
பகவத்கீதை மீது ஈடுபாடு கொண்ட காஞ்சி மஹாபெரியவர், அதன்படி வாழ்க்கையை அமைக்க வேண்டும் என போதித்து வந்தார். சொற்பொழிவாளர் ஒருவரிடம், ''கீதையின் பாதையில் தியாகிகள் பலர் நடந்ததால் தான் நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. காந்தி, அரவிந்தர், திலகர், பாரதியார் என தியாகிகளில் பலர் பகவத்கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள். சிறையில் இருந்த போது வினோபாஜி கீதை சொற்பொழிவு நடத்தியிருக்கிறார். கீதைச் சொற்பொழிவு என்பது ஒரு வேள்வி. அதைத் தொடர்ந்து நீ செய்'' என்றார்.
மஹாபெரியவரின் அறிவுரையை அவரும் ஏற்றுக் கொண்டார். ஆனால் கொஞ்ச காலத்திலேயே அவருக்குச் சோர்வு தட்டியது. ஏனென்றால் சொற்பொழிவைக் கேட்க மக்கள் அதிகம் வரவில்லை. என்றாலும் அவ்வப்போது சொற்பொழிவு நடத்திக் கொண்டு இருந்தார்.
ஒருநாள் அவரை அழைத்து கீதை பரப்பும் பணி எப்படி போகிறது என விசாரித்தார் சுவாமிகள். கூட்டமே வருவதில்லை என அவர் அங்கலாய்த்த போது, ''நீ கீதை சொற்பொழிவு செய்பவன். அதன் கருத்தை பின்பற்ற வேண்டாமா? கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்கிறது கீதை. நாம் பலனை எதிர்பார்க்கக் கூடாது. ஆனால் பகவான் கட்டாயம் பலனைத் தராமல் இருக்கமாட்டார். சொற்பொழிவைத் தொடர்ந்து நடத்து! மக்கள் மனதில் மாற்றம் ஏற்படும்'' என்றார்.
''குறைவான எண்ணிக்கையில் மக்கள் வரும் போது மனதில் சோர்வு உண்டாகிறது சுவாமி! சென்ற முறை கீதை கேட்பதற்கு இரண்டே இரண்டு பேர்தான் வந்தனர். அதுதான் எனக்கு ரொம்ப வருத்தம்'' என்றார்.
கலகலவெனச் சிரித்த மஹாபெரியவர், ''உனக்கே வெற்றி. தொடக்கத்தில் இருந்ததை விட இப்போது இருமடங்கு கூட்டம் அல்லவா வருகிறது''
சுவாமிகள் என்ன சொல்கிறார் என சொற்பொழிவாளருக்கு விளங்கவில்லை.
''கீதையை உபதேசித்தவன் யார்? கிருஷ்ணன். அதைக் கேட்டவன் அர்ஜுனன். ஆக முதன் முதலில் கீதையைக் கேட்க ஒருவன்தான் இருந்தான். இப்போது உன்னைப் பொறுத்தவரை இரண்டுபேர் வந்ததாகச் சொன்னாய். அப்படியானால் கீதையைக் கேட்க முன்பு இருந்ததை விட இப்போது இரண்டு மடங்கு கூட்டம் வருகிறது என்றுதானே அர்த்தம்?''
விளக்கம் கேட்ட சொற்பொழிவாளர் தன்னை மறந்து சிரித்தார். தொடர்ந்து ஆர்வமுடன் சொற்பொழிவு செய்ய முடிவு செய்தார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.