sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 52

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 52

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 52

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 52


ADDED : ஜன 26, 2024 08:10 AM

Google News

ADDED : ஜன 26, 2024 08:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்ஞாதவாசம் முடிந்தது

கீசகனும் அவன் சகோதரர்களும் அழிக்கப்பட முடியாத பலசாலிகள் எனக் கருதியிருந்த விராடன் அவர்கள் அழியவும் திரவுபதியை நினைத்து அஞ்சினான். அதற்காக தன் மனைவியான சுதட்சணையிடம் ஆலோசித்தான்.

'' உன் சகோதரன் கீசகனை மட்டுமல்ல, உன் மற்ற சகோதரர்களையும் ஒரு கந்தர்வன் வதம் புரிந்ததை அறிந்தேன். அந்த சைரந்திரி அவ்வளவு வலிமையானவளா... அவளுக்காக கந்தர்வர்கள் இவ்வளவு துாரம் வந்து அவளை பாதுகாக்கிறார்கள் என்றால் அவள் பணிப்பெண்ணாக இருப்பது சரியா'' என்றும் கேட்டான்.

''நானும் அது குறித்தே சிந்திக்கிறேன். சைரந்திரி சாமான்யமானவள் இல்லை. கந்தர்வர்களின் காவலில் இருக்கும் அவள் மகாராணிக்கு சமமானவள். ஆனால் இங்கு அவள் ஏவல்காரியாக இருக்கிறாள். இதை கந்தர்வர்கள் எப்படி அனுமதித்தனர் என தெரியவில்லை.

அவர்களின் கோபம் நம் பக்கம் திரும்பினால் நாமும் கீசகனைப் போல வதம் செய்யப்படலாம்''

''சரியாகச் சொன்னாய். முதலில் அவளைப் பணிநீக்கம் செய். அவள் இனி இங்கிருக்கக் கூடாது''

''அவ்வாறே செய்கிறேன். அச்சம் அடையாதீர்கள். சைரந்திரியை அழைத்துப் பேசி பொன், பொருள் தந்து நாட்டை விட்டு அனுப்புகிறேன்'' என சுதட்சணை உறுதியளித்தாள். அதன்பின் சைரந்திரியை அந்தப்புரத்துக்கு அழைத்து வரப் பணித்தாள். சைரந்திரி என்ற பெயரில் இருக்கும் திரவுபதியும் பணிவுடன் வந்து நின்றாள்.

''சைரந்திரி இறுதியில் என் சகோதரன் கீசகனையும் மற்ற சகோதரர்களையும் கொன்று விட்டாயே... நான் எவ்வளவு பெரிய துக்கத்தில் இருக்கிறேன் தெரியுமா'' என பேச்சைத் தொடங்கினாள்.

''என்ன செய்வேன் மகாராணி. என்னை அவர் பெண்டாள நினைத்தது குற்றமில்லையா''

''ராஜ புத்திரர்களைப் பொறுத்தவரை அது குற்றமில்லை என்பது தெரியாதா...''

''இருக்கலாம். ஆயினும் பெண்ணுக்கும் விருப்பம் வேண்டும் அல்லவா''

''பணிப்பெண்ணான உனக்கு என் சகோதரனின் உறவு கசந்தது தான் விந்தை''

''அப்படி சொல்லாதீர்கள். நான் என்னை அந்த ஐந்து கந்தர்வர்களுக்கு கொடுத்து விட்டேன். நான் அவர்களின் சொத்து''

''கந்தர்வர்களை சொந்தமாக உடைய நீ இப்படி பணிப்பெண்ணாக இருக்கலாமா''

''என்ன சொல்கிறீர்கள் மகாராணி''

''உன்னை நினைத்து மன்னர் அச்சப்படுகிறார். இனியும் நீ பணிப்பெண்ணாக திகழ்வதை அவர் விரும்பவில்லை''

''இப்படி சொன்னால் எப்படி மகாராணி. நான் என் பணிகளில் தவறு செய்யவில்லையே?''

''ஒட்டு மொத்தமாய் உன்னால் அல்லவா என் சகோதரர்கள் அழிந்தனர். கந்தர்வர்கள் நாளை மன்னரையும், என்னையும் கொல்ல மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?''

''வீணான கற்பனை. அப்படி நடக்காது. நான் உறுதி தருகிறேன்''

''உன் உறுதியை நான் ஏற்கலாம். மன்னர் ஏற்க தயாரில்லை. இந்த நாட்டை விட்டு வெளியேறு. வேண்டிய அளவு பொன் தருகிறேன். அதைக் கொண்டு உன் வருங்காலத்தை கழிக்கலாம்'' சுதட்சணை தீர்மானமாகப் பேசினாள். திரவுபதிக்கும் கீசக வதத்தின் எதிர்வினை புரியத் தொடங்கியது. அடுத்து என்ன செய்வது என யோசித்தவள் இது தொடர்பாக தன் கணவர்களாகிய பாண்டவர்களிடம் கலந்து பேச தீர்மானித்தாள்.

''மகாராணி... ஒருநாள் அவகாசம் தாருங்கள். நாளை முடிவைக் கூறுகிறேன்'' என்றவளாக சுதட்சணையிடம் இருந்து விடைபெற்றாள்.

திரும்பும் வழியில் யாரும் அறியாதபடி பாண்டவர்களை தனித்தனியே சந்தித்தவள் ஒரு ரகசிய இடத்துக்கு அவர்களை வருமாறு கூறினாள். அவர்களும் மாலைப் பொழுதில் மச்ச நாட்டின் ஆற்றின் கரையோரமாக ஒரு மரநிழலில் வந்து கூடி சிந்திக்கத் தொடங்கினர்.

''என் பர்த்தாக்களே... நான் என்ன செய்யட்டும்'' என அவள் கேட்ட கேள்விக்கு சகாதேவன் பதிலளித்தான்.

''தேவி... அக்ஞாத வாசத்தில்

பதினோரு மாதம் முடிந்தது. மீதமிருப்பது

ஒரு மாதமே! வரும் சித்திரை பவுர்ணமியோடு 13 வருட கால வனவாழ்வும் முடிவுக்கு வந்து விடும். அதுவரை எப்படியாவது

இங்கு இருக்கப் பார்'' என்றான்.

''ஆம். திரவுபதி சுதட்சணையிடம் ஒரு மாத அவகாசம் கேள். அவள் மறுத்தால் கந்தர்வர்கள் தண்டிப்பார்கள் என்று சொல்'' என்றான் தர்மன்.

''வேறு வழியில்லை திரவுபதி. சுதட்சணையை எங்கள் பெயரால் மிரட்டிப் பணிய வைக்கத் தான் வேண்டும்'' என்றான் நகுலன். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஆற்றோரமாக ஒரு படகில் சிலர் இறங்கினர். அவர்களில் எல்லா வயதினரும் இருந்தனர். அவர்கள் துரியோதனனால் பாண்டவர்கள் இருப்பிடத்தைக் கண்டறிய அனுப்பப்பட்டவர்கள் ஆவர்.

அவர்களில் ஒருவர் தர்மனை வணங்கி, ''அருமைப் பெரியவரே தாங்கள் யார் என அறியலாமா?'' என்று கேட்டார்.

''என் பெயர் கங்கன். ஆமாம் நீங்கள் எல்லாம் யார்?'' எனக் கேட்டான் தர்மன்.

''நீங்கள் இந்த மச்ச நாட்டைச் சேர்ந்தவரா''

''ஆம். நீங்கள் முதலில் யார் எனக் கூறுங்கள்''

''நாங்கள் ஹஸ்தினாபுர வாசிகள். எங்கள் மன்னர் துரியோதனரின் உளவுப்படையில் பணிபுரிபவர்கள்'' அவர் தன்னை ஹஸ்தினாபுரவாசி என்று கூறுவுமே தர்மன் சிலிர்த்துப் போனான்.

''அப்படியா... ஹஸ்தினாபுரத்து மக்கள் எப்படி இருக்கிறார்கள். மகிழ்வோடு வாழ்கிறார்களா... நாட்டில் மழை

பெய்து மக்கள் வளமாகத் தானே வாழ்கிறார்கள்'' என உணர்ச்சி பெருக்குடன் கேட்டான் தர்மன். அந்த மனிதரும் அதைக் கேட்டு ஆச்சரியமுடன், ''அன்பரே! தங்களுக்குத் தான் எங்கள் நாட்டின் மீது எவ்வளவு அக்கறை. அன்பாய் விசாரிக்கிறீர்களே...'' என்றார்.

''போகட்டும். நீங்கள் இங்கு வந்த நோக்கம் என்ன?'' எனக் கேட்டான்.

''அதை ஏன் கேட்கிறீர்கள்? நாங்கள் எங்களின் அன்புக்குரிய ராஜாக்களை தேடிக் கொண்டிருக்கிறோம். அதற்காகவே இதுவரை வந்திராத இந்த மச்ச நாட்டுக்கும் வந்துள்ளோம்''

''இது என்ன விந்தை... உங்கள் மன்னர் துரியோதனர் என்றீர்களே''

''ஆம். அவர் பேருக்குத் தான் மன்னர். உண்மையில் சக்கரவர்த்தி திருதராஷ்டிரர் தான்''

''அப்படியிருக்க நீங்கள் அன்புக்குரிய ராஜாக்கள் என யாரைக் குறிப்பிட்டீர்கள்''

''அவர்கள் பாண்டவர்கள். தர்மசீலர்கள். அதிலும் முதலாமவர் தர்மன் எனப் பெயர் கொண்டவர். அநியாயமாக சூதாட வைத்து நாட்டைப் பறித்தவரே எங்கள் மன்னர் துரியோதனர்''

பாண்டவர்களை புகழ்ந்து பேசவும் தர்மன் உள்ளிட்ட அனைவரின் முகமும் தாமரை போல மலர்ந்தது. அதே சமயம் அவர்கள் அடையாளம் கண்டு விடுவார்களோ என்ற பயமும் உண்டானது.

''போகட்டும். அவர்களையா நீங்கள் அன்புக்குரிய ராஜாக்கள் என்றீர்கள்?''

''ஆம். அவர்களே எங்களின் அன்புக்குரியவர்கள். இப்போது அக்ஞாதவாசத்தில் உள்ளனர். அவர்களை கண்டுபிடிக்கவே இந்த நாட்டிற்கும் வந்துள்ளோம்''

''அவர்கள் இங்கிருப்பதாக யார் சொன்னது''

''அவர்களை இங்கு மட்டுமல்ல. இந்த பூமி முழுக்க தேடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு மாத காலம் தான் உள்ளது. அதுவரை அவர்கள் எங்களின் பார்வையில் பட்டுவிடக் கூடாது''

''அவர்களை தேடி வந்து விட்டு பார்வையில் படக்கூடாது என்றால் எப்படி... புரியவில்லையே''

''தேடி வந்தது கடமை. பார்வையில் பட்டுவிடக் கூடாது என்பது எங்கள் விருப்பம்''

''அப்படியானால் உங்கள் கடமையை முழுமையாக செய்யுங்கள். செல்லுங்கள்''

''மிக்க மகிழ்ச்சி. இந்த வழியாக உங்கள் நாட்டுக்குள் செல்ல முடியும் தானே''

''தாராளமாக''

தர்மன் கூறிட அவர்கள் சென்ற பின் தர்மனும், மற்ற சகோதரர்களும் தங்கள் நாட்டு மக்களின் அன்பையும் பாசத்தையும் எண்ணி பூரித்தனர்.

திரவுபதியும் ஒருமாத கால அவகாசம் கேட்டு சுதட்சணையோடு இருந்து விடுவதாக கூறி புறப்பட்டாள். அதே போல அந்த ஒரு மாத காலமும் எவரும் அறியாதபடி பாண்டவர்கள் தங்கள் அக்ஞாதவாசத்தை வெற்றிகரமாக முடித்தனர். அதற்கு தர்ம தேவன் தந்த வரமும், மாறுவேடமும் பெரிதும் துணையாக இருந்தது.

-முற்றும்

இந்திரா செளந்தர்ராஜன்

98947 23450

இந்த தொடரை புத்தகமாக பெற 1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்






      Dinamalar
      Follow us