sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அசுர வதம் - 7

/

அசுர வதம் - 7

அசுர வதம் - 7

அசுர வதம் - 7


ADDED : நவ 24, 2023 09:26 AM

Google News

ADDED : நவ 24, 2023 09:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பகாசுரன் வதம்

ஏகச்சக்கரம் எனும் ஊரை ஒட்டியிருந்த காட்டிற்குள் வசித்து வந்தவன் பகாசுரன் என்னும் அரக்கன். கோரைப்பற்களும், அழகற்ற முகமுமாக பயமுறுத்தும் தோற்றம் கொண்ட அவனுக்கு மனித இறைச்சி சாப்பிடுவதில் விருப்பம் அதிகம். அவனுக்குப் பசியெடுத்தால் போதும், ஏகச்சக்கரம் ஊருக்குள் நுழைந்து கையில் சிக்கும் மனிதரை எல்லாம் கொன்று சாப்பிடுவான்.

அவன் ஊருக்குள் வரும் போதெல்லாம் வயல்களில் பயிரிட்ட காய்கறிகளைப் பறித்துச் சாப்பிடுவான். மேய்ந்து கொண்டிருக்கும் கால்நடைகளைக் கொன்று சாப்பிடுவான். ஊரிலுள்ள வீடுகளின் கூரைகளைப் பிய்த்தெறிவான். ஒவ்வொரு முறையும் அவனால் ஏற்பட்ட இழப்பு அதிகமாகிக் கொண்டே போனது. அந்த ஊர்த் தலைவர், “பகாசுரனே... உணவுத் தேவைக்காக எங்கள் ஊருக்குள் பெரும் இழப்பை ஏற்படுத்த வேண்டாம். வாரத்திற்கு ஒருமுறை ஒரு வண்டி நிறைய அறுசுவை உணவு அனுப்புகிறோம். அதைக் கொண்டு வரும் நபரையும் நீ சாப்பிட்டுக் கொள்” என்றார். பகாசுரனும் சம்மதித்தான். ஒப்பந்தப்படி வாரந்தோறும் வண்டி நிறைய உணவும், அந்த ஒரு நபரும் அசுரனுக்கு இரையாகிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் துரியோதனன் உருவாக்கிய அரக்கு மாளிகையை தீயிட்டு அழித்து விதுரர் உதவியுடன் சுரங்கம் வழியாக தப்பிய பாண்டவர்கள் தங்களின் தாய் குந்தியுடன் இடும்ப வனத்திற்குள் நுழைந்தனர். இந்த விஷயம் துரியோதனனுக்குத் தெரிந்தால் ஆபத்து நேருமே என அஞ்சி அந்தணர்கள் போல மாறுவேடமிட்டு மறைந்து வாழ்ந்தனர். அருகிலுள்ள மலைக் கிராமங்களில் பிச்சையெடுத்து உண்டனர். ஒரே இடத்தில் தங்காமல் அடிக்கடி இடத்தை மாற்றி தங்கினர். அப்படி செல்லும் வழியில் ஏகச்சக்கரம் என்னும் ஊருக்குள் நுழைந்தனர். அங்கிருந்த ஏழை அந்தணர் ஒருவர், அவர்களைத் தன் வீட்டில் தங்க அனுமதித்தார்.

ஒருநாள் இரவு அந்தணரும் அவரது மனைவியும் தங்களுக்குள் பேசுவதையும், தொடர்ந்து அந்தணரின் மனைவி அழுவதையும் குந்தி கண்டாள். அவர்களிடம் அதற்கான காரணத்தைக் கேட்டாள்.

பகாசுரன் பற்றி சொன்ன அவர்கள்,நாளை இரவு எங்களின் குடும்பத்தில் இருந்து ஒரு நபர் வண்டி நிறைய உண்டு எடுத்துச் செல்வதுடன் அவனுக்கு பலியாக இருப்பதையும் தெரிவித்தார் அந்தணர்.

அந்தணரின் மனைவி அழுதபடியே “என் மகனை அனுப்பலாம் என்றால் நான் இறந்தால் செய்ய வேண்டிய இறுதிக்கடனை அவனால் செய்ய முடியாமல் போகுமே. மருமகளை அனுப்பலாம் என்றால் அவள் எங்கள் வீட்டிற்கு வாழ வந்த பெண். அவளைக் காப்பாற்றாமல் போன பாவத்திற்கு ஆளாவோமே. என் கணவரை அனுப்பலாம் என்றால் அவரில்லாமல் என்னால் வாழவே முடியாது. நான் செல்லலாம் என்றால் என்னை விட என் கணவரைக் கவனித்துக் கொள்ள வேறு யாருமில்லையே. அசுரனுக்கு இரையாவது யார் என்பது புரியாமல் தவிக்கிறோம்” என்றாள்

“கவலை வேண்டாம். யாரும் அவனுக்கு இரையாக வேண்டாம். என் ஐந்து மகன்களில் ஒருவரை அவனிடம் அனுப்பி வைக்கிறேன்” என்றாள் குந்தி.

“எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்தவர்களை அசுரனுக்கு இரையாக்கும் பாவச் செயலை என்னால் ஏற்க முடியாது” என மறுத்தார் அந்தணர்.

“என் மகன்களில் ஒருவனை அனுப்புவதால் யாருக்கும் தீங்கு ஏற்படாது. அதிலும் என் மகன்களில் ஒருவனான பீமன் படுமுரடன். பலசாலி. அவனைக் கண்டு அரக்கர்களே அச்சப்படுவர். இடும்பன் எனும் அரக்கனை அழித்து அவனது சகோதரியான இடும்பியைத் திருமணம் செய்தவன் அவன். அவன் பகாசுரனைக் கொன்று ஊருக்கே விடுதலை அளிப்பான்” என்றாள்.

அதனைக் கேட்ட அந்தணரும், அவரது மனைவியும் மகிழ்ந்தனர்.

மறுநாள் காலையில் அசுரனுக்குத் தேவையான உணவு மலை போல் தயாரானது. அன்றிரவு அதை வண்டியில் ஏற்றிக் கொண்ட பீமன் அசுரனின் இருப்பிடம் நோக்கி புறப்பட்டான். பசியுடன் காத்திருந்த பகாசுரன், “அட முட்டாளே! உணவைக் கொண்டு வர ஏன் இவ்வளவு தாமதம்?” எனக் கத்தினான்.

பீமன் அதை பொருட்படுத்தாமல் அசுரன் முன்பு அமர்ந்து உண்ணத் தொடங்கினான். அவனை அசுரன் தாக்க முயன்றான். வலது கையால் சாப்பிட்டபடியே இடது கையால் துாக்கி வீசினான் பீமன். சற்று தொலைவில் விழுந்த அசுரன் மீண்டும் தாக்க முயன்றான். பீமன் சாப்பிட்டபடியே மீண்டும் துாக்கி வீசினான். இப்படி பலமுறை தொடர, பீமன் உணவு முழுவதையும் சாப்பிட்டு முடித்தான்.

நீண்ட நாளாக உணவு கிடைக்காமல் பசியோடிருந்த பீமனுக்கு வண்டி நிறைய ருசியான உணவு சாப்பிட்டது மகிழ்ச்சி அளித்தது. பலத்துடன் எழுந்த பீமன் அசுரனைக் கடுமையாக தாக்கினான். பசியோடிருந்த பகாசுரன் சமாளிக்க முடியாமல் உயிர் விட்டான்.

பகாசுரன் உடலைத் தீக்கிரையாக்கிய பீமன் ஊருக்குத் திரும்பினான். அவனைக் கண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதன் பின்னரும் ஏகசக்கரம் ஊருக்குள் தங்கினால் தாங்கள் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்வர் என்பதால் தாயார் குந்தியுடன் பாண்டவர்கள் வேறிடம் நோக்கி நடந்தனர்.

-தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925






      Dinamalar
      Follow us