ADDED : பிப் 02, 2024 01:52 PM

மன உறுதிக்கு ஒரு ஜனகன்
ராவண வதத்துக்கு ஜனகன்தான் ஆதிகாரணம் எனலாம். ஆமாம்... அவர் தன் மகள் சீதையை ராமனுக்கு மணமுடித்துக் கொடுக்க, அவள் மாமனாரின் கட்டளைப்படி கணவருடன் காட்டுக்குச் செல்ல, அங்கே ராவணனால் அபகரிக்கப்பட அதனால் அவளை மீட்க ராமன் போரிட்டு ராவணனை அழிக்க என ராமாயணம் தொடர்கிறது.
அச்வரோமன் என்னும் மன்னனின் மகனே இந்த ஜனகன். கண்டகி, கவுசிகி என்ற ஆறுகளுக்கிடையே அமைந்த விதேக நாட்டின் அரசன் இவன். அந்நாட்டை மிதிலை என்றும் சொல்வர். ஜனகன் என்றால் 'இளமை குன்றாதவன்' என பொருள். ஸ்ரீரத்வஜ ஜனகன் என்பது முழுப்பெயர். சுகத்தையும், சோகத்தையும் ஒன்றாக பாவிப்பவர் என்பதால் இவர் ராஜரிஷி எனப்பட்டார். சுகபிரம்மருக்கே ஞானம் போதித்தவர்.
ஒரு மன்னன் யாகம் நடத்தப் போகிறான் என்றால் அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை அவனே உழுது, சுத்தப்படுத்திய பிறகே யாகத்தைத் தொடங்க வேண்டும். இந்த சம்பிரதாயப்படி ஜனகன் நிலத்தைக் கலப்பையால் பண்படுத்தியபோது பேழை ஒன்று கிடைத்தது. அதில் அழகான பெண் குழந்தை ஒன்று மலராய்ச் சிரித்தது.
குழந்தைப் பேறு இல்லாதிருந்த ஜனகன் பரம்பொருளே தனக்காக அளித்த வரம் எனக் கருதினார். கைகளால் குழந்தையை அணைத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். மனைவி சுனைனாவிடம் நடந்ததை விவரித்தார். அவளும் மகிழ்ச்சியுடன் குழந்தைக்கு சீதை எனப் பெயரிட்டு அப்போதே தாயானாள்.
நாளாவட்டத்தில் ஜனகருக்கு ஊர்மிளை என்னும் மகள் பிறந்ததும் சீதைக்கு சவுகரியமாகப் போனது. ஆமாம், விளையாட தங்கை கிடைத்து விட்டாளே! தெய்வக் குழந்தையான சீதை சிறுவயதிலேயே பராக்கிரமம் மிக்கவளாக விளங்கினாள். உரிய பருவத்தில் அவளுக்கு மணமுடிக்க விரும்பிய ஜனகன், அவளின் ஆற்றலுக்கு ஈடுகொடுப்பவனாக மணமகன் வர வேண்டும் என விரும்பினார். அதனால் தன்னிடமிருந்த வில்லில் நாணேற்ற வல்லவனையே மருமகனாக ஏற்பது எனத் தீர்மானித்தார்.
தட்சன் யாகம் நடத்திய போது ஏற்பட்ட போரில் சிவனால் பயன்படுத்தப்பட்ட பிரமாண்ட வில் அது. அதை ஜனகனின் முன்னோரான தேவராதன் என்பவருக்கு சிவன் அளித்தார். அது அப்படியே பரம்பரைகளைக் கடந்து இப்போது ஜனகனால் பராமரிக்கப்பட்டு வந்தது.
சீதையின் பேரழகும், நற்குணங்களும் உலகெங்கும் பரவின. அவளை மணக்க மன்னர் பலர் போட்டியிட்டனர். ஆனால் வில்லை வளைக்கும் போட்டியில் அனைவரும் தோற்றனர். இந்தத் தோல்வி அனைவரையும் ஜனகனுக்குப் பகைவராக மாற்றியது. வில்லை வளைப்பதை விட போர் தொடுத்து, ஜனகனை வெற்றி கண்டு சீதையைக் கைப்பற்றுவது எளிது என நினைத்து மிதிலை மீது போர் தொடுத்தனர். ஆனால் ஜனகன், தன் பிரமாண்டமான சேனைகள் ஒத்துழைப்புடன் வெற்றி கண்டார்.
அந்த தனுசை ராமன் நாணேற்ற வளைத்த போது அது முறிந்து போனது. சீதைக்கு பொருத்தமான கணவனும், தனக்கு நல்ல மருமகனுமாக ராமன் அமைந்ததால் ஜனகன் மகிழ்ந்தார். அதோடு ராமனின் கோரிக்கைபடி, தம்பியர் மூவருக்கும் தன் இளைய மகள் ஊர்மிளை, தன் தம்பி குசத்வஜனின் மகள்களான மாண்டவி, சுருதகீர்த்தியை மணமுடித்து வைத்தார். தமையன் என்ற முறையில் ராமன் தன் தம்பிகளின் நலன் காக்கும் பண்பைக் கண்டு வியந்தார். அதுமட்டுமின்றி பெற்றோரின் அனுமதி பெற்ற பின்பே திருமணம் நடக்க வேண்டும் என கோரிய ராமனின் பாசம், மரியாதையை அறிந்து நெஞ்சம் விம்மினார். உடனே தசரதனுக்கு ஓலை அனுப்பினார் ஜனகன். ராமனின் 'வில்லாற்றலை' அறிந்து மகிழ்ந்தார் தசரதன். பிறகு தன் மனைவியர், உற்றார், உறவினர், படைகள், குடிமக்கள் புடைசூழ மிதிலைக்கு வந்தார்.
சூரிய குலத்தோனான தசரதனும், சந்திர குலத்தோனான தானும் சம்பந்தி ஆனதை எண்ணி மகிழ்ந்தார் ஜனகன். திருமணத்திற்கு வந்தவர்களை மகிழ்ச்சியுடன் உபசரித்தார். அந்த அன்பும் பரிவும் எந்த பாரபட்சமின்றி ராமனுக்கும் சரி, எளிய விருந்தினருக்கும் சரி ஒரே மாதிரியானதாக இருந்தது.
ஒழிந்த என் இனி ஒண்ணுதல் தாதைதன்
பொழிந்த காதல் தொடர பொருள் எலாம்
அழிந்து மன்றல் கொண்டாடலின் அன்புதான்
இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்ததே
- கம்பர்
இத்தகைய ஜனகன் தன் உறுதியான நிலைப்பாட்டிற்காக ராமாயண காலத்தில் மட்டுமல்ல; அதற்கடுத்த கிருஷ்ண அவதார காலத்திலும் போற்றப்பட்டிருக்கிறார். ஆமாம், குருக்ஷேத்திர யுத்தம் ஆரம்பிக்கும் போது எதிரணியில் நின்ற தன் ஒன்றுவிட்ட சகோதரர்கள், மூத்த உறவினர்கள், தன் குருமார்கள் அனைவரையும் பகைவராக பாவிக்க வேண்டிய கொடுமையை உணர்ந்து அவர்களுக்கு எதிராக கணை தொடுக்க மறுத்து, தேர்த்தட்டில் அமர்ந்து விட்டான் அர்ஜுனன். அவனுக்கு போர் தர்மத்தை உபதேசித்தார் கிருஷ்ணன். போர் என வந்த பிறகு யாருக்கு எதிரான போர் எனத் தெரிந்தே வந்து விட்ட பிறகு, இப்போது போரிட தயக்கம் காட்டுகிறான் என்றால், அர்ஜுனன் மனதளவில் பலவீனமாகி விட்டான் என்பதைப் புரிந்து கொண்ட கிருஷ்ணன் கீதோபதேசம் செய்தார்.
அவனுக்கு அறிவுரை சொல்லும்போது, 'கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜனகாதய லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பச்யன்கர் துமர்ஹஸி' (அத்தியாயம் 3, ஸ்லோகம் 20) என ஜனகனைக் குறிப்பிடுகிறார். அதாவது 'ஜனகரும் மற்றும் அவரைப் போன்றோரும் தாம் திட சிந்தனையுடன் இயற்றிய கர்மத்தாலேயே உலகத்தை நல்வழியில் நடத்தினர்' என்ற பொருளில் குறிப்பிட்டிருக்கிறார்.
மணமுடித்து தந்தையிடமும், தாயாரிடமும் பிரியாவிடை பெற்று அயோத்தி சென்றாள் சீதை. அவளையும், பிற மூன்று மணப்பெண்களையும் ஆசியளித்து அனுப்பி வைத்தார் ஜனகன்.
ராமன் முயற்சியால் தன் சகோதரனின் மகளான மாண்டவியை பரதனுக்கு மணமுடித்ததும், ஜனகனுக்கு அரசியல் ரீதியாக ஒரு பிரச்னை அகன்றது. ஆமாம், விதேக நாட்டைப் பகைத்துக் கொண்ட நாடுகளில் கைகேயமும் ஒன்று. அந்நாட்டின் இளவரசியான கைகேயி தசரதனுக்கு மனைவியானாள். ஆனால் அந்த கைகேயியின் மகன் பரதனுக்கு மாண்டவியை மணம் முடித்ததால் கைகேய நாட்டுக்கும் ஜனகன் சம்பந்தி ஆகிவிட்டதால், பகைமை நீங்கியது! இந்த வகையில் ராமனுக்கும் பெருமை கூடியது.
திருமணத்திற்குப் பின் சீதையைக் காண ஜனகன் போகவில்லை; பெற்றோரைச் சந்திக்க சீதையும் வரவில்லை. இதற்கு அயோத்தியும், மிதிலையும் தொலைதுார நாடுகள் என்பதல்ல, ஜனகனின் பற்றற்ற போக்கே காரணம். மகள் பாசம் என்றிருந்தாலும், அதையும் மீறிய ஞான முதிர்ச்சி கொண்டவர் ஜனகன். ஆகவே எது எது எப்படி நடக்க வேண்டுமோ, அது அது அப்படி அப்படித்தான் நடக்கிறது என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர் அவர்.
மன உறுதியை சோதிக்கத் தன் குருநாதரான பஞ்சசிகர் என்பவர், பேரழகியாக, ஒரு முனிப்பெண்ணாக உருமாறி வந்த போதும் மனச்சலனமின்றி புறக்கணித்தவர் ஜனகன். அதனாலேயே குருநாதரின் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவரானார். இந்தப் பெருந்தகைக்கு ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்ற ஆழமான கொள்கையுடைய ராமன் மாப்பிள்ளையாக அமைந்ததுதான் எத்தனை பொருத்தம்!.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695