sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 44

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 44

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 44

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 44


ADDED : நவ 17, 2023 01:40 PM

Google News

ADDED : நவ 17, 2023 01:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நச்சுப் பொய்கை

எமனிடம் இருந்து சத்யவானின் உயிரை மீட்டு குடிலுக்கு திரும்பினாள் சாவித்ரி.

அவன் துாங்கி எழுந்தது போன்ற ஒரு உணர்வில் தான் இருந்தான். சத்யவானின் தந்தையான துய்மத்சேனனுக்கு பார்வை திரும்பியிருந்தது. ''சாவித்ரி... என் இனிய மருமகளே! சற்று முன் என் முன்னே இரு தேவர்கள் தோன்றி என் கண்களுக்குள் அமிர்தத்துளிகளை செலுத்தினர். அதன் பயனாக இளமையோடு கூடி பார்வை வாய்த்தது. அவர்கள் உன் விரத மகிமையே இதற்கு காரணம் என்றனர்'' என்று கூறிக் கொண்டிருக்கும் போதே துய்மத்சேனனின் படைத்தளபதியும் அமைச்சரும் அந்த குடிலுக்கு ஒரு நான்கு குதிரைகள் பூட்டிய ரதங்களில் வந்திறங்கி வணங்கி நின்றனர்.

இருவரையும் பார்த்த துய்மத்சேனனும், ''என்ன விஷயம் அமைச்சரே'' எனக் கேட்க, ''அரசே... நம் எதிரிகள் தவறை உணர்ந்து திருந்தி நாட்டை விட்டே ஓடி விட்டனர். நாட்டில் எல்லோரும் உங்கள் வருகைக்காக காத்திருக்கின்றனர்'' என்றார் அமைச்சர்.

துய்மத்சேனன் உணர்ச்சிப் பெருக்கோடு, ''மருமகளே சாவித்ரி... இதெல்லாம் உன் விரதத்தின் மகிமையம்மா... பெண் நினைத்தால் பாலையையும் சோலையாக்க முடியும், பாறையிலும் பயிர் வளர்க்க முடியும் என்பதை சாதித்துக் காட்டி விட்டாய்''என உணர்ச்சிவயப்பட்ட அதே வேளை சாவித்ரியின் தந்தையான அஸ்வபதியும் தாய் மாளவிகாவும் அங்கு வந்து சேர்ந்தனர். 'சாவித்ரி... மகளே... உன் வரசித்திகளை ஒரு தேவதுாதன் கூறக் கேட்டு ஓடி வருகிறோம். அதே தேவதுாதன் எங்களுக்கு அமிர்தம் உண்ணத் தந்தான். அதனால் புத்திர பிராப்தியை பெற்றோம்.இப்படி வரசித்தி பெற நாங்கள் தவம் செய்யவில்லையே என்ற போது 'சாவித்ரியை மகளாக பெற்றதே மேலான தவம்' என அந்த தேவன் உரைத்தான். வருங்கால பெண்களுக்கெல்லாம் நீ பெரும் உதாரணமாகி விட்டாய்'' என்றான் அஸ்வபதி.

மொத்தத்தில் அங்கே திரும்பிய பக்கமெல்லாம் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.

...

சத்யவான் சாவித்ரி வரலாற்றை மார்க்கண்டேயர் சொல்லி முடித்த நிலையில் திரவுபதியைத் தான் அவர் பார்த்தார். திரவுபதிக்கும் அதற்கான அர்த்தம் புரிந்தது. ''மகரிஷி... தாங்கள் எனக்கு முன்னோடியான சாவித்ரியின் வரலாற்றைக் கூறி வழிகாட்டியுள்ளீர்கள். கற்பு நெறியும், உறுதியான பக்தியும் இருந்தால் சாதிக்க முடியாததே இல்லை என்பதை உணர்த்தி விட்டீர்கள். என் மனம் அந்த சாவித்ரி தேவியால் புதுதெம்பை பெற்றுள்ளது'' என்றாள் திரவுபதி.

''ஆம் மகரிஷி. இந்த வரலாறு நாங்களும் இழந்த நாட்டை கட்டாயம் திரும்பப் பெறுவோம் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. சரியான நேரத்தில்

சரியான வரலாறைக் கூறி மனச்சோர்வை அகற்றிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வந்தனங்களும் என்றும் உரியது'' என்றான் தர்மன். அதை சகோதரர்கள் நால்வரும் ஆமோதித்தனர்.

அதன் பின் மார்க்கண்டேயரும் தன் நித்ய கடமைகளைப் புரிந்திட அவர்களிடம் இருந்து விடை பெற்றார்.

...

ஒருநாள் பாண்டவர்கள் தம் தந்தையான பாண்டுவுக்குரிய சிராத்த சடங்கிற்காக காம்யக வனத்தில் இருக்கும் ஒரு அருவியில் நீராடச் சென்றனர். திரவுபதியை தனியே விட்டுச் செல்ல தயங்கிய போது, ''எனக்கு ஒரு பயமும் இல்லை. சாவித்ரி தேவியார் உபாசித்த மந்திரம் எனக்கும் துணை செய்யும். நீங்கள் வரும் வரை அதை ஜபித்தபடி இருப்பேன்'' என அவர்களை அனுப்பி வைத்தாள்.

ஐவரும் அருவி பாயும் இடத்திற்குப் போன போது அங்கே ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த அருவி வறண்டு காய்ந்து போயிருந்தது. கோடைகாலத்தில் அருவிகள் வறண்டு போவது இயற்கை. எங்காவது சுனை இருந்தால் நீராடலாம் என சுனையைத் தேடத் தொடங்கினர்.

நடந்து வந்த களைப்பு தீர மரநிழல் ஒன்றின் கீழ் அமர்ந்தனர். அப்போது நகுலன் ஒரு காரியம் செய்தான். அந்த மரத்தின் மீதேறி அருகில் எங்காவது சுனை இருக்கிறதா என பார்த்தான். தொலைவில் ஒரு சுனை மீது சூரியக்கததிர்கள் பட்டு தகதகப்பு தெரியவே அருகில் சென்று பார்க்க விழைந்தான். அதற்காக தர்மனிடம், ''அண்ணா... அருகில் சுனை இருப்பது போலிருக்கிறது. அங்கே சென்று குடிப்பதற்கு இதோ இந்த அம்பறாத்துாளியில் முகர்ந்து வருகிறேன்'' என புறப்பட்டான்.

''பார்த்து கவனமாக போய் வா'' என தர்மனும் அனுப்பி வைத்தான். மற்ற மூவரும் நடந்து வந்த களைப்பில் மரத்தண்டின்மீது சாய்ந்து கண் அயர்ந்தனர்.

நகுலனும் காட்டுப் பாதையில் செடி, கொடிகளை விலக்கிக் கொண்டு நடந்தவனாய் அந்த பொய்கையை அடைந்தான். அங்கு பன்னீர் போல நீர் நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட மறுவினாடியே அதை அள்ளிப் பருகும் விருப்பம் நகுலனுக்கு உண்டானது. வேகமாய் அதன் அருகே சென்று பருக முற்பட்டு கைகளை நீரில் நனைத்த போது, ''நில்... தொடாதே நீரை'' என அசரீரி கேட்டது. திடுக்கிட்ட நகுலன் நாலாபுறமும் பார்த்தான். எவருமில்லை. ஆச்சரியம் அடைந்தவனாக திரும்ப நீரில் கை வைத்தான்.

''உன்னைத்தான் மாத்ரி புத்ரனே! நில், நீரை அருந்தாதே''என்று நகுலனின் தாயான மாத்ரியின் பெயரைக் கூறி குரல் ஒலித்தது. நகுலனும், ''யார் அது'' என கேள்வி எழுப்பினான்.

''நானொரு யட்சன். இந்த பொய்கைக்கு அதிபதி. என் கேள்விகளுக்கு சரியான பதில் கூறுபவர்களுக்கே இதில் நீர் அருந்த அனுமதி'' என்றது அக்குரல்.

''வனப் பொய்கை அனைவருக்கும் பொதுவானது. இதில் நீர் அருந்த அனுமதி என்பது வேடிக்கையானது. முகம் காட்டாமல் மறைந்து கொண்டு ஒலிக்கும் உன் குரலுக்கெல்லாம் நான் பணிய மாட்டேன்'' என்று நகுலன் தாக மிகுதியில் பொய்கை நீரை அள்ளிக் குடித்தான். சில நொடிகளில் அப்படியே மயங்கி விழுந்தான். பின் இறந்தான்.

பொய்கையை கண்டு வரச் சென்ற நகுலன் நெடுநேரமாகியும் வராமல் போகவே தர்மன் தன் தம்பியரில் ஒருவனான சகாதேவனைப் பார்த்து, ''சகாதேவா... நகுலனுக்கு என்னாயிற்று என்று பார்த்து விரைந்து அவனோடு வா'' என்று அனுப்பி வைத்தான். சகாதேவனும் பொய்கையை அடைந்த போது கரையில் நகுலன் உடல் கிடப்பதைக் கண்டு தண்ணீரில் தான் ஏதோ கோளாறு என்று கருதி தண்ணீரைக் குடித்துப் பார்க்க முயன்ற போது மீண்டும் அதே குரல்!

சகாதேவன் கோபம் மிகக் கொண்டான். ''காட்டிலுள்ள பொய்கைக்கு சொந்தம் கொண்டாட நீ யார்'' என்று கேட்டான்.

''இது என் கட்டுப்பாட்டிலுள்ள பொய்கை. என் கேள்விகளுக்கு சரியான விடை சொல்பவருக்கே நீர் அருந்த அனுமதி'' என்றான் மாய யட்சன்.

''வினோதம்... விசித்திரம்... தண்ணீர் அருந்த அனுமதியா... ஒளிந்திருந்து பேசும் கோழையே! நேரில் வா'' என்றபடியே சகாதேவனும் நீர் அருந்தினான். சில நொடிகளில் மயங்கி விழுந்து இறந்தான்.

அடுத்து அர்ஜுனன் வந்தான். அவனும் யட்சனின் குரலை அலட்சியம் செய்து நீர் அருந்தி மயங்கி விழுந்து இறுதியில் பிணம் ஆனான். அடுத்து பீமனுக்கும் அதே கதி நேரிட்டது. பொய்கையின் கரையில் வரிசையாக பாண்டுவின் புத்திரர்கள் நால்வரும் பிணங்களாக கிடக்க இறுதியாக தர்மன் வந்தான். நால்வரின் நிலை கண்டு மனம் பதைத்தான். எதனால் இப்படி ஆயிற்று? என தர்மன் எண்ணும் போதே, 'என் கேள்விகளுக்கு சரியான பதிலைக் கூறினால் நீர் அருந்தலாம்' என யட்சன் குரல் ஒலித்தது.

-தொடரும்

இந்திரா செளந்தர்ராஜன்

98947 23450






      Dinamalar
      Follow us