ADDED : நவ 24, 2023 09:17 AM

காஞ்சி மஹாபெரியவர் தலைமையில் மடத்தில் திருக்கார்த்திகை விழா கொண்டாடப்படும். அன்று வாழை மரம், மாவிலைத் தோரணம் கட்டுவர். மாலையில் தீபமேற்றுவதற்காக அகல் விளக்குகளில் இலுப்பை எண்ணெய் ஊற்றி தயார் நிலையில் வைத்திருப்பர்.
இதன் சிறப்பை பற்றி மஹாபெரியவர், 'முருகப்பெருமானுக்கு உகந்த இலுப்பை எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றினால் எதிரி தொல்லை, கடன் பிரச்னை மறையும். உடல்நலம் சிறக்கும். ஆயுள் பெருகும். சகோதர உறவு பலப்படும். சகோதர பாசத்தை வளர்க்கும் விழா.
திருக்கார்த்திகை தீபவிழா மாலையில் சாயரட்சை பூஜை முடிந்த பின் தீப்பந்தம் ஒன்றில் 'குங்குளயம்' என்னும் தீபத்தை மந்திர முழக்கத்துடன் சீடர்கள் ஏற்றுவர். பெண் பக்தர்கள் சிவ சகஸ்ர நாமம், லிங்காஷ்டகம், சிவ அஷ்டோத்ர பாராயணம் செய்வர். அதன்பின் கார்த்திகை பொரி, வெல்லம் சேர்ந்த உருண்டைகள் நைவேத்யம் செய்யப்படும். தொடர்ந்து மடத்தின் எல்லா பகுதிகளிலும் விளக்கு ஏற்றப்படும்.
அப்போது மஹாபெரியவரின் முன்னிலையில் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, மட்டைத் தேங்காய் வைத்து தானம் அளிப்பார்கள். மட்டைத் தேங்காய் தானத்தால் நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். சகோதரிகளுக்கு பூ, பழம், வெற்றிலை பாக்கு, மட்டைத் தேங்காய் கொடுத்தால் தானம் அளித்த சகோதரரும், பெற்றுக் கொண்ட சகோதரியும் நீண்ட ஆயுளைப் பெறுவர். கார்த்திகை பவுர்ணமியில் சந்திரனை (நிலா) வழிபட்டால் வாழ்வு பிரகாசிக்கும். கார்த்திகை மாத ஞாயிறன்று காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயிலில் கொடிமரத்திற்கு அருகிலுள்ள சூரியனை வழிபட்டால் நோய் தீரும் என மஹாபெரியவர் விளக்கம் அளிப்பார்.
பின்னர் பக்தர்களுக்கு பொரி உருண்டை, அப்பம் பிரசாதமாக வழங்குவர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.