ADDED : பிப் 09, 2024 11:37 AM

இரக்கமற்றவன் இந்திரஜித்
அரக்கர்களின் பலமே அவர்கள் பெற்ற வரங்கள்தான். அதனால் தங்களுடைய காமம், கோபம், குரோதம் போன்ற உணர்வுகளால் விபரீதங்களை விளைவிப்பவர்களாக இருந்தார்கள். அதோடு அவர்களில் சிலர் மாயாஜாலத்தால் எதிரிகளை மறைந்திருந்து தாக்கி மகிழ்ந்தனர். இத்தகையவன்தான் ராவணனின் மகனான இந்திரஜித். இவனுடைய இயற்பெயர் மேகநாதன். பிறக்கும் போது சாதாரண குழந்தை போல அழாமல், மேகங்கள் மோதியதால் ஏற்படும் இடி போல பெருங்குரலில் முழங்கியதால் இப்பெயர் வந்தது.
இந்திரனை எதிர்த்து நின்று அவனைக் கயிற்றால் கட்டி இழுத்து வந்து இலங்கையில் அடிமையாக வைத்ததால் மேகநாதனுக்கு 'இந்திரஜித்' எனப் பெயர் வந்தது. அதாவது இந்திரனையே வென்றவன். ஆனால் இந்திரனின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐம்பூதங்கள், அனைத்து திசைக் காவலர்களும் தம் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் போகுமே, அதனால் உலக நியதி ஒழுங்கில்லாமல் போகுமே என அஞ்சிய பிரம்மா இலங்கைக்குச் சென்றார். ராவணனிடம் இந்திரனின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லி மீட்டு வந்தார்.
இதன்பின் இந்திரஜித்துக்கு செருக்கு மிகுந்தது. தான் பெற்ற வரங்களாலும், மாயாஜால நுட்பத்தாலும் சாதிக்க முடியாததே இல்லை என இறுமாப்பு கொண்டான். அதனால் தன் தந்தையான ராவணன் செய்யும் குற்றத்தையும் அவன் தவறாக கருதவில்லை; மாறாக அவரது வீரம் என்றே கருதினான். அதோடு தன்னை தந்தையார் பாராட்டும்போது மகிழ்ந்தான். அதாவது புகழ் பரவவேண்டும் என்பதற்காக எந்தக் குற்றத்தையும் செய்யலாம், யாரையும் அழிக்கலாம் என ராவணன் ஆணவம் கொண்டிருந்தான். இழிசெயலாகவே இருந்தாலும், தன் இனத்தவர் புகழ்வதை பெருமையாக கருதினான்.
அவனது தோற்றம் கம்பீரமாகவும், எதிர்ப்போர் அஞ்சும் வண்ணமாகவும் இருந்தது. இதை அனுமனும் முதல் பார்வையிலேயே கண்டு வியந்தான். ஆமாம், சீதையைத் தேடி இலங்கைக்குள் நுழைந்த அனுமன், உறங்கிக் கொண்டிருந்த இந்திரஜித்தைப் பார்த்தான். குகையில் உறங்கும் கம்பீரமான சிங்கமோ இவன்! கோரைப் பற்களைக் கொண்ட அரக்கனின் மகனோ! ஒருவேளை சிவனுடைய மகனான முருகவேளோ! அடடா, இவன் தோற்றம் பார்ப்போரை பிரமிக்க வைக்கிறதே! ராமனும், லட்சுமணனும் இவனுடன் பலநாட்கள் போர் புரிய வேண்டும் போலிருக்கிறதே!' என்றெல்லாம் பாராட்டினான்.
'வளையும்வாள் எயிற்று அரக்கனோ
கணிச்சியான் மகனோ
அளையில் வாள் அரி அனையவன்
யாவனோ? அறியேன்
இளைய வீரனும் ஏந்தலும்
இருவரும் பலநாள்
உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான்'
- கம்பர்
ஆனால் இந்திரஜித் தனக்கே சவாலாக அமைவான் என அனுமன் எதிர்பார்த்திருக்க மாட்டான். ஆமாம், அசோக வனத்தில் சீதையைக் கண்ட அவன், ராமன் வந்து மீட்பான் என உறுதியளித்தான்.
அதோடு தன் கைகளாலும், கால்களாலும் இலங்கையை நாசம் செய்தான்.
பிரமாண்ட குரங்கு இப்படி இயற்கை வளத்தை சின்னாபின்னப்படுத்துவதைப் பார்த்த அரக்கர்கள் மருண்டனர். ஆயுதங்களால் அனுமனைத் தாக்கினர். அவனோ அதை அலட்சியமாக உடைத்தெறிந்து மேலும் நகரை சிதைத்தான். தன்னை எதிர்த்த ராவணனின் மகனான அக்ககுமாரனை கீழே வீழ்த்திக் கொன்றான் அனுமன். இதை அறிந்த இந்திரஜித் தம்பியின் இழப்பைத் தாங்க முடியாமல், கோபமுடன் அனுமனை எதிர்த்தான். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்திரஜித் அம்பு, ஈட்டி, வாள் என ஆயுதங்களால் தாக்க, அனுமனோ ஓங்கி வளர்ந்திருந்த மரங்களைப் பிடுங்கி எதிர்ப்பை முறியடித்தான். இந்திரஜித் தலை மீது மரத்தால் ஓங்கி அடிக்க நிலைகுலைந்தான். உடனே சமாளித்து எழுந்து, அனுமன் மீது அம்பு எய்து கலங்கச் செய்தான். ஒரு கட்டத்தில் அனுமனைத் தொடர்ந்து எதிர்க்க இயலாது என உணர்ந்த இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அது அப்படியே அனுமனைக் கட்டவே அவன் அமைதி காத்தான்.
பிரம்மாஸ்திரம் என்பதை உணர்ந்து அதற்கு மரியாதை செலுத்தும் வகையில் அதன் பிடியில் இருந்து விடுபட விரும்பாமல் நின்றான். அதோடு தான் சிறைப்பிடிக்கப்பட்டால் ராவணனிடம் கொண்டு நிறுத்துவர். அப்போது அவனிடம், சீதையை விடுவித்து உயிர் பிழைத்துக் கொள் என அறிவுரை கூற நினைத்தான்.
இப்படி ஒரு வாய்ப்பைத் தனக்கு உருவாக்கிக் கொடுத்த இந்திரஜித்துக்கு மனதிற்குள் நன்றி கூறினான் அனுமன்.
ஆனால் ராவணனின் பிடிவாதத்தாலும், மூர்க்க குணத்தாலும் போர் என முடிவாகிவிட்டது. தானே முதலில் ராமனை எதிர்க்கத் தயாரானான் ராவணன். ஆனால் மகன் இந்திரஜித், 'நாங்கள் இருக்கும்போது நீங்கள் ஏன் துன்பப்படுகிறீர்கள்?' என்றதோடு தான் போய் ராம, லட்சுமணரை வீழ்த்தப் போவதாக ஆரவாரித்தான்.
இடையில் புகுந்து தர்மம் பேசிய சித்தப்பா விபீஷணனையும் அலட்சியப்படுத்தினான். முதலில் ராவணனுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், உடனே மனதை மாற்றிக் கொண்டு, அவனுக்கு ஆதரவாக போரிடத் தயாரான இன்னொரு சித்தப்பா கும்பகர்ணனைப் பெருமையுடன் பார்த்தான். 'அற்ப மானிடர்களான ராமன், லட்சுமணனைச் சார்ந்தவர்கள் எல்லாம் கேவலம் வானரங்கள். உங்கள் வீரத்துக்கு நீங்கள் மானிடருடன் போரிடுவதே இழுக்கு, இந்த வகையில் மரத்துக்கு மரம் தாவும் குரங்குகளுடனுமா சண்டையிட வேண்டும்?' என தந்தையிடம் சூளுரைத்தான்.
தன்னை இந்திரஜித் மதிக்காவிட்டாலும் விபீஷணன் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ''வானரப் படைகள் என்று அலட்சியம் செய்யாதே. எத்தகைய ஆற்றல் இருந்தால் கடலில் பாலம் அமைத்திருப்பார்கள்! யாரையும் குறைவாக மதிப்பிடாதே. என் அண்ணன் ராவணனுக்கு வேதவதி இட்ட சாபத்தையும் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். மேலோட்டமான அனுமானத்தால் எடைபோடாதே. அதனால் உன்னை அறியாமலேயே பலவீனன் ஆவாய்' என அறிவுறுத்தினான். ஆனாலும் இந்திரஜித் அதை பொருட்படுத்தவில்லை.
ஆனால் முதல்நாள் போரில் வானரப் படைகளைத் தன்னுடைய வீரர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்பதால், தான் நேரடியாக ராமனை எதிர்க்க முடியும் என ராவணன் கருதினான். ஆனால் 'இன்று போய் நாளை வா' என்ற ராமனின் பெருந்தன்மையால் உயிர் பிரியாமல் அரண்மனைக்குத் திரும்பினான். அடுத்த நாளில் கும்பகர்ணன் கொல்லப்பட்டான். மூன்றாம் தினம், தானியமாலி என்னும் ராவணனின் தளபதியின் மகனான அதிகாயன் உயிர் நீங்கினான். அடுத்தடுத்து நிகழ்ந்த தோல்விகளால் வெகுண்ட இந்திரஜித் நான்காம் நாளில் களம் இறங்கினான்.
போகும் முன் தந்தையிடம், 'ராம, லட்சுமணரை நானே வீழ்த்துவேன். வானரப் படைகளை தனி ஒருவனாக கொன்றழிப்பேன். அவ்வாறு செய்யாமல் திரும்ப மாட்டேன். எனக்கு அப்படிப்பட்ட தோற்றுப் போகும் வாழ்வு தேவையில்லை. லட்சுமணனை கொல்லாமல் திரும்பினால் எல்லோரும் எள்ளி நகையாடுவர். வரத்தால் நான் பெற்ற நாகபாசம், பாசுபதத்துக்கு என்னதான் மதிப்பு? அதுமட்டுமல்ல, லட்சுமணனை அழிக்காவிட்டால் நான் உனக்குப் பிறந்தவன் அல்ல என்றாகும்' என ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தான்.
ராவணனும், 'அனுமனை பிரம்மாஸ்திரத்தால் கட்டியது போல லட்சுமணனை நாகபாசத்தால் கட்டி அவன் உயிரைப் பிரிப்பாயாக' என ஆசியளித்து போருக்கு அனுப்பினான்.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695