sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சைப்புடவைக்காரி - 3

/

பச்சைப்புடவைக்காரி - 3

பச்சைப்புடவைக்காரி - 3

பச்சைப்புடவைக்காரி - 3


ADDED : பிப் 16, 2024 03:16 PM

Google News

ADDED : பிப் 16, 2024 03:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவள் கொடுத்த விருது

சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரு எழுத்தாளரை வாழ்த்தச் சென்றிருந்தேன். தனக்கு எப்படி விருது கிடைத்தது என விலாவாரியாகச் சொன்னார் எழுத்தாளர். பின் என் கண்களைப் பார்த்தபடி, “சார், நான் உங்களவிட பத்து வயசு சின்னவன். உங்களுக்கு அப்புறம்தான் எழுத ஆரம்பிச்சேன். நீங்கதான் என் ஆதர்ச எழுத்தாளர். உங்க நடை, கதைகள்ல கடைசில நீங்க வைக்கிற ட்விஸ்ட் எல்லாமே ரொம்ப பிடிக்கும். எனக்கே சாகித்ய அகாடமி விருது கெடைச்சா உங்களுக்கு இன்னும் பெரிய விருதே கெடைச்சிருக்கணும்.”

எனக்குப் புரியவில்லை.

“நீங்க மாறணும். கடவுளப் பத்தியே எழுதாதீங்க. ஆன்மிகம் சின்ன வட்டம். அதுக்குள்ள உங்கள ஏன் சிறைப்படுத்திக்கிறீங்க? அத உடச்சிக்கிட்டு வெளிய வாங்க. சமுதாயத்துல நடக்கற சுவாரசியமான அவலங்களப் பத்தி எழுதுங்க. தகாத உறவு, கள்ளக் காதல்னு எதையாவது மையப் பொருளா வச்சிக்கிட்டு நாவல் எழுதுங்க. துள்ளல் நடையிலயே எழுதுங்க. நிச்சயமா விருது கிடைக்கும். பேரு, புகழ் பணம் எல்லாம் வரும்.

“ஆன்மிகம் அவசியமில்ல. மனுஷன்தான் எல்லாம், இன்பம் அனுபவிப்பதுதான் வாழ்க்கைன்னு எழுதுங்க. அடுத்தவங்க துன்பத்தப் பத்தி கவிநயமா எழுதினீங்கன்னா கவலையில்லாம வாழலாம். அதுதான் இந்த தொழிலோட ரகசியம். உருப்படற வழியப் பாருங்க''

என்னால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. விடைபெற்றுக் கிளம்பினேன்.

அப்போது இரவு மணி பத்து. போக்குவரத்து அவ்வளவாக இல்லை. ஒரு பெண் என் காரை நிறுத்தினாள். அவளைக் கடந்து செல்லலாம் என நினைத்தேன். முடியவில்லை. வண்டி நின்றது. சுவாதீனமாக முன் கதவைத் திறந்து அருகில் அமர்ந்தாள்.

“கண்கள் கலங்கியிருக்கே! அழுதாயோ?”

தாயை கண்டவுடன் அழுகை அதிகமானது.

“என்னைப் பற்றி எழுத வேண்டும் எனச் சொன்னேனா?”

அவளைப் பார்த்துக் கைகூப்பினேன்.

“என்னைப் பற்றியே எழுதுவதால்தான் உனக்கு எழுதும் வல்லமையை நான் தருவதாக நினைக்கிறாயா? அவன் சொன்னதுபோல் சமுதாயத்தைப் பற்றி எழுது. இன்பம் துய்ப்பதுதான் புனிதமான செயல் என்று எழுது. அதற்கும் ஆற்றல் தருவேன்”

“அது எப்படி...''

“விருது வாங்கியிருக்கிறானே அவனுக்கு யார் எழுதும் வல்லமை கொடுத்தார்கள் என நினைக்கிறாய்? நான்தான். என்னைப் பற்றி எழுதி எழுதிச் சலித்து விட்டது உனக்கு...''

“தாயே” என் அலறல் இரண்டு தெருக்கள் தாண்டிக் கேட்டிருக்கும்.

“என்ன வார்த்தை பேசுகிறீர்கள் தாயே என்னை வார்த்தைகளாலேயே கொல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன் வந்திருக்கிறீர்களா?” நான் கத்தினேன்.

“இல்லையப்பா. நீ எதைப் பற்றியும் எழுதலாம் என்ற சுதந்திரத்தை உனக்குக் கொடுத்து இருக்கிறேன் என சொன்னேன்”

“சுதந்திரமாவது சுண்டைக்காயாவது? ஏன் வார்த்தை ஈட்டிகளால் வதைக்கிறீர்கள்? என்னிடம் எழுதும் வல்லமை இருப்பதால் உங்களைப் பற்றி எழுதவில்லை தாயே! உங்களைப் பற்றி எழுதுவதால்தான் எனக்கு எழுதும் வல்லமையே இருக்கிறது.

“எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் எனில் எழுத்து எனக்கு தொழிலாகிவிடும். ஆனால் என்னைப் பொறுத்தவரை எழுத்து ஒரு யாகம். அதில் என்னையே பலியாகக் கொடுத்து பலனை என்னைக் கொத்தடிமையாகக் கொண்ட பச்சைப்புடவைக்காரிக்கு அர்ப்பணம் செய்கிறேன். அதுதான் எனக்கு எழுத்து. அது மட்டும்தான் என் வாழ்க்கை. இன்பம் அனுபவிப்பது வாழ்வின் நோக்கமாக சத்தியமாக இருக்க முடியாது. அன்பே வடிவான உங்களால் படைக்கப்பட்டவர்கள் நாங்கள். அன்பு காட்டுவது ஒன்றே வாழ்வின் நோக்கமாக இருக்கமுடியும். அந்த அன்பை, அதாவது உங்களை என் எழுத்தின் மூலம் காட்டுகிறேன். அவ்வளவுதான்”

“இல்லையப்பா. நான் என்ன சொல்கிறேன் என்றால்... சில காலம் என்னை மறந்து விட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து பாரேன். வேறு எதையாவது பற்றி எழுதேன்”

“வாயை மூடுங்கள், தாயே! உங்களை மறந்தால்தான் மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் உங்களையே நினைத்தபடி துன்பக்கடலில் தத்தளித்துச் சாவதைத்தான் விரும்புவேன்”

“இல்லை, நீயும் விருது வாங்கவேண்டாமா? வயதாகிக் கொண்டே போகிறதல்லவா?”

“உங்களைப் பற்றி எழுதுவதை விட்டால்தான் எனக்கு விருதுகளும் பரிசுகளும் கிடைக்குமென்றால் எனக்கு வேண்டாம் தாயே! உங்கள் அன்பைப் பற்றி எழுதினால் மரண தண்டனை என்ற ஒரு சட்டம் வந்தால் அதில் இறக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். அதுதான் சாகித்ய அகாடமி, ஞானபீடம் எல்லாம் எனக்கு...”

“சரி, கண்களைத் துடைத்துக் கொள். உனக்கு என்ன வேண்டும் என சொல், கொடுத்துவிட்டுப் போகிறேன்”

“நீங்கள்தான் வேண்டும் தாயே. என்றென்றும் உங்கள் கொத்தடிமையாக இருக்கவேண்டும். உங்கள் மீதுள்ள அன்பு பல மடங்கு பெருக வேண்டும். அது மற்ற மனிதர்களிடமும் பரிமளிக்க வேண்டும்”

“நாளை உனக்கு விருது தரப்போகிறேன்''

தாய் மறைந்துவிட்டாள்.

மறுநாள் காலை பத்து மணிக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. புதிய எண்.

“நான் ராம். கனடாவுல இருக்கேன். இப்போ லீவுக்காக மதுரை வந்திருக்கேன். நானும் என் மனைவியும் விஞ்ஞானிகள்”

நான் மவுனமாக இருந்தேன்.

“என்னோட மனைவி உங்களோட தீவிர ரசிகை. அவ கர்ப்பமா இருந்தப்ப ஏதோ காரணத்தால அநியாயத்துக்குப் பயந்து போய்ட்டா. ஆன்க்சைட்டி அட்டாக்ன்னு டாக்டர் பயமுறுத்திட்டாரு. உங்க எழுத்தப் படிச்சா மனசு சமனப்படும்னு தெரிஞ்சவங்க சொன்னாங்க. பச்சைப்புடவைக்காரிய பத்தி நீங்க எழுதின மூணு புத்தகம் வாங்கிக்கொடுத்தேன். என் மனைவி அதத் திரும்பித் திரும்பிப் படிச்சா. அவ மனசுல இருந்த பயமெல்லாம் போச்சு. உரிய காலத்துல சுகப் பிரசவமாச்சு. பெண் குழந்தை. இன்னிக்கு என் மனைவியோட பிறந்த நாள். இன்னிக்கு அவளுக்கு உங்கள காட்டப்போறேன். ஆனா அத அவகிட்ட சொல்லப்போறதில்ல. அது ஒரு ஆச்சரியமா இருக்கட்டுமே! இதுதான் நான் தரப்போற பிறந்தநாள் பரிசு”

மதியம் 12:00 மணிக்கு அலுவலகத்திற்கு வரச் சொன்னேன். வந்தார்கள். ராமின் மனைவி என்னைப் பார்த்துச் சில நிமிடம் திகைத்து நின்றாள். பின் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். அதன்பின் ஒரு மணிநேரம் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் அவள் பேசிக்கொண்டிருந்தாள்

அவர்கள் சென்றபின் ஒரு நடுத்தர வயதுப் பெண் அறைக்குள் வந்தாள்.

“உன் எழுத்துக்கு நான் கொடுத்த விருது எப்படி இருந்தது?”

“என்னுடைய எழுத்தே நீங்கள் கொடுத்த விருதுதானே, தாயே!”

“உன் எழுத்து ஒரு பெண்ணின் மனதில் அன்பை விதைத்து அவளது அச்சத்தைப் போக்கியிருக்கிறது. அன்பைப் பரப்ப வேண்டும் என்பதற்காகத்தான் உனக்கு எழுத்தைக் கொடுத்திருக்கிறேன். விருதுகள் வாங்குவதற்காக அல்ல. புரிகிறதா?”

கண்ணீர் மல்க பச்சைப்புடவைக்காரியின் காலடியில் விழுந்தேன்.

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com






      Dinamalar
      Follow us