sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சைப்புடவைக்காரி - 2

/

பச்சைப்புடவைக்காரி - 2

பச்சைப்புடவைக்காரி - 2

பச்சைப்புடவைக்காரி - 2


ADDED : பிப் 09, 2024 11:07 AM

Google News

ADDED : பிப் 09, 2024 11:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தற்கொலையா தீர்வு?

என் முன்னால் அமர்ந்திருந்தவளைப் பார்த்தேன். வயது முப்பது இருக்கும். நல்ல உயரம். அளவான உடற்கட்டு. மலர்ந்த முகம். பெரிய கண்கள். அதில் கப்பியிருந்த சோகம் என் இதயத்தைப் பிசைந்தது.

“நான் நிரஞ்சனா. அந்தக் கம்பெனியில பைனான்ஸ் டிபார்ட்மெண்ட்டுல இருக்கேன். இன்னும் கல்யாணம் ஆகல. வீட்டுல பாத்துக்கிட்டிருக்காங்க”

அவள் சொன்னது புகழ் பெற்ற ஒரு நிறுவனம்.

“பேங்க் கணக்குகள பாத்துக்கறது, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்யறது, பணம் அனுப்பறது எல்லாத்தையும் என் பொறுப்புல எங்க எம்.டி., விட்டிருக்காரு. அந்தப் பொறுப்புக்குத் துரோகம் செஞ்சிட்டேன். நான் வாழவே லாயக்கில்லாதவ. தற்கொலை செஞ்சிக்கபோறேன். எங்கப்பாவோட ஃப்ரண்டு உங்களப் பாத்துப் பேசச் சொன்னாரு. நீங்க என்ன சொன்னாலும் தற்கொலை முடிவ மாத்திக்க மாட்டேன்”

“தற்கொலைக்குப் போற அளவுக்கு என்ன நடந்தது?”

“வெளிநாட்டுல இருக்கற ஒரு வியாபாரிக்கு இந்திய ரூபாய் அஞ்சு லட்சத்துக்கு சமமான அளவு அமெரிக்க டாலர் அனுப்ப வேண்டியிருந்தது. பேப்பர்ஸ் எல்லாம் கரெக்டா இருந்தது. நான் டென்ஷன்ல இருந்ததால அஞ்சு லட்சம் டாலர அனுப்பிட்டேன் சார். என்னோட அஜாக்கிரதையால கம்பெனிக்கு நாலுகோடி நஷ்டம். அத கம்பெனியால தாங்க முடியாது. எப்படியும் திவாலாயிரும். விஷயம் இன்னும் எம்.டி.,க்குத் தெரியாது. அநேகமா அவரும் தற்கொலைதான் பண்ண வேண்டியிருக்கும்.

“எங்கப்பாவோட ஃப்ளாட் மட்டும்தான் எங்களுக்கு இருக்கற ஒரே சொத்து. அது அறுபது லட்ச ரூபாய் போகும். மொத்த நஷ்டத்துல ஆறுல ஒரு பங்கு கூடத் தேறாது”

“யாருக்குப் பணம் அனுப்பிச்சீங்களோ அவங்ககிட்டயே கேக்கலாமே?”

“அவன் பண முதல சார். அவன்கிட்டருந்து பணம் பேராது.”

“சட்டபூர்வமா ஏதாவது...''

“வழியே இல்ல. தற்கொலைதான் தீர்வு?”

என் முன் இருந்த பச்சைப்புடவைக்காரியின் படத்தைப் பார்த்தேன். 'உங்கள் அருள் நிறைந்திருக்கும் இந்த இடத்தில் தற்கொலைதான் வழி என்று விளையாட்டாச் சொல்வதும் பாவமாச்சே?'

என் உதவியாளர் உள்ளே வந்தார்.

“ஒரு டாக்டரம்மா அவசரமா பாக்கணுமாம். ஏதோ தலை போற விஷயமாம்”

“அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்கோமா?”

உதவியாளர் பதில் சொல்வதற்குள் அந்தக் கம்பீரமான மருத்துவர் உள்ளே நுழைந்தார்.

“நிரஞ்சனா, பத்து நிமிஷம் வெளிய உக்காந்திருங்க. நாம பேசுவோம்”

நிரஞ்சனா வெளியேறியதும் அந்தப் பெண் கேட்டாள்.

“கால பைரவிக்கே பத்து நிமிடம் காலக்கெடு வைக்கிறாயா?”

“தாயே நீங்களா?” அலறியபடி விழுந்தேன். பின் அவள் அமர்ந்த இடத்துக்குக் கீழே அமர்ந்துகொண்டேன்.

“நிரஞ்சனாவை நினைத்துக் கலங்காதே. அவள் கர்மக் கணக்கை சொல்கிறேன். அதை அவளிடம் சொல். மனதில் கருணை இருக்கட்டும். ஆனால் பேச்சில் கடுமை இருக்கட்டும். அப்போதுதான் மனம் மாறுவாள்”

பச்சைப்புடவைக்காரி சென்றவுடன் நிரஞ்சனாவை அழைத்தேன்.

“பச்சைப்புடவைக்காரி ஏன் சார் என்னையே குறிவச்சித் தாக்கணும்? மனசுல ஈரம் இல்லாதவளா அவ?”

“வாய மூடுறி. இன்னும் ஒரு வார்த்தை தப்பாப் பேசின அடிச்சே கொன்னுருவேன்”

நிரஞ்சனா அடங்கினாள். அழுதாள். நான் சொல்லவேண்டியதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

“உன் ஃப்ரண்ட் ஸ்ருதிக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கா?”

நிரஞ்சனாவின் முகம் வெளிறியது.

“ஸ்ருதிக்குப் பார்த்திருக்கற மாப்பிள்ளை அழகாயிருக்கான். பணக்காரன். மென்மையானவன். நல்ல குணங்களுக்குச் சொந்தக்காரன். சரியா?”

நிரஞ்சனா கலவரத்துடன் தலையாட்டினாள்.

“அழகில்லாத ஸ்ருதிக்கு நல்ல மாப்பிள்ளை கெடைச்சது உனக்குப் பொறுக்கல. பச்சைப்புடவைக்காரிகிட்ட நீ சண்டை போட்ட. உன் மனசுல பொறாமைத் தீ எரிஞ்சிக்கிட்டிருந்தது.

“ஸ்ருதிகிட்டயே அந்தப் பையனோட ஆபீஸ் அட்ரச வாங்கி அவனுக்கு மொட்டைக் கடுதாசி எழுதிப் போட்ட. ஸ்ருதி யாரோ ஒரு பையனோட சுத்திக்கிட்டிருந்தா. அவங்க தனியா வெளியூர் எல்லாம் போயிருக்காங்க. ஸ்ருதிக்கு உடம்புல வியாதி இருக்கு. குழந்தை பிறக்கறது கஷ்டம்தான்னு இல்லாததையும் பொல்லாததையும் எழுதிப் போட்ட இல்லையா?”

நிரஞ்சனா அழுதாள்.

“உன்னை முழுசா நம்பின உன் ஃப்ரண்டு வாழ்க்கைய நாசம் பண்ணப் பாத்த. உன் வாழ்க்கை நாசமாப் போச்சு. இப்போ, நீ போகலாம். தாராளமா தற்கொலை பண்ணிக்கலாம்”

நிரஞ்சனாவை அழவிட்டேன்.

“தற்கொலையத் தவிர வேற வழியே இல்லையா?”

“இருக்கு. நேர ஸ்ருதியோட வருங்காலக் கணவனப் பாரு. மொட்டைக் கடுதாசி எழுதினது நான்னு சொல்லு. ஸ்ருதி சொக்கத் தங்கம்னு சொல்லு. அவளுக்கு உடம்புலயோ மனசுலயோ குறை இல்லன்னு சொல்லு. உங்கள மாதிரி ஒருத்தரு ஸ்ருதிக்கு மாப்பிள்ளையாக் கெடச்சிட்டாரேங்கற பொறாமையில தப்பு பண்ணிட்டேன்னு சொல்லு. அப்புறம் உங்க எம்.டி., கால்ல விழுந்து மன்னிப்பு கேளு... என் ஃப்ளாட்ட உங்களுக்கு எழுதிக் கொடுத்துடறேன்னு சொல்லு. இனிமே எனக்கு சம்பளமே வேண்டாம்னு சொல்லு. சாகறவரைக்கும் வேலை பாக்கறேன்னு சொல்லு”

“இதெல்லாம் செஞ்சா பிரச்னை தீருமா?”

“உத்தரவாதம் தர முடியாது. ஆனா இதெல்லாம் செஞ்சா அடுத்த பொறப்பாவது நல்லா இருக்கும். அவ்வளவுதான் சொல்ல முடியும். அதுக்கப்பறம் பச்சைப்புடவைக்காரி விட்ட வழி”

நிரஞ்சனா சென்றவுடன் பச்சைப்புடவைக்காரி புயலாக உள்ளே வந்தாள். கண்ணீர் மல்கக் கைகூப்பினேன்.

“அங்கே தெரியும் காட்சியைப் பார்”

நிரஞ்சனா ஸ்ருதியின் வருங்காலக் கணவனான ரிஷியின்முன் அமர்ந்திருந்தாள்.

தட்டுத் தடுமாறி மொட்டைக் கடுதாசி எழுதிய விஷயத்தைச் சொன்னாள்.

“அந்த லெட்டரப் பாத்தவுடனேயே அது பொய்ன்னு தெரிஞ்சி போச்சு. கிழிச்சிப் போட்டுட்டேன். ஸ்ருதிகிட்டகூட சொல்லல. நீங்க அந்த லெட்டர எழுதினது தப்புதான். துரோகம்தான். ஆனா தப்ப ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டீங்க பாருங்க.. அங்கதான் நீங்க நிக்கறீங்க. பச்சைப்புடவைக்காரி உங்களுக்கு வெளியழகையும் கொடுத்திருக்கா, உள் அழகையும் கொடுத்திருக்கா”

கண்ணீர் மல்க வணங்கிவிட்டு தன் அலுவலகத்திற்கு ஓடினாள் நிரஞ்சனா. அவளுடைய அறையில் எம்.டி., இருந்தார்.

“என்ன மன்னிச்சிருங்க சார். உங்களுக்குத் துரோகம் செஞ்சிட்டேன். அஞ்சு லட்ச ரூபாய் அனுப்பறதுக்கு பதிலா அஞ்சு லட்சம் டாலர அந்த அமெரிக்காக்காரனுக்கு அனுப்பிச்சிட்டேன், சார். உங்களுக்கு கோடிக் கணக்குல நஷ்டம், சார்''

புலம்பியபடி நின்றவளை புன்னகையுடன் கையமர்த்தினார் எம்.டி.,

“எதுக்கும்மா புலம்பற? வேலை செஞ்சா அதுல எப்பவாவது தப்பு வரத்தான் செய்யும். நல்லவேளை நீ பணத்த அனுப்பிச்சவுடன நம்ம பேங்க் மேனேஜர் போன் பண்ணாரு. இன்னிக்கு அமெரிக்காவுக்கு நாலு கோடி அனுப்பப் போறீங்க. உங்க லிமிட்டவிட இது ரொம்பவே ஜாஸ்தி. என்ன செய்யன்னு கேட்டாரு. விவரத்தப் பாத்து நடந்ததை புரிஞ்சிக்கிட்டேன். இல்ல, சார். இத கேன்சல் பண்ணிருங்க. நான் வந்து விவரம் சொல்றேன்னு சொல்லிட்டேன். அதனால பணம் போகல. இனி ஜாக்ரதையா இரும்மா”

நிரஞ்சனா அழுதுகொண்டிருந்தாள். என்முன் இருந்த மகா மருத்துவச்சியின் கால்களில் விழுந்து கதறிக் கொண்டிருந்தேன். நிமிர்ந்து பார்த்தபோது அவள் அங்கு இல்லை.

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com






      Dinamalar
      Follow us