sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அசுர வதம் - 8

/

அசுர வதம் - 8

அசுர வதம் - 8

அசுர வதம் - 8


ADDED : டிச 01, 2023 09:04 AM

Google News

ADDED : டிச 01, 2023 09:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ருரு அசுரன் வதம்

தவத்தில் ஈடுபட்ட ருரு என்னும் அசுரன் தன் மாயத் தோற்றத்தைத் தேவையான எண்ணிக்கையில் உருவாக்கிக் கொள்ள பிரம்மாவிடம் வரம் பெற்றான். ஆணவம் கொண்ட அவன் மூவுலகங்களிலும் ஆயிரக்கணக்கான மாயத் தோற்றங்களை உருவாக்கி அங்கிருப்போரை எல்லாம் அழிக்க ஆரம்பித்தான்.

அவனது கொடுமையை தாங்க முடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். வரத்தின் பலத்தால் தற்போது அழிக்க முடியாது. சிலகாலம் பொறுத்திருங்கள். பேராசையால் அவன் தானாக அழிவான் என தெரிவித்தார்.

இந்நிலையில் ஒருநாள் பொதியமலைக்குச் சென்ற அசுரன் அங்கு பார்வதியைக் கண்டான். அழகில் மயங்கி எப்படியாவது தன் மனைவியாக்க வேண்டும் என துடித்தான். அதற்காக பிரம்மாவை வேண்டி தவமிருந்தான். காட்சியளித்த பிரம்மாவிடம் நான்கு வரங்கள் கேட்டான்.

1. மனைவியாக பார்வதி வர வேண்டும்

2.சிவன் தன்னைக் கொல்லக் கூடாது

3. தன் தலை துண்டிக்கப்பட்டாலும் மீண்டும் உயிர் பெற வேண்டும்

4. தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரும் பலமற்றவராக இருக்க வேண்டும்.

உனது எண்ணத்தை மாற்றாவிட்டால் விரைவில் அழிவாய். பார்வதியை அடைய விரும்பினால் சிவபெருமானை நோக்கி தவம் செய் என்று தெரிவித்த பிரம்மா, மற்ற மூன்று வரங்களைக் கொடுத்தார். அவனும் தவம் செய்யத் தொடங்கினான். தவத்தைக் கடுமையாக்க எண்ணி ஒரு நிலையில் சுவாசிக்காமல் மூச்சை அடக்கி தவமிருந்தான். தவவலிமையால் மூவுலகங்களும் தகித்தன.

உயிர்கள் எல்லாம் துன்புற்றன. தவக்கனல் கைலாயத்தை சென்று அடைந்தது. அதைத் தாங்க முடியாதவர் போல சிவனும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அங்கலாய்த்தார். அதைக் கண்ட பார்வதி, 'இந்த வெப்பம் ஏன் ஏற்படுகிறது என தங்களுக்குத் தெரியாதா? அதை தடை செய்யக் கூடாதா? இங்கிருந்து நாம் ஏன் வெளியேற வேண்டும்?'' எனக் கேட்டாள்.

''ருரு என்னும் அசுரன் கடுந்தவம் செய்கிறான். அதிலிருந்து தப்பவே இங்கிருந்து செல்ல நினைக்கிறேன்'' என்றார். “தவமிருக்கும் பக்தனுக்கு வரமளிக்க வேண்டியதுதானே... அதை விட்டு, இங்கிருந்து செல்ல வேண்டும் எனச் சொல்லலாமா'' என்றாள் பார்வதி.

“அசுரனான அவன் உன்னை மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என தவம் செய்கிறான். ஏற்கனவே அவனுக்கு என்னால் இறப்பு ஏற்படக்கூடாது என பிரம்மாவிடம் வரம் பெற்றுள்ளான். அவனை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவனை அழிக்க நீ செல்வதுதான் சரி” என்றார் சிவன்.

அதைக் கேட்டு கோபமடைந்த பார்வதி, “உலகையே காப்பாற்றும் தங்களின் மனைவியான என்னை அடையத் துடிக்கும் அசுரனை அழிக்கிறேன்'' என புறப்பட்டாள்.

பூலோகம் வந்த அவள், மதம் பிடித்த யானை ஒன்று பயிர்களை அழிப்பதைக் கண்டாள். அதைக் கொன்று அதன் தோலை இடுப்பில் சுற்றிக் கொண்டாள். அதன் பின் ஓரிடத்தில் சிங்கம் ஒன்று பசுவைக் கொல்ல முயற்சிப்பதைக் கண்டாள். சிங்கத்தைக் கொன்று அதன் தோலை உரித்து மேலாடையாக அணிந்தாள்.

சிங்கத்தின் ரத்தத்தை உடல் முழுக்கப் பூசிக் கொண்டாள். பெரிய வயிறு, கோரைப் பற்கள், கருப்பு நிறம் என தன்னை கொடூரமாக மாற்றிக் கொண்டு அசுரனை நோக்கி நடந்தாள்.

அசுரனுக்கு முன் எக்காளமாகச் சிரித்தாள். அதைக் கேட்டு விழித்த அசுரன் இடையூறு செய்யாமல் விலகிச் செல்லும்படி வேண்டினான். ''அசுரனே... சிவனின் மனைவியான பார்வதி வந்திருக்கிறேன். என்னைத் திருமணம் செய்ய விரும்புவதாக அறிந்தேன். தவத்தைக் கலைத்து விட்டு சண்டைக்கு வா'' என அழைத்தாள்.

கோபத்துடன் எழுந்த ருரு, '' நான் விரும்பும் பார்வதி உன் போல கொடுசூரி இல்லை. அவளின் பேரழகு என் மனதில் உள்ளது. என் தவத்தைக் கலைத்த உன்னைக் கொல்வது தான் என் முதல்பணி'' என கதாயுதம் ஒன்றை வீசினான்.

அதனைத் தடுத்தபின், அங்கிருந்த பெரிய பாறையை அசுரனின் மீது வீசினாள். அதை அவன் நொறுக்கி எறிந்தான். அதன் பிறகு வாளால் அவன் தாக்க கோபமடைந்த பார்வதியும் கடுமையாகத் தாக்கினாள்.

ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாத ருரு தன் வரபலத்தால் ஆயிரக்கணக்கான மாயத் தோற்றங்களை உருவாக்கினான். அவர்களைக் கண்ட பார்வதியும் பெரிதாக சிரித்தாள். அவளது சிரிப்பில் இருந்து ஆயிரக்கணக்கான யோகினிகள் தோன்றி மாயத் தோற்றங்களை அழிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் பார்வதியிடம் இருந்து தப்பிக்க தேவர் உலகம், பூவுலகம், பாதாள உலகம் என மூன்று உலகங்களுக்கும் மாறி மாறி ஓடினான். மூன்று உலகத்தையும் எட்டும் விதத்தில் தன் உருவத்தைப் பெரிதாக்கி சண்டிகாதேவியாக காட்சியளித்தாள் பார்வதி.

அன்னையின் கண்களிலிருந்து அசுரனால் தப்ப முடியவில்லை. அவனது தலையைத் துண்டித்து ஒரு கையில் வைத்துக் கொண்டாள். அதிலிருந்து வடிந்த ரத்தம் பூமியில் விழாதபடி (அசுரத்தன்மை பரவக் கூடாது என்னும் நோக்கத்தில்) பல சண்டிகைகளைத் தோற்றுவித்து குடிக்கச் செய்தாள்.

தன் கூரிய நகங்களால் அவனின் உடலைக் கீறி தோலை பிரித்தெடுத்து மற்றொரு கையில் வைத்துக் கொண்டாள். உடலை கால்களால் உதைத்து பாதாள உலகிற்கு அனுப்பினாள்.

அதைக் கண்டு தேவர்கள் மகிழ்ந்தனர். சண்டிகா தேவியின் கோபம் குறையவே அவளின் பெரிய உருவமும் குறைந்தது. சண்டிகா தேவியாகவே அங்கிருந்து கைலாயம் சென்றாள். தான் உடுத்திய யானை, சிங்கத்தோல்களை சிவனிடம் கொடுத்தாள். சிங்கத் தோலை இடுப்பிலும், யானைத் தோலை மார்பிலும் சிவன் அணிந்து கொண்டார். அதன் பின் சண்டிகா தேவி தன் கையில் இருந்த அசுரன் ருருவின் தோலை தன்னுடம்பில் போர்த்திக் கொண்டாள். அதைக் கண்ட பிரம்மா, விஷ்ணு, இந்திரன், தேவர்கள், முனிவர்கள் அனைவரும் வணங்கினர். கரிய நிறத்தில் பயங்கரமாக இருந்த சண்டிகா தேவியிடம், அன்பு தவழும் பார்வதியாக காட்சி தர அன்புக் கட்டளையிட்டனர்.

வேண்டுதலை ஏற்று அழகிய பார்வதியாக மீண்டும் மாறினாள். அவளைக் கண்டு மகிழ்ந்தார் சிவபெருமான். அனைவரும் தெய்வத் தம்பதியரை வாழ்த்திப் பாடி மகிழ்ந்தனர்.



-தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925






      Dinamalar
      Follow us