
கயாசுரன் வதம்
அசுரர்கள் என்றாலே தீய எண்ணமுடன் பிறரை துன்புறுத்துபவர்கள் என நினைப்பர். அவர்களில் நல்லெண்ணமுடன் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவனே கயாசுரன். தன் சக்தியைப் பெருக்க வேண்டும் என அவன் தவத்தில் ஈடுபட்டான். இதனால் துன்பம் நேருமோ என சிவனிடம் ஆலோசித்தான் இந்திரன்,“தவம் செய்பவருக்கு வரம் தருவது என் கடமை. அதை என்னால் மாற்ற முடியாது. உனக்கு தேவையான உதவியைத் திருமாலிடம் கேள்” என்றார்.
திருமாலை சந்தித்த போது, “இந்திரா... அசுரர்கள் தாங்கள் பெற்ற சக்திகளைத் தீமை செய்யவே பயன்படுத்துவர். கயாசுரனின் தவத்தை நிறுத்த நான் முயற்சிக்கிறேன்” எனத் தெரிவித்தார். திருமாலின் பதிலைக் கேட்ட இந்திரன் மகிழ்ச்சியுடன் திரும்பினான்.
கயாசுரன் தவமிருக்கும் இடத்திற்குச் சென்ற திருமால் அவன் மீது இரக்கப்பட்டு தவத்தைக் கலைக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். “கயாசுரா, உன் தவத்தைக் கண்டு மகிழ்ந்தேன். நீ விரும்பும் வரத்தைக் கேள்” என்றார்.
“சுவாமி... தங்களின் அழகிய தோற்றம் கண்டு மகிழ்கிறேன். தேவர்கள், முனிவர்கள், துறவிகளைக் காட்டிலும் என் உடல் புனிதமாக மதிக்கப்பட வேண்டும். என் பாதங் களைத் தொட்டு வணங்கு வோரின் பாவங்கள் நீங்கி, அவர்கள் புனிதம் அடையும் வரத்தைக் கொடுங்கள்” எனக் கேட்டான்.
திருமாலும் வரத்தைத் தந்து மறைந்தார். வரத்தைப் பெற்றதை எண்ணி அசுரனும் மகிழ்ந்தான்.
மனிதர்கள், முனிவர்கள், அசுரர்கள் என பலரும் தங்களின் இறுதிக் காலத்தில் அசுரனின் பாதம் தொட்டு வணங்கி சொர்க்கம் சென்றனர். பாவிகள் பலர் தண்டனை இன்றி சொர்க்கம் சென்ற பின்பு, பூலோகத்தில் நற்செயல்கள் குறையத் தொடங்கின. கயாசுரனின் பாதம் தொட்டு வணங்கினால் எளிதாகச் சொர்க்கம் செல்லலாம் என்ற எண்ணத்தில் கோயில் வழிபாடு குறைந்தது.
பூமியில் இருந்து நரகத்திற்கு செல்வோர் யாருமில்லை. தனக்கென பணி எதுவுமில்லாமல் போன எமதர்மன் கவலையுடன் பிரம்மாவைச் சந்தித்தான். “சுவாமி, நரகம் தேவையில்லை என்ற நிலை உருவானதால் பூலோகத்தில், பிறப்பு, இறப்பு சுழற்சியே நின்று விட்டது. தாங்கள் தான் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.
பிரம்மாவும் எமதர்மனுடன் சேர்ந்து திருமாலைச் சந்திக்கச் சென்றார். “சுவாமி... கயாசுரனுக்குத் தாங்கள் கொடுத்த வரத்தால் பூமியில் நற்செயல் ஏதும் நடக்கவில்லை. தீயவர்கள் பாவத்திற்கு தண்டனை இல்லை என மரண பயமின்றி வாழ்கின்றனர். இந்த பிரச்னையைத் தீர்த்து வைக்க வேண்டும்” என வேண்டினார். விரைவில் தீர்வு காண்பதாக திருமாலும் தெரிவித்தார்.
அதன் பின் கயாசுரனைச் சந்தித்த திருமால், “வரத்தின் பயனாக தீயவர் பலரும் உன்னால் சொர்க்கம் சென்று விட்டனர். மரண பயம் என்பதே பூமியில் இல்லாமல் போனது. அந்த பயமே, ஒருவனை நல்வழியில் கொண்டு செல்லும். பூமியில் நற்செயல் தொடர நீ உதவ வேண்டும்” எனக் கேட்டார்.
வரம் கொடுத்த திருமாலே உதவி கேட்டு வந்திருப்பதை நினைத்துப் பெருமைப்பட்ட அசுரன், “என்ன உதவி வேண்டுமென்று சொல்லுங்கள்” என்றான்.
“வரத்தின் பயனாக உன் மூலம் தீயவர் பலர் சொர்க்கம் சென்றுள்ளனர்.
அவர்கள் செய்த பாவங்களுக்கான தண்டனை நம்மைச் சேருமோ என்ற அச்சம் உண்டாகிறது. அதைப் போக்கவும், நடந்த அனைத்தையும் நல்லதாக மாற்றவும் வேள்வி நடத்த வேண்டும். அதற்கான புனித இடம் வேறில்லை. தற்போதுள்ள நிலையில் உன் உடல் மட்டுமே புனிதமானதாக உள்ளது. எனவே உன் உடலை தானம் தர வேண்டும் என்றார்.
சிறிது நேர யோசனைக்கு பின், “உடலைத் தானமளிக்க சம்மதிக்கிறேன். அதற்கு முன்னதான என் விருப்பத்தை தாங்கள் நிறைவேற்ற வேண்டும்” என்றான். அதை திருமாலும் சம்மதித்தார்.
“வேள்விக்குத் தரப்படும் என் உடல் இருக்குமிடம் 'கயா' என்னும் என் பெயரில் சிறந்த வழிபாட்டுத் தலமாக விளங்க வேண்டும். அனைத்துத் தெய்வங்களும் ஒன்றாகச் சேர்ந்து இங்கு வருவோருக்கு அருள்புரிய வேண்டும். திதி, தர்ப்பணம் செய்வோருக்கு அவர்களின் முன்னோர்கள் செய்த பாவங்கள் நீங்கி அனைவரும் சொர்க்கத்தை அடைய வேண்டும்” என வேண்டினான்.
இறப்பிற்குப் பின்பும், அவனது உடல் இருக்கும் இடத்தில் வழிபடுபவர்கள் சொர்க்கம் செல்ல வேண்டும் என கேட்பதை அறிந்த திருமால் வியப்படைந்தார். அசுரனின் வேண்டுதலை ஏற்பதாக திருமால் தெரிவித்தார்.
கயாசுரன் வடக்கு நோக்கித் தலை வைத்து, தெற்கு நோக்கிக் காலை நீட்டிப் படுத்தான். அவனது உடல் மீது பிரம்மாவின் தலைமையில் வேள்வி நடந்தது. அது முடியும் போது, வேள்வியின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் அசுரனின் உடல் சற்று அசைந்தது. அப்போது திருமால் அவனது மார்பின் மீது 'தர்மசீலா' எனக் குறிக்கப்பட்ட கல்லை வைத்து உடலை அசைவின்றி செய்தார். வேள்வியும் சிறப்பாக நிறைவேறியது.
வேள்வி முடிந்த பின்னர் அசுரன் உடலில் வைக்கப்பட்ட கல்லின் மீது கால்கள் இரண்டையும் பதித்த திருமால், அந்த உடலை பூமிக்குள் அழுத்தவே மண்ணுக்குள் புதைந்தது. உடல் புதைந்த இடம் 'கயா' என பெயர் பெற்றது. அசுர குலத்தில் தோன்றினாலும் பெற்ற வரத்தால் அனைவரும் சொர்க்கம் செல்ல உதவியதாலும், திருமாலின் வேள்விக்கு உடல் தானம் அளித்ததாலும் அவன் திருமாலின் திருவடிகளை அடைந்தான்.
திருமாலின் திருவடி பட்டதால் அவன் உடல் புனிதமடைந்தது. பெற்ற வரத்தின்படியே, அனைத்துத் தெய்வங்களும் கயாவில் ஒன்று சேர்ந்தனர். மேலும் முன்னோர் வழிபாடு செய்தால் அவர்கள் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு சொர்க்கம் அடைந்தனர். முன்னோர் வழிபாட்டுக்கான சிறந்த தலமாக கயா இன்றும் விளங்குகிறது.
முண்டம், தண்டம், பிண்டம்
தேவபிரயாகையில் (அலகாபாத்) கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடிய பின் வேணி தானம், கரும காரியம் செய்திட வேண்டும். அதன் பிறகு காசியிலுள்ள கங்கையில் நீராடி சிரார்த்தம், தானம் செய்து விஸ்வநாதரை வழிபட்டு தம்பதியராக கயா செல்ல வேண்டும். அங்கு முன்னோருக்குத் திதி, தர்ப்பணம் செய்து பிண்டம் இட்டு வழிபட வேண்டும்.
இதை 'பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம்' என்பார்கள். அதாவது முதலில் பாவம் களைதல், பின்னர் பாவம் அண்டாமல் தடுத்தல், பாவம் நீங்கி கடவுளோடு இணைதல் என்பது இதன் பொருள்.
மூன்று கயாவில் முன்னோர் வழிபாடு
திருமாலின் வேண்டுகோளுக்காக கயாசுரன் தன் உடலைப் பெரிதாக்கினான். தலைப்பகுதியை பீஹாரில் இருக்கும் கயாவிலும், வயிற்றுப் பகுதியை ஒடிசாவிலுள்ள ஜிஜாப்பூரிலும், கால் பகுதியை ஆந்திராவிலுள்ள பீட்டாபுரத்திலும் இருக்குமாறு படுத்தான். தலைப்பகுதியில் விஷ்ணுவும், வயிற்றுப் பகுதியில் பிரம்மாவும், கால் பகுதியில் சிவனும் வேள்விகளைச் செய்தனர்.
வேள்வி முடிந்ததும் அவன் உடல் மண்ணுக்குள் புதைந்தது.
பீஹாரிலுள்ள கயாவை சிராகயா என்றும், ஒடிசாவிலுள்ள ஜிஜாப்பூரை நாபி கயா என்றும், ஆந்திராவிலுள்ள பீட்டாபுரத்தை பாதகயா என்றும் அழைக்கின்றனர். இந்த இடங்களில் முன்னோர் வழிபாடு செய்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கி புனிதம் பெற்று அவர்கள் சொர்க்கத்தை அடைகின்றனர்.
-தொடரும்
தேனி மு.சுப்பிரமணி
99407 85925