ADDED : நவ 17, 2023 01:22 PM

மதி கெடுக்கும் மந்தரை
தன்னை ஒருவர் கேலி செய்வதை அவமானமாகக் கருதும் மனோபாவம் மனிதரின் இயல்புதான். அதுவும் சரிசெய்ய முடியாத உடற்குறையைச் சுட்டிக்காட்டி பரிகாசம் செய்வது இன்னும் கொடுமை.
இதை அனுபவித்தவள் மந்தரை என்னும் கூனி. அதுவும் ராமனே கேலி செய்ததை அவளால் ஏற்க முடியவில்லை. பாலகனே ஆனாலும் அவன் சிறந்த பண்பாளன், அன்பே உருவானவன். பிறர் துன்பம் சகியாதவன் என்றெல்லாம் பாராட்டப்படும் ராமன் எள்ளி நகையாடுவதுபோல செயல்பட்டதை அவள் சகிக்கவில்லை.
ஆமாம், நண்பர்களுடன் உண்டிவில் வைத்து விளையாடிய ராமன், அந்தப் பக்கம் சென்ற மந்தரையை பார்த்ததும் அவளின் வளைந்த முதுகின்மீது கல் ஏவினான். கூனிக்கு வலி ஏற்படாவிட்டாலும் ராமன் கேலியாக விளையாடியது வேதனை அளித்தது.
நண்பர்கள், 'ஏன்டா ராமா இப்படி செய்தாய்? கூனியின் முதுகைப் பார்த்து கல் எறிந்தாயே? நீ அப்படி செய்பவன் இல்லையே' எனக் கேட்டனர்.
'அடடா, நீங்கள் அப்படியா நினைக்கிறீர்கள்? மன்னியுங்கள். நல்ல நோக்கத்தோடு தான் செய்தேன். கொல்லன் பட்டறையில் வளைந்த இரும்புக் கழியை சுத்தியலால் அடித்து நிமிர்த்துவதை பார்த்திருக்கிறேன். அதுபோல உண்டிவில் அடித்து கூனை நிமிர்த்த முடியாதா என்ற ஆதங்கத்தால் செய்தேன்' என அப்பாவியாகக் கேட்டான். நண்பர்களுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்றாலும், அவர்கள் அவன் மனதை புரிந்து கொண்டனர். தன் எண்ணத்தை மந்தரையும் உணர்ந்திருப்பாள் எனக் கருதியதால் ராமனும் மன்னிப்பு கோரவில்லை.
ராமனுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்க நண்பர்கள் இருந்தனர். ஆனால் அவள் இந்த அவமானத்தை தன் எஜமானி கைகேயியிடம் கூடத் தெரிவிக்கவில்லை. மனதிலேயே வைத்துக் கொண்டு கூனிக் குறுகினாள்.
அவளிடம் அகம்பாவம் நிரம்பியிருந்தது. தான் ஒரு சேடிப் பெண் என்றாலும், அவ்வாறு சேவை புரிவது மகாராணிக்கு என்ற கர்வம் அவளுக்குள் இருந்தது. 'சீதன வெள்ளாட்டி' என்ற அந்தஸ்தில் கைகேயியுடன் வந்தவள் அவள். அதாவது தசரதரை மணந்த கைகேயி சீதனப் பொருட்களோடு, பிறந்த வீட்டில் தன்னைப் பராமரித்து வந்த சேடிப் பெண் மந்தரையையும் உடன் அழைத்து வந்தாள். இப்படி வரும் பெண்ணை 'சீதன வெள்ளாட்டி' என்பர். இதனால் மந்தரைக்கு பிற சேடிப் பெண்களை விட தான் மேலானவள் என்ற செருக்கு இருந்தது. ராணியின் சேவகி என்பதால் மற்ற சேடிப் பெண்கள் தனக்கு சேவகம் புரிய வேண்டும் என எதிர்பார்த்தாள் மந்தரை. உண்டிவில்லால் ராமன் அடித்தான் என புகார் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், தன்னை மேலும் கேலி செய்வார்கள் என தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.
ஆனால் துரதிருஷ்டவசமாக, அந்தச் சம்பவம் அவளுக்குள் சுடராக ஆரம்பித்து உலை நெருப்பாக, காட்டுத் தீயாக, ஊழித் தீயாக வியாபித்து ராமன் மீதான விரோதத்தை வெகுவாக வளர்த்தது. ராமனை பழி வாங்க வேண்டும் எனக் காத்திருந்தாள். அந்த ஐந்து வயதுச் சிறுவன், பன்னிரு வயதினனாக வளர்ந்து, திருமணம் புரிந்து, அயோத்தியில் பன்னிரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் மந்தரை மனதில் வன்மம் மறையவில்லை. சரியான சந்தர்ப்பம் வரும்வரை காத்திருந்தாள். பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தாலே, உடனே அதற்கு நீண்ட ஆயுள் அமைந்து விடும். அதற்கு பதிலாக, 'ஏன்டா ராமா என் மீது கல் எறிந்தாய்? என்னைப் பார்த்தால் பாவமாக இல்லையா?' என கேட்டிருந்தால் இத்தனை துயரம் ஏற்பட வாய்ப்பில்லை. அவளது சுபாவமே யாருக்காவது, எப்படியாவது கேடு நினைப்பதுதான் என்ற விதி உள்ளதால் சாத்வீகமாக அவள் சிந்திக்கவில்லை.
ராமனுக்கு மறுநாள் மகுடம் சூட்டுவதாக தசரதர் அறிவித்தார். திடுக்கிட்டாள் மந்தரை. ராமன் அரியணை ஏறினால் பழி வாங்கவே முடியாது. ராஜாங்க சட்ட திட்டங்கள், அரசருக்கான பாதுகாப்பு வழிமுறைகள் என எல்லாம் வந்து விடும். தன் எண்ணம் ஈடேற வாய்ப்பில்லை. உடனே காரியத்தில் இறங்க வேண்டும்…
அவ்வளவுதான் அவளது மனதில் அடுத்தடுத்த திட்டங்கள் உருவாயின. விறுவிறு என நடந்தாள். கைகேயியின் மாளிகையை அடைந்தாள்.
தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல்
மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள்
பண்டைநாள் இராகவன் பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்
- கம்பர்
கைகேயி உறங்கிக் கொண்டிருந்தாள். அருகே சென்று 'துன்பம் உணராமல் இப்படித் துாங்குகிறாயே' என தடித்த குரலால் எழுப்பினாள்.
கண் மலர்ந்த கைகேயி, 'எனக்கு என்ன துயரம்? என் பிள்ளைகள் அமோகமாக வாழ்கிறார்கள். அயோத்தியில் யாருக்கும் துன்பம் இல்லை. எனக்கு மட்டும் எங்கிருந்து வருமாம் துன்பம்' என்றாள்.
'உன் அறியாமை நகைப்பைத் தருகிறது. நாளைக்கு ராமனுக்கு பட்டாபிஷேகம், தெரியுமா' என கோபித்தாள் மந்தரை.
'ஆஹா... நல்ல செய்தி சொன்னாய். உற்சாகமாகச் சொல்ல வேண்டியதை இப்படி கோபமுடன் பொரிகிறாயே, பைத்தியக்காரி' என பூரிப்பில் தன் சேடியை சாடினாள் கைகேயி.
'அட, முட்டாளே' கைகேயி கொடுத்திருந்த சுதந்திரத்தால் அவளை வசை பாடவும் மந்தரையால் முடிந்தது. 'ராமனுக்கு பட்டம் என்றால் உனக்கு வாட்டம் என்பது புரியவில்லையா? உனக்கென ஒரு மகன் இருக்கிறான். உன்னை மணம் புரிந்தபோது உன் தந்தைக்கு தசரதர் என்ன வாக்குக் கொடுத்தார்? உன் மகளுக்குப் பிறக்கும் மகனே ராஜாங்க வாரிசு என்றாரா இல்லையா'
'ஆமாம், ஒருவேளை கோசலைக்கு மகப்பேறு கிட்டாமலேயே போகுமோ என்ற ஆதங்கத்தில் அப்படி சொன்னார். ஆனால் ராமன் தோன்றிவிட்டானே? மூத்தவன் அரியணை ஏறுவதுதானே சம்பிரதாயம்'
'கோசலைக்கு மகன் என்பது இருக்கட்டும். உன் மகனும் உனக்கு மூத்த பிள்ளைதானே? அதோடு கோசலையை ஒப்பிடும் போது உன் பாரம்பரியம் பெரியது. அயோத்தி சிம்மாசனத்தில் அமர உன் மகன் பரதனுக்கே உரிமை அதிகம் உள்ளது'
ஏதோ நகைச்சுவை போல கைகேயி குரலெடுத்துச் சிரித்தாள். 'அரசபதவிக்கு மூத்த மகன் என்ற தகுதி அவசியம். இதுகூட தெரியாமல் இத்தனை ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்தாயே... எல்லாம் வீண்தான்'
'ராமனுக்கு சிம்மாசனம் ஏற என்ன தகுதி இருக்கிறது? தாடகை என்ற பெண்ணைக் கொன்ற குற்றவாளி அவன். அவனுக்கு பெண்கள் மீது இரக்கமே கிடையாது. ஆகவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நேரடியாக இல்லாவிட்டாலும் தன் தாயார் கோசலை மூலம் உனக்கு துன்பம் இழைக்க தயங்க மாட்டான்'
'சும்மா உளறாதே' என மந்தரையைத் தவிர்க்க கைகேயி முயன்ற போதே இவள் மனதிலும் லேசாக சந்தேக கோடு விழுந்தது.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695