ADDED : நவ 17, 2023 01:23 PM

சிக்கலில் வேல் வாங்க செந்துாரில் சம்ஹாரம் என கூறுவர். நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் வேல் வாங்கும் விழாவும், துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சூரசம்ஹார விழாவும் புகழ் பெற்றவை என்பதே அதன் பொருள்.
சிங்காரவேலவர் தாயிடம் வேல் வாங்கும்பொழுது அவருடைய முகத்தில் வியர்வை அரும்பும் அதிசயத்தை இன்றும் சிக்கலில் பார்க்கலாம். மனிதர்களுக்கு தானே வியர்வை அரும்பும். கடவுளுக்கும் வியர்க்குமா என்ன...
மனிதர்கள் தங்கள் முகத்தில் வழியும் வியர்வையை எப்படி சர்வ சாதாரணமாக துடைத்துக்கொள்கிறார்களோ, அதைப் போல அசுரர் கூட்டத்தையும் சுப்பிரமணியர் துடைத்து எறிந்தார். சிக்கலில் நடப்பதைப்போல திருச்செந்துார் முருகனுக்கும் வியர்வை அரும்பும். இதனால் திருச்செந்துார் முருகப்பெருமானுக்கு சந்தனம் அரைத்து முகத்தில் காப்பிடுவது வழக்கம்.
திருச்செந்துார் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருந்த முருகப்பெருமானை காண அப்போதைய கலெக்டர் லுாசிங்டன் வந்தார். முருகனுக்கு நடத்தப்படும் பதினாறு வகை வழிபாட்டு உபசாரங்களுள் விசிறி வீசுதல் ஒன்று. முருகப்பெருமானுக்கு அர்ச்சகர் விசிறி வீசுவதை கண்டார். அதைப்பார்த்த அவர் உங்கள் கடவுளுக்கு என்ன வியர்க்குமோ? என கேலி செய்தார். அர்ச்சகரும் துணிவை வரவழைத்துக் கொண்டு, “ஆம்… எங்கள் முருகனுக்கு வியர்க்கும்.” என்று கூறி, சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலையை அகற்றி காண்பித்தார். முருகன் சிலையில் திட்டு திட்டாக வியர்வை அரும்பி இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டார் கலெக்டர்.
வீடு திரும்பிய கலெக்டருக்கு மனைவியின் வடிவில் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் அவர் திடீரென வயிற்று வலியினால் அவதிப்பட்டார். முருகனுடைய வழிபாட்டை கேலி செய்ததே காரணம் என்பதை உணர்ந்தார். அர்ச்சகரிடம் வந்தார். நடந்ததை சொன்னார். அர்ச்சகர் கூறிய படி, முருகப்பெருமான் சன்னதிக்கு சென்று “பிரபுவே என்னை மன்னித்து விடு. என் மனைவியை காப்பாற்று. அவள்படும் கஷ்டத்தை கண்டு என்னால் தாங்க முடியவில்லை” என மனமுருக வேண்டினார்.
பெருமானின் கருணையினால் அவரின் மனைவிக்கு வந்த வயிற்றுவலி நீங்கியது. அவர், வேண்டிய படியே 'லுாசிங்டன் 1803' என்ற முத்திரை பொறித்த வெள்ளிப் பாத்திரங்களை காணிக்கையாக கொடுத்தார். அது இன்றளவும் திருக்கோயிலில் உபயோகத்தில் உள்ளது.