ADDED : பிப் 23, 2024 11:15 AM

காஞ்சி மடத்திற்கு வந்த வயதான தம்பதியரை மஹாபெரியவர் உற்று பார்த்தார். ''நான் ரிடையர் ஆகி விட்டேன் பெரியவா... எனக்கு வாரிசு இல்லை. மடத்தில் ஊழியம் செய்யலாம் என வந்திருக்கேன். அருள்புரியணும்'' என்றார்.
''வாழ்றதுக்கு பிடிப்பு இல்லேன்னுதானே கவலைப்படறே?''
''ஆமாம்''
''ஏதாவது ஒரு காரியம் கொடுத்தா செய்வியா?''
''நிறைவேத்த தயாரா இருக்கேன்''
அவரை நிறுத்தி விட்டு, அடுத்து நிற்கும் பக்தரைக் கவனித்தார். அவர்களும் வயதானவர்கள் தான். அவர்களுடன் இளம்பெண் ஒருத்தி இருந்தாள். அவளின் தந்தை, ''பெரியவா... இவ எனக்கு ஒரே பொண்ணு. கல்யாணம் பண்ணி வைக்கணும். ஆசீர்வாதம் வேணும்'' என்றதும் ஆசியளித்தார். புன்முறுவலுடன் முதலில் வந்த முதியவரை நோக்கி சைகை காட்டியபடி, ''பிடிப்பு வேணும்னு கேட்டியே. இதோ இந்தப் பெண்ணுக்கு கல்யாணம் நடத்தி வை'' என்றார்.
''செஞ்சுடறேன் பெரியவா...செஞ்சுடறேன்...'' என்றபடியே வணங்கி எழுந்த போது, மஹாபெரியவர் இரட்டை விரலைக் காட்டியபடி முதியவரின் மனைவியைப் பார்த்தார். அதற்கான அர்த்தம் அந்த பெண்மணிக்கு புரிந்தது.
அதாவது அவர் முதியவரின் இரண்டாம் மனைவி. முதியவரிடம், ''உன் மூத்த தாரத்துக்கு பெண் குழந்தை இருந்ததே... அது என்னாச்சு?'' எனக் கேட்டார்.
'' இவருக்கு எப்படி தெரியும்?'' எனக் கலங்கிய முதியவர்,
''இவ சித்தியா வந்ததும் என் பொண்ணை படாதபாடு படுத்தினா... சின்ன வயசிலேயே வீட்டை விட்டு ஓடிப் போயிட்டா... தேடாத இடமில்லை... போனவ போனவ தான்... கண்டுபிடிக்க முடியலை''
''பிடிப்பு வேணுமுன்னு சொன்னே இல்லையா... இதோ இங்கு நிற்கிறாளே... இவதான் உன் காணாமப் போன மகள். இவளை அழைச்சிட்டு போய் நல்லபடியா கல்யாணம் செய்'' என்றார்.
முதிய தம்பதியர் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் விட்டபடி வணங்கினர்.
அந்த பெண்ணை வளர்த்து ஆளாக்கிய தம்பதியரிடம் பேசிய போது உண்மை தெரிய வந்தது. அவர்களும் அந்த பெண்ணை அனுப்ப சம்மதித்தனர். காணாமல் போன பெண் திரும்ப கிடைத்தது குருவருளால் தான். மஹாபெரியவரின் அருளால் அந்த பெண்ணுக்கு நல்ல நேரம் வந்தாச்சு.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.