
சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. பதிவிரதையான அவள் தன் கணவரை உயிராக மதித்தாள்.
அவளை பரிசோதிக்க விரும்பினான் இந்திரன். அதற்காக வருணனுடன் பூலோகம் வந்தான். அப்போது வசிஷ்டர் அங்கு இல்லை. வந்தவர்களை வரவேற்று ஆசனத்தில் அமரச் செய்தாள் அருந்ததி. தன்னிடம் இருந்த காலி குடம் ஒன்றைக் காட்டிய இந்திரன், தன் தவசக்தியால் கங்கை தீர்த்தத்தை அதில் நிரப்பப் போவதாக கூறினான். அதே போல அருந்ததியால் செய்ய முடியுமா என்றும் கேட்டான். 'என்னால் முடியும்' என தலையாட்டினாள் அருந்ததி.
முதலில் இந்திரன் முயற்சித்தான்.
அவனது தவ சக்தியால் குடத்தில் கால் பாகம் மட்டுமே நிரம்பியது. பின் வருணன் முயற்சித்த போது இன்னும் கால்பாகம் நிரம்பியது. அதன்பின் அருந்ததி முயற்சியில் ஈடுபட்டாள்.
கண்களை மூடி வசிஷ்டரை தியானித்தாள். குடத்தில் கங்கை நிரம்பி வழிந்தது. வியப்புடன் இந்திரன், 'என்ன மந்திரம் ஜபித்தீர்கள்' எனக் கேட்க, 'என் கணவரைப் பிரார்த்தனை செய்தேன்' என்றாள் அருந்ததி. இதன் அடிப்படையில் திருமணத்தன்று மணமக்கள் அருந்ததியை பார்க்கும் சடங்கு நடக்கும்.
வசிஷ்டர், அருந்ததியை வழிபட்டால் தம்பதி ஒற்றுமை சிறக்கும்.
-லட்சுமி பாலசுப்ரமணியன்