sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 17

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 17

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 17

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 17


ADDED : டிச 15, 2023 11:16 AM

Google News

ADDED : டிச 15, 2023 11:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யுதாஜித்தின் குழப்பம்

யுதாஜித் என்றால் போரில் பகைவரை எளிதாக வெல்பவன் என பொருள். கேகய நாட்டு மன்னன் அஸ்வபதியின் மகன் இவன்; கைகேயியின் சகோதரன். ஆகவே பரதனின் மாமன்.

ராமாயண காவியத்தின் முக்கிய திருப்பு முனைக்கு பரதனின் கேகய நாட்டுப் பயணம் காரணமாக அமைந்தது. இதைத் திட்டமிட்டு நடத்தியவர் தசரதன்! யுதாஜித்தின் மாமன் பாசத்தை ஒரு கருவியாக வைத்து முக்கியமான அரசியல் தருணத்தில் பரதனை அயோத்தியை விட்டு அனுப்பிய தந்திரசாலி தசரதன்.

மிதிலையில் சகோதரர்கள் நால்வருக்கும் திருமணம் நடைபெற்றது. சிவதனுசை முறித்து சீதையை மணம் புரியும் வாய்ப்பைப் பெற்ற ராமன், ஓர் உத்தமமான அண்ணன் என்ற முறையில் தன் தம்பியர் மூவருக்கும் தன்னுடனேயே திருமணம் செய்விக்க வேண்டும் என கருத்து தெரிவித்தான். நல்லவன் நினைத்தால் எல்லாம் தானே கூடி வரும்தானே? அதேபோல லட்சுமணனுக்கு ஜனகரின் இரண்டாவது மகளான ஊர்மிளை, பரதனுக்கு ஜனகரின் தம்பி குசத்வஜனின் முதல் மகளான மாண்டவி மற்றும் சத்ருக்னனுக்கு இரண்டாவது மகள் சுருதகீர்த்தி ஆகியோர் தயாராகக் காத்திருந்தனர்.

திருமண வைபவத்திற்கு பரதனின் மாமனான யுதாஜித் வருகை தந்தான். ராமனின் பரந்த மனதைப் பெரிதும் பாராட்டினான். மாமனாகிய தன் பொறுப்பில் செய்து வைக்க வேண்டிய பரதனின் திருமணத்தை ராமனே நிறைவேற்றியதில் உள்ளம் மகிழ்ந்தான்.

திருமணமாகி, அயோத்தியில் பன்னிரண்டு ஆண்டுகள் இல்லறம் நடத்திய பிறகு ஒருநாள் தசரதன் பரதனை அழைத்தார். 'பரதா, நீ உன் தாய் மாமன் நாட்டிற்குப் போய் வெகு நாளாகிவிட்டதே. உன் திருமணத்தின்போது பார்த்தது, அதற்கு பிறகு இத்தனை ஆண்டுகள் இருவரும் சந்தித்துக் கொள்ளாமல் இருக்கிறீர்களே! அவரைப் போய்ப் பார்க்க வேண்டும் என தோன்றவே இல்லையா?' எனக் கேட்டார்.

தந்தையாரின் விசாரிப்பு பரதனைச் சற்றே குழப்பியது. அதுதான் ஏதேனும் பண்டிகை, விசேஷம் என்றால் மாமன் வந்து பார்த்துச் செல்கிறாரே, ஒருவேளை நெடுநாள் தங்கவில்லை என சுட்டிக் காட்டுகிறாரோ….

அவன் தயங்குவதை கவனித்தாலும், தன் தந்திர திட்டத்தை தசரதனால் விளக்கிச் சொல்ல இயலவில்லை. ஆகவே குரலில் கடுமையை வரவழைத்தபடி, 'நீ கேகயம் போவது விருப்பம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் உன் பாட்டன் கேகய மன்னன் மற்றும் மாமன் யுதாஜித் இருவரும் உன்னை வரவழைத்துத் தன் அன்பாலும், பாசத்தாலும் மகிழ்விக்க எண்ணலாம் இல்லையா?' எனக் கேட்டார்.

ஆணயின் நினது மூதாதை ஐயநிற்

காணிய விழைவது ஓர் கருத்தன் ஆதலால்

கேணியில் வளை முரல் கேகயம் புக

பூண் இயல் மொய்ம்பினாய் போதி என்றனன்

-கம்பர்

'இங்கே அண்ணல் ஸ்ரீராமனுடன் கழிக்கும் இனிய பொழுதைவிட கேகயத்தில் எனக்கு என்ன பெரிய மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது?' என மனதிற்குள் நினைத்துக் கொண்டான் பரதன். தந்தையாரின் நோக்கம் வெறும் பாசம்தான் என்றால் அவரது யோசனைக்குத் தான் கட்டுப்பட வேண்டும் என ஒரு தவப் புதல்வனாக உடனே புறப்பட்டான்.

அதற்கு முன் அண்ணல் ராமனின் அனுமதியைப் பெற விரும்பினான் பரதன். நேரே ராமன் மாளிகைக்குச் சென்று அவன் பாதம் தொட்டு வணங்கினான். தந்தையாரின் விருப்பத்தைச் சொன்னான்.

அவனைத் தொட்டுத் துாக்கி அணைத்துக் கொண்டான் ராமன். 'தந்தையாரின் விருப்பம்தானே உன் விருப்பமும்? உனக்கும் உன் பாட்டன், மாமனைப் பார்க்க ஆவல் மிகுந்திருக்கிறதுதானே?' என பரிவுடன் கேட்டான்.

'ஒன்றும் இல்லை' என்று சொல்லி பரதனால் மறுக்க முடியவில்லை. அதோடு மறைமுகமாக, 'தந்தையார் சொல்வதை அப்படியே ஏற்பாயாக' என ராமன் அறிவுறுத்துவது போலவே பட்டது அவனுக்கு. ஆகவே தந்தையார் தசரதன் பேச்சும், தமையன் ராமனின் பேச்சும் ஒரே மாதிரியான மரியாதையைத் தருமாறு அவனைப் பணித்தன. பரதனை விட ஒரே ஒருநாள்தான் ராமன் மூத்தவன். ஆனாலும் தன் தந்தையிடம் காட்டும் மரியாதைக்கு சிறிதும் குறைவின்றி தமையனிடம் பரதன் காட்டுகிறான் என்றால் ராம ஈர்ப்பு எத்தனை உயர்வாக இருந்திருக்க வேண்டும்! ஆகவே ராமனின் ஆசியைப் பெற்று பயணத்துக்கு ஆயத்தமானான்.

ராமனுக்கு லட்சுமணன் போல, பரதனுக்கு சத்ருக்னன். கோசலையின் மைந்தன் ராமனுக்கு லட்சுமணனும், கைகேயியின் மகன் பரதனுக்கு சத்ருக்னனும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற சுமித்திரையின் நன்றிக் கடனை அவளின் இரு மகன்களும் செவ்வனே நிறைவேற்றினர். அந்த வகையில் பரதன் செல்லுமிடமெல்லாம் சத்ருக்னன் தொடர்வது வழக்கமாகிவிட்டது.

பரதனுடன் சத்ருக்னனும் செல்வது உறுதியாகிவிட்டதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார் தசரதர். இனி நேரடி சகோதர எதிர்ப்பு எதுவும் இன்றி தன் சீமந்த புத்திரன் ராமனுக்கு முடிசூட்டி விடலாமே!

முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டாலும், மருமகன் பரதனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான் யுதாஜித். அவன் வந்தவுடன் எல்லா ஆரம்ப கட்ட உபசாரங்களையும் செய்தான். உடன் வந்த சத்ருக்னனுக்கும் சமமான வரவேற்பை நல்கினான். அவர்களுடைய மனைவியர் மாண்டவி, சுருதகீர்த்தி இருவரையும் அக்கறையோடும், பொறுப்போடும் கவனிக்க சேடிப் பெண்களுக்கு உத்தரவிட்டான்.

பேச்சு வாக்கில், தசரதன் தானே முன்வந்து பரதனை கேகயத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டான் யுதாஜித். அவனுக்கு தசரதனின் செயல் சற்று குழப்பத்தைக் கொடுத்தது. அவனுக்கு நன்றாகத் தெரியும், ராமன் நிழலே பரதனுக்குப் புகலிடம் என்று. என்னதான் பாட்டனார், மாமன் என்ற உறவுகள் அவன் மீது பாசத்தைப் பொழியத் தயாராக இருந்தாலும், பரதன் எல்லாவற்றிற்கும் மேலான ராம பாசத்தில் பெரிதும் கட்டுண்டவன். அதற்கு மிஞ்சிய சந்தோஷத்தை, அவனைப் பொறுத்தவரை வேறு யாராலும் தர முடியாது.

பரதனுக்கு அப்படி ஒரு ஆசை ஆழ்மனதில் தேங்கியிருக்கும் என தசரதர் தாமாக ஊகித்திருப்பார், அதனாலேயே இவ்வாறு செய்திருக்கிறார் என தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான் நற்குணத்தோனான யுதாஜித்.

என்னதான் அயோத்திக்கு ஈடான உபசாரங்கள், பணிவிடைகள் என்று கிடைத்தாலும், பரதனின் மனம் ராமனை நினைத்து ஏங்குவதை யுதாஜித் உணராமல் இல்லை. இரு ஜோடிகளும் ரதம் ஏறி வனப் பகுதிக்குச் செல்வதும், அங்குள்ள முனிவர்களிடம் ஆசி பெறுவதுமாகப் பொழுதைக் கழித்தனர். அரண்மனையில் இருக்கும் உற்றார், உறவினர்களுடன் உரையாடி, அவர்களில் மூத்தோர்களின் அறிவுரைகளை ஆர்வமாக கேட்டும், சம வயதினருடன் வேடிக்கையாகப் பேசியும் வந்தனர். ஆனாலும் பரதன் முகத்தில் ராமனை விட்டுப் பிரிந்த வருத்தம் மெல்லிய ரேகையாக ஓடியதை யுதாஜித் படிக்கத் தவறவில்லை.

இப்படி திடீரென முடிவெடுத்து பரதனை தன் நாட்டிற்கு தசரதன் ஏன் அனுப்ப வேண்டும் என யுதாஜித் குழப்பம் கொண்டான். இதற்கு தன் சகோதரி கைகேயி எந்தளவுக்கு உடன்பட்டிருப்பாள்? ஒருவேளை அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்திருப்பானோ? சேச்சே, அப்படி இருக்காது. அவளும் சம்மதித்திருப்பாள். தங்களையெல்லாம் நலம் விசாரிக்குமாறு சொல்லி அனுப்பியிருப்பாள்

எனக் கருதினான். ஒருவேளை அயோத்தி தன் புகுந்த வீடு என்பதால் தன் பாசத்தை விளக்கும் வகையில் பரிசுப் பொருள் எதையும் கொடுத்தனுப்பாமல் இருந்திருக்கலாம் என்றும் யோசித்தான்.

ஆனால் சில நாட்களுக்குள் தசரதர் எப்படி அவசரம் அவசரமாக பரதனை கேகயத்துக்கு அனுப்பி வைத்தாரோ அதே அவசரத்தில் பரதனை அயோத்திக்கு உடனே திரும்புமாறு வசிட்டர் ஓலையனுப்பியதால் யுதாஜித்தின் சந்தேகம் ஊர்ஜிதமாகியது. அதாவது ராமன் வனம் ஏகுவதும், தசரதன் மரணமடைவதுமான சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றன.

--தொடரும்

பிரபு சங்கர்

72999 68695






      Dinamalar
      Follow us