
வலனாசுரன் வதம்
அசுரகுல அரசனான வலன் சிறந்த சிவபக்தன். அசுரனாக இருந்தாலும் மனிதர்கள், முனிவர்கள் என யாருக்கும் அவன் தீங்கு செய்ததில்லை. அதனால் அசுரர்கள் மட்டுமின்றி மனிதர், முனிவர்களின் மத்தியிலும் வலனுக்கு நல்ல மதிப்பு இருந்தது. ஆனால் தேவர்கள் மீது வெறுப்பு கொண்ட வலன், மற்ற அசுரர்களைப் போல தானும் தேவலோகத்தின் மீது போர் தொடுத்து அதைக் கைப்பற்ற விரும்பினான்.
அதைச் செயல்படுத்தும் நோக்கில் சிவபெருமானை நோக்கி தவமிருந்தான். மகிழ்ந்த சிவன் அவன் முன்பு தோன்றிய போது, “சுவாமி... எதிரிகள் யாராக இருந்தாலும், அவர்களுடன் போரிடும் போது எனக்கு காயமோ, உயிர்ச் சேதமோ நேரக்கூடாது. இறப்பு நேரும் போது என் உடலின் பாகங்கள் அனைத்தும் விலை மதிப்பற்றதாகவும், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் என அனைவராலும் விரும்பக் கூடிய பொருளாகவும் மாற வேண்டும்” என வரம் கேட்டான். சிவனும் அப்படியே ஆகட்டும் என சொல்லி விட்டு மறைந்தார்.
வரத்தால் தனக்கு பேருதவியாக இருக்கப் போவதை எண்ணி மகிழ்ந்த வலன், தேவர்களுடன் போரிட்டு தேவலோகத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிவு செய்தான். அசுரனின் தலைமையில் அசுரப்படைக்கும், இந்திரன் தலைமையிலான தேவலோகப் படைக்கும் இடையில் கடும்போர் நடந்தது. இந்திரன் பலமுறை தாக்கிய போதும், வலன்
உடலில் சிறுகாயம் கூட ஏற்படவில்லை. ஆனால் அசுரன் தாக்கியதில் உடலெங்கும் காயம் ஏற்பட்டதால் இந்திரன் அங்கிருந்து தப்பி ஓடினான். அதைக் கண்ட தேவலோகப் படையினர் அச்சமடைந்து அசுரனிடம் சரணடைந்தனர். அப்போது வலன்,
''இனி என் கட்டுப்பாட்டில்தான் நீங்கள் இருக்க வேண்டும். ஆனால் உங்களைத் துன்புறுத்த மாட்டேன். என்னை எதிர்த்தால் கடும் தண்டனை அளிக்கப்படும்” என எச்சரித்தான்.
தப்பி ஓடிய இந்திரன் சத்தியலோகத்தை அடைந்தான். அங்கு பிரம்மாவிடம் ஆலோசித்த போது, “சிவனிடம் பெற்ற வரத்தால் அசுரனுக்கு காயம் ஏற்படாது. அவனது உயிருக்கும் ஆபத்து நேராது. அவன் சிவபக்தனாக இருப்பதால் பக்தி மூலம் சூழ்ச்சி செய்து அழிக்கலாம்” என்றார். பிரம்மாவுக்கு நன்றி சொல்லி விட்டு இந்திரன் விடை பெற்றான். புதியதொரு திட்டத்தை வகுத்துக் கொண்டு வலனின் இருப்பிடத்தை அடைந்தான்.
“தேவலோகத்தை கைப்பற்றியதால் தங்களின் புகழ் எங்கும் பரவிவிட்டது. தேவர்களையும் தாங்கள் துன்புறுத்தவில்லை என அறிந்து மனம் மகிழ்ந்தேன். தங்களைப் போன்ற உயர்ந்த எண்ணமுடைய அசுரர்கள் யாரையும் இதுவரை நான் கண்டதில்லை. தங்களிடம் தோல்வியடைந்தது குறித்து வருத்தம் சிறிதுமில்லை” என்றான்.
இந்திரனின் புகழுரையை கேட்டு மகிழ்ந்தாலும், எச்சரிக்கை உணர்வுடன், “அது சரி, நீ எதற்காக இங்கு வந்தாய்?” எனக் கேட்டான் அசுரன். “உங்களுடைய நல்லாட்சிக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்யவே இங்கு வந்தேன். உங்களுக்கு என்ன வரம் வேண்டுமெனக் கேளுங்கள் தருகிறேன்” என்றான்.
அதனைக் கேட்ட வலன், ''சிவன் அளித்த வரமே போதும். தோற்று ஓடிப்போன நீ வரம் தருவதாகச் சொல்வதைக் கேட்டதும் சிரிப்புதான் வருகிறது” என்று சொல்லி பலமாகச் சிரித்தான். அதைக் கண்ட இந்திரன் அமைதியாக நின்றான்.
சூழ்ச்சியை அறியாத வலன், “உனக்கு என்ன தேவை என்று கேள். அதை நான் தரக் காத்திருக்கிறேன்” என்று சொல்லி மீண்டும் சிரித்தான்.
“ உலக நன்மைக்காக சிவபெருமானை வேண்டி வேள்வி நடத்த உள்ளேன். அதற்கு ஒரு பசு தேவைப்படுகிறது” என்றான் இந்திரன். “வேள்விக்கான பசுதானே… அதை நான் தருகிறேன். அதுமட்டுமின்றி, சிவபெருமானை வேண்டிச் செய்யும் வேள்விக்குத் தேவையான அனைத்தையும் உனக்குச் செய்து தருகிறேன்” என்றான் வலன்.
“மிக்க மகிழ்ச்சி. இருப்பினும் வேள்விக்கான பசு சாதாரணமானதாக இருக்கக் கூடாது. அந்தப்பசு சிவன் மீது முழு நம்பிக்கையும், பக்தியும் கொண்டதாக இருக்க வேண்டும்” என்றான்.
அதைக் கேட்ட வலன், “சிவனிடம் நம்பிக்கை கொண்ட பசுவா? அது எங்கே இருக்கிறது? என்று சொல்லேன் பார்ப்போம். அதை நானே கொண்டு வந்து சேர்க்கிறேன்” என்றான்.
“சிவபெருமான் மீது நம்பிக்கை கொண்ட பசுவை எங்கே போய்த் தேடுவேன்? அது பற்றி தெரியாததால்தானே உதவி கேட்டேன். தாங்கள்தான் பசுவைச் சரியாகக் கண்டறிந்து, கொண்டு வந்து சேர்க்க வேண்டும்” என்றான். உடனே வலன், “சிவபெருமான் மீது நம்பிக்கை கொண்ட பசுவை எப்படி கண்டறிவது?'' எனக் கேட்டான்.
“சிவபெருமான் மீது நம்பிக்கை கொண்ட பசுவைக் கண்டறிய மாற்றுவழி ஒன்றிருக்கிறது” என்று சொல்லிய இந்திரன் பேச்சை நிறுத்தினான். உடனே வலன், “எந்த வழியாக இருந்தாலும் என்னிடம் சொல். உன் வேள்வி வெற்றியடைய அதை உறுதியாகச் செய்கிறேன்” என்றான்.
“சிவபெருமானை வேண்டி நான் நடத்தும் வேள்விக்குத் தங்களைப் போன்ற சிவபக்தியும் நம்பிக்கையும் கொண்ட ஒருவர் பசுவாக மாறினால் போதும்'' என்றான் இந்திரன்.
அவனது எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டான் வலன். இருப்பினும், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பசுவாக மாற முடிவு செய்தான்.
“இந்திரா... வேள்வியை தொடங்கு, நீ குறிப்பிடும் நாளில் பசுவாக மாறி வருகிறேன். உன் வேள்வி வெற்றியடைய என்னையே சமர்ப்பணம் செய்கிறேன்” என்றான். தன் சூழ்ச்சித் திட்டம் வெற்றியடையப் போகும் மகிழ்ச்சியோடு, 'வேள்வியை நாளையே தொடங்குகிறேன்' என்று சொல்லி விட்டு புறப்பட்டான்.
அசுரன் வலன் தன் மகனுக்கு பட்டம் சூட்டினான். அதன் பிறகு இந்திரன் வேள்வி நடத்தும் இடமான வெள்ளிமலைக்குச் சென்று பசுவாக மாறி யாகத்தீயில் இறங்கினான். அவனது உடல் முழுவதும் எரிந்து சாம்பலானது. அசுரனின் உயிர் ஒளியாக மாறி சத்திய லோகத்தை அடைந்தது.
சிவபெருமானிடம் பெற்ற வரத்தின்படி, அசுரனின் உடல் நெருப்பில் எரிந்த போது அவனுடைய ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு ரத்தினமாக மாறியது. ரத்தம் - மாணிக்கம், பல் - முத்து, முடி - வைடூர்யம், எலும்புகள் - வைரம், பித்தம் - மரகதம், கொழுப்பு - கோமேதகம், சதை - பவளம், கண் - நீலக்கல், கபம் - புஷ்பராகம் என மாறியது. இந்த நவமணிகளையே நவரத்தினம் என்கிறார்கள். இந்த ரத்தினங்களை மனிதர்கள், அசுரர்கள், முனிவர்கள், தேவர்கள் என அனைவரும் விரும்பி அணியும் மதிப்பு மிகுந்த பொருட்களாக இன்றும் இருந்து வருகின்றன.
-தொடரும்
தேனி மு.சுப்பிரமணி
99407 85925