sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 28

/

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 28

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 28

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 28


ADDED : மே 30, 2025 08:37 AM

Google News

ADDED : மே 30, 2025 08:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை வைத்தியநாத ஐயர்

அன்பு ஒன்றுதான் அனைவரையும் அரவணைப்பது, கடவுளின் அருள் அனைவருக்கும் பொதுவானது. இதில் பாரபட்சம் பார்ப்பது மனித தர்மம் அல்ல என்ற கொள்கையில் உறுதியான பிடிப்பு கொண்ட ஐயர், அந்த முயற்சிகளில் வெற்றியும் கண்டார்.

மக்களுக்காக நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்ற உயர்நோக்கம் கொண்டிருந்ததால் இவரால் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே மக்களுக்காக நற்பணி ஆற்ற முடிந்தது. இவரது சிறப்பான வெகுஜன தொடர்பால் ஈர்க்கப்பட்ட காந்திஜி, படேல், ராஜாஜி போன்ற தலைவர்களின் வற்புறுத்தலால் இவர் மதுரை மேலுார் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சி அமைச்சர் பதவி வழங்க முன்வந்தபோது அதை மறுத்து விட்டார். அமைச்சராக இருந்துதான் மக்கள் சேவை ஆற்ற வேண்டுமா, சட்ட மன்ற உறுப்பினராகவே அதை நிறைவேற்றலாமே என வாதிட்டார்.

அற்புதமான சட்ட ஞானம் கொண்டிருந்த இவருடைய சட்ட மன்ற உரைகள் அனைவரையும் கவர்ந்தன. அனைத்து மக்களும் ஆலயப் பிரவேசம், புதிய அரசமைப்புச் சாசனம், அனைவருக்குமான கல்வி, பெண்களின் நலன், சட்ட மசோதாக்கள் தாக்கல் என பல தலைப்புகளில் இவர் ஆற்றிய உரைகள் தனியே தொகுக்கப்பட்டு நுாலாக வெளிவந்தன. முனைவர் பி.எஸ்.சந்திரபாபு என்பவரின் முயற்சியால், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தால் வெளியிடப்பட்ட அப்புத்தகம், 'VOICE OF A GREAT SOUL' என்பதாகும். சட்ட மன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்போது இவர் தெரிவித்த யோசனைகளும், திருத்தங்களும் எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டன.

முக்கியமாக ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த ஐயர், சட்ட மன்றத்தில் ஹரிஜன நல வாரியத்தின் அறிக்கை மீது ஆற்றிய உரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்' இவரது பண்பு பாராட்டப்பட்டது.

வாய்ச்சொல் வீரராக இல்லாமல், செயல் வீரராகவும் பணியாற்றியவர் ஐயர். தன்னைத் தேர்ந்தெடுத்தவர்கள் என்றில்லாமல், எல்லா மக்களின் துன்பங்களையும் துடைக்க முன் வந்தார். வைகையாற்றில் வெள்ளம் வந்து கரையோரப் பகுதிவாழ் மக்கள் பாதிக்கப்பட்டனர். தொண்டர்களில் ஒருவராக விரைந்தோடிப் போய் பணியாற்றினார். அங்கே, இங்கே என கையைக் காட்டி பிறரை வேலை வாங்காமல், தானே களத்தில் இறங்கியவர் இவர்.

கருப்பையா பாரதி என்ற தேசிய உணர்வு மிக்க தொண்டர் அரசியல் சூழ்ச்சியால் படுகொலை செய்யப்பட்ட போது, அவர் குடும்பத்துக்கான நிவாரணப் பணியாற்ற முதலில் வந்தவர் ஐயர்தான். தொண்டரின் தாயார் கருப்பாயி அம்மாளுக்கும், சகோதரர் கந்தனுடைய குடும்பத்துக்கும் ஊரில் நிதி வசூல் செய்து, தன் சொந்தப் பணத்தையும் சேர்த்து அவர்களுக்கு வீடு வாங்கிக் கொடுத்தார்.

அந்நாளிலேயே மிகவும் முற்போக்கு எண்ணம் கொண்டவராக விளங்கினார். மனைவி 21 வயது எட்டிய பின்னரும் கருத்தரிக்கவில்லை என உறவினர்கள் வம்பு பேசினர். வழக்கறிஞர் பணியில் கைநிறைய சம்பாதித்த ஐயரை மறுமணம் செய்யும்படியும் வற்புறுத்தினர். ஆனால் அவர். ''நான் கடவுளை நம்புகிறவன். இப்படித்தான் என் வாழ்க்கை என அவர் தீர்மானித்து விட்டால் அதற்கு மேல் அப்பீல் கிடையாது. அதே சமயம் என்னைச் சார்ந்தே வாழ வேண்டியவள் என் மனைவி. பாரத மாதாவை நான் எப்படி மதிக்கிறேனோ, அப்படியே என் மனைவியையும் நேசிக்கிறேன். குழந்தைப்பேறு இல்லை என்ற குறைக்காக அவளைப் புறக்கணிப்பது மிக கொடுமையான பாவம். அதை செய்யவே மாட்டேன்.

புத்திர பாக்கியம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; என் மனைவி என்ற வாழ்நாள் சொத்தை இழக்க மாட்டேன்'' என திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். ஆனால் ஐயரின் சீரிய எண்ணத்துக்கு அருள் செய்வது போல, சில வருடங்களில் அவருக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். 'நல்லவர்களை கடவுள் கைவிட மாட்டார்' என்பதற்கு இவரது வாழ்வு ஓர் உதாரணம்.

இந்த பண்பாடு அவரது உற்றார், உறவினர், நண்பர்கள் என பலரிடமும் பிரதிபலித்து அவர்கள் அனைவரும் இல்லறப் பண்பைப் பேணிப் பாதுகாத்தனர். விடுதலைக்கு முன்பிருந்தே அதாவது 1946 முதல் 1951வரை மேலுார் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சேவையாற்றிய ஐயர், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றினார். அப்பகுதி மக்கள் அடிக்கடி பிளேக், காலராவால் அவதிப்பட்டு வந்தனர். அந்தத் தொகுதி முழுவதும் சுகாதார மையங்களை உருவாக்கி மக்களின் துயர் துடைத்தார். பல கிராமங்களில் பள்ளிக்கூடங்களை நிறுவினார். பகுதி முழுவதும் கிணறுகள் வெட்டி குடிநீர் பிரச்னையை போக்கினார்.

ஆனாலும் மேலுாரில் ஒருமுறை கடும் வறட்சி நிலவியது. உடனே பெரியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வைகை ஆற்றில் தண்ணீர் கொண்டுவரச் செய்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாகப் போவதில் இருந்து பாதுகாத்தார். கால்நடைகள் வாயால் நீரருந்தி, கண்களால் கண்ணீர் பெருக்கி, அவருக்கு நன்றி தெரிவித்தன. தொகுதி மக்களின் காவல் தெய்வமாகவே ஐயர் மாறிவிட்டார்.

இந்திய சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில் 1947ல் மனைவி அகிலாண்டம் அம்மையாருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதற்கு முன் இவ்வாறு புகைப்படம் எடுக்கவோ, அதை பலர் பார்க்க வீட்டில் மாட்டவோ விரும்பாத ஐயர், சுதந்திரம் அடைந்து விட்டதை மகிழ்ச்சியுடன் கொண்டாடியிருக்கிறார் என்றால் பாருங்கள்!

மக்கள் சேவையே உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்த இவரின் உடல்நலம் குன்ற ஆரம்பித்தது. சுதந்திரப் போராட்டங்களால் ஆட்சியரின் தாக்குதல், சிறை வாசத்தால் ஏற்கனவே உடல் நலிந்திருந்தார். ஆனாலும் இந்நிலையிலும் தன் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லையே என்ற ஆதங்கம் அவரை வாட்டியது. ஆமாம், தமிழகத்தில் ஆங்காங்கே புதிது புதிதாக ஜாதியக் கலவரம் ஏற்பட்டது. குறிப்பாக எங்கெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டார்களோ, அங்கெல்லாம் தன் உடல் நலிவைப் பொருட்படுத்தாமல், உடனே சென்று தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். தன்னிடம் மிஞ்சியிருந்த சொத்து, பொருட்களை விற்று அவர்களுடைய நலனுக்காகச் செலவிட்டார்.

ஆனால், தேச துரோகிகளின் துாண்டுதலாலும், அற்பப் பணத்துக்கு ஆசைப்பட்டும் இவ்வாறு கலவரங்களை உருவாக்கியவர்களுக்கு ஐயர் நிரந்தர எதிரியாக தெரிந்தார். அதனால் அவர் எவ்வளவுக்கெவ்வளவு ஜாதி இணக்கத்துக்காகப் பாடுபட்டாரோ, அந்த அளவுக்கு எதிர்ப்புகளும் பெருகிக் கொண்டே வந்தன.

''சர்வேஸ்வரா, ஒன்றுபட்ட பாரதம் எப்போது உதயமாகும்? என்றைக்குத் தான் மக்கள் ஒருவருக்கொருவர் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வார்கள்? ஆட்சி வெறியில் ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு சதி செய்து எங்களிடையே ஒற்றுமையின்மை உருவாக்கி விட்டனரே, இந்த கொடுமை இந்தியா சுதந்திரம் அடைந்து விட்ட பின்னரும் தொடருகிறதே, இது என்ன நியாயம்? இதனால் மக்களில் சிலரிடம் தேசிய உணர்வே இல்லாமல், உள்ளம் மரத்துப் போய்விட்டதே, இதற்கு விடிவே கிடையாதா...'' என்றெல்லாம் ஏங்கித் தவித்தார்.

இந்த ஏக்கமே, எந்த வகை மருத்துவ சிகிச்சையாலும் அவரை குணப்படுத்த முடியாதபடி செய்து விட்டது. ஆமாம், 1955ம் ஆண்டு பிப்ரவரி 23ல் உலகை நீத்தார். இப்போதும் அவரை அடையாளம் காட்ட, அவருடைய மேன்மையான சற்குணத்தைக் காட்சிப்படுத்த, மீனாட்சி அம்மன் கோயில் அருகே அவரது திருவுருவச் சிலை கம்பீரமாக நிற்கிறது.

1999ல் அஞ்சல் தலை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டு அவரது சேவைகளைப் பெருமைப்படுத்தியிருக்கிறது.

-அடுத்த வாரம்: மதன் மோகன் மாளவியா

பிரபு சங்கர்

72999 68695






      Dinamalar
      Follow us