ADDED : டிச 15, 2023 10:59 AM

சினிமாவில் நடிக்க விரும்பி ஊரை விட்டு ஓடியவர் தியாகராஜன். தொழில், அரசியலுக்காக பணத்தை எல்லாம் இழந்தார். ஆனால் இப்போது நலமுடன் வாழ்கிறார் என்றால் அதற்கு காரணம் காஞ்சி மஹாபெரியவரின் ஆசிதான்.
ஒருமுறை ஆந்திராவிலுள்ள கேரம்பள்ளியில் மஹாபெரியவர் முகாமிட்டிருந்தார். அங்கு தியாகராஜனை தன்னுடன் அழைத்துச் சென்றார் அவரது தாய்மாமா ராமதுரை. அதிகாலையில் விஸ்வரூப தரிசனம் செய்யும் போது மனதிலுள்ளதை எல்லாம் சொல்லி அழ நினைத்தார் தியாகராஜன். ஆனால் சுவாமிகளைப் பார்த்ததும் பேச மனமில்லை.
உற்று கவனித்த சுவாமிகள், 'உன் கஷ்டம் தீர்ந்து விடும்' என ஆசியளித்தார். அதன்பின் பாத யாத்திரையில் தியாகராஜனும், அவரது மாமாவும் பங்கேற்றனர். சேவை செய்ய விரும்புவதாக தெரிவித்த போது பூஜைக்குரிய பொருட்களை சுத்தம் செய்ய அனுமதி கிடைத்தது. 'ஜகத்குருவான காஞ்சி மஹாபெரியவர் காலத்தில் நாமும் வாழ்கிறோம்' என எண்ணி பெருமிதம் கொண்டார் தியாகராஜன்.
மற்றொரு முறை காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்க மனைவியுடன் சென்றிருந்தார். கூட்டம் அதிகம் இருக்கவே காத்திருந்தனர். சற்று நேரத்தில் 'மதுரை மீனாம்பாள்' என்று தியாகராஜனின் மனைவி பெயரைச் சொல்லி அழைத்தார் மஹாபெரியவர். தம்பதியர் விழுந்து வணங்கிய போது, 'என்ன வேண்டும்' எனக் கேட்டார். ''எங்களுக்கு இரண்டு வரம் வேண்டும். வீட்டிற்கு வரும் அனைவருக்கும் உணவளித்து மகிழ வேண்டும். எப்போதும் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் வேண்டும்'' என மீனாம்பாள் வேண்டினாள்.
புன்னகைத்த மஹாபெரியவர் கைகளை உயர்த்தி ஆசியளித்தார். பின்னர், 'உங்களுக்கு சொந்த வீடு இருக்கிறதா' எனக் கேட்டார். 'சுவாமி... தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை' என்றாள். 'விரைவில் வீடு கட்டுவீர்கள்' என மீண்டும் ஆசியளித்தார். அதன்படி ஆறே மாதத்திற்குள் சொந்த வீட்டையும் கட்டினர்.
வாழ வைத்த தெய்வமான காஞ்சி மஹாபெரியவரை தியாகராஜன் நினைக்காத நாளில்லை.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப்
போக்கி நலம் தர வேண்டும்.