடத்தி பல உயிர்களை காவு வாங்கினர், பலரைப் படுகாயப்படுத்தினர். ஐயர் கைது செய்யப்பட்டு அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் சிறையில் இருந்த போது அவரது மூத்த மகன் சுந்தரராஜன் உயிர் நீத்தார். இந்த துக்கச் செய்தியை சிறை அதிகாரிகள் ஐயரிடம் உடனே தெரிவிக்காமல் இரண்டு வாரம் கழித்தே சொன்னார்கள். அதிர்ச்சி அடைந்த ஐயர், அப்போதும் பொறுமை இழக்காமல் பரோல் பெற்று வெளியே வந்து மகனுக்கான இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார். அந்த கால அவகாசத்திலேயே மகள் சுலோசனாவுக்கு திருமணம் நடத்தி வைத்து விட்டு அலிப்பூர் சிறைக்குத் திரும்பினார் இந்தத் தியாகி.

இவரை வெளியே விட்டால் ஆபத்து என்பதை ஆட்சியர் உணர்ந்திருந்தார்கள். பொதுக்கூட்டம், பேச்சு என்று மட்டும் இல்லாமல், மக்கள் அனைவருடனும் நேரடித் தொடர்பு கொண்டு அவர்கள் மனதில் சுதந்திர வேள்வியை வளர்க்கிறார் என அவர்கள் கவலை கொண்டனர். அதனால் அலிப்பூர் சிறையில் இருந்து விடுதலை பெற்று, அவர் வெளியே வந்தவுடனே சிறை வாசலிலே 'பாதுகாப்புக் கைதி' என்ற பிரிவில் மறுபடியும் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர், வேலுார் சிறைகளில் அடுத்தடுத்து அவரை அடைத்தனர். விடுதலையானால் மறுபடி மறுபடி கைது செய்து அவரை வெளியே விடவே கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தனர் ஆட்சியர். ஆனால் இவ்வாறு மூன்றாண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த அவர், 1945ம் ஆண்டு பொது விடுதலை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். பிறகு தன் வழக்கறிஞர் பணியைத் தொடர்ந்தார். இந்தக் காலகட்டத்தில் ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு மிகவும் பாடுபட்டார்.

இதற்கு முன்னால் 1932ம் ஆண்டு காந்திஜி, டாக்டர் அம்பேத்கர் இருவரும் மேற்கொண்ட புனே ஒப்பந்தப்படி ஹரிஜன சமூக உரிமைக்காக நாடெங்கும் அவர்களுக்கான ஆலய பிரவேச பிரசாரங்கள் முழுவீச்சில் நடந்தன. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருவாங்கூர் சமஸ்தான ராஜா, 1935 நவம்பர் 12 முதல் தன் சமஸ்தானக் கோயில்கள் அனைத்திலும் ஹரிஜன பிரவேசத்துக்கு வாசல் திறந்து வைத்தார். அங்கே கோயில்களில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதை அறிந்து ஐயர் பெரிதும் மகிழ்ந்தார். தமிழகத்திலும், குறிப்பாக மதுரையில் அதே உரிமையை ஹரிஜனங்கள் பெற வேண்டும் என துரிதமாக முயற்சிகள் எடுத்துக் கொண்டார். எம்.என்.ஆர்.சுப்புராமன், டாக்டர் ஜி. ராமச்சந்திரன், சோமசுந்தர பாரதி, மணக்கால் பட்டாபிராமய்யர், சோழவந்தான் சின்னசாமிப் பிள்ளை, மட்டப்பாரை வெங்கட்ராமய்யர் ஆகியோரும் அவருடன் கை கோத்தனர்.

இதனால் ஐயருக்கு ஏகப்பட்ட எதிர்ப்பு. அவரை ஜாதியில் இருந்தே ஒதுக்கி வைத்தனர். இதற்கெல்லாம் அஞ்சவில்லை ஐயர். ஈசன் திருவிளையாடலால் உய்வடைந்த பக்தர்கள் அனைவரும் அனைத்து ஜாதியையும் சேர்ந்தவர்கள்தான் என்பதை அந்தப் புராணமே விளக்கும் போது, அந்த ஈசனின் கொள்கையையே அவமதிப்பது போல குறிப்பிட்டோர் தவிர பிற ஜாதியினரிடம் இருந்து ஈசனையே ஒதுக்கி வைப்பது என்ன நியாயம் எனக் கேட்டார் ஐயர். ஆகவே சொக்கேசன் உறையும் அங்கயற்கண்ணி ஆலயத்துக்குள் ஹரிஜன பக்தர்களையும் அழைத்துச் சென்றார். இவருக்கு கோயில் அறங்காவல் குழு தலைவர் ஆர்.எஸ் நாயுடு, தம் குழுவினருடன் ஆதரவுக் கரம் நீட்டினார்.

1939, ஜூலை 8 அன்று ஐயர் தன்னுடன் ஆறு பக்தர்களை அழைத்து வந்தார். அவர்கள் அனைவருக்கும் கோயில் வாசலுக்கே வந்து மரியாதை செய்தார் நாயுடு. அவர்களை கருவறைக்கு அழைத்துச் சென்று பூஜை, வழிபாடு நடத்த உதவினார்.

இந்த முயற்சிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெரிதும் ஊக்கம் அளித்தார். அந்தணர் மட்டுமன்றி, வேறு எந்த ஜாதியினரும் இந்த ஆலயப் பிரவேசத்துக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதாக துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து நகர் எங்கும் விநியோகிக்கச் செய்தார் தேவர்.

மிகவும் பரபரப்பான, பதட்டமான இந்தச் செயலின் பின்விளைவாக கலவரம் எதுவும் மூளக் கூடாதே என அப்போது சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாக விளங்கிய மூதறிஞர் ராஜாஜி கவலை கொண்டார். ஆகவே, ஆளுநர் மூலமாக ஆலயப் பிரவேசத்தை அனைவருக்கும் பொதுவாக அனுமதிக்கும் அரசியல் சட்டத்தை அமுல்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து அழகர் கோவில், திருப்பரங்குன்றம், ஸ்ரீரங்கம், பழநி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தலங்களிலும் அதே ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஆலயப் பிரவேச நிகழ்ச்சிகள், ஐயரின் தவ முயற்சியால் நடந்தேறின.

-தொடரும்

பிரபு சங்கர்

72999 68695






      Dinamalar
      Follow us