ADDED : பிப் 23, 2024 11:16 AM

துரோகங்கள் துரத்துகின்றன
என் முன்னால் இருந்த தணிக்கையாளருக்கு வயது நாற்பது. பெரிய நிறுவனத்தில் நிதிஅதிகாரியாக இருந்த விருப்ப ஓய்வு பெற்றவர். ஆன்மிகவாதி.கோடிக்கணக்கில் சம்பாதித்து ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக திருவாசகம், தேவாரம், திருவாய்மொழி கற்பித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் முகத்தில் இருந்த சோகம் என் இதயத்தைப் பிசைந்தது.
“என்னாச்சு மோகன்?”
அழத் தொடங்கினார். தோளில் கை வைத்து சமாதானப்படுத்தினேன். குளிர்ந்த நீரைக் குடிக்கத் தந்தேன். “பச்சைப்புடவைக்காரி என்னக் கைவிட்டுட்டா, சார். ரொம்பப் பெரிய துரோகம் நடந்திருச்சி”
தாய் மீது இப்படி பழி சுமத்துகிறாரே! மோகன் மீது கோபம் வந்தது.
“என்னோட வாழப் பிடிக்கலேன்னு என் பொண்டாட்டி டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிருக்கா.”
“வாழப் பிடிக்கலேன்னா அதுக்குமேல என்ன செய்ய முடியும்? பேசாம மியூச்சுவல் கன்சண்ட்ல டைவர்ஸ் கொடுத்துட்டு நீங்க நிம்மதியா வாழுங்க”
மோகனுக்கு குழந்தைகள் இல்லை என்பதால் விவாகரத்து பெறுவதில் சிக்கல் இருக்காது.
“பெரிய சிக்கல் இருக்கே?”
“என்ன சிக்கல்?”
“அவளுக்கு இப்படி புத்தி பேதலிக்கும்னு நான் எதிர்பார்க்கல. அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு கம்பெனியோட ஷேர அவ பேர்ல வாங்கினேன். இன்னிக்கு அதோட மதிப்பு அம்பதுகோடி”
“அந்த ஷேர்ஸ யார் பணத்துல வாங்கினீங்க?”
“என் பணம்தான்''
“உங்க பணத்துல ஏன் அவ பேர்ல வாங்கினீங்க?”
“அப்போ கொஞ்சம் இன்கம் டாக்ஸ் சிக்கல் இருந்தது. அதனாலதான்...''
“விவாகரத்து வழக்கு நடக்கும் போது இந்த விவரத்தச் சொல்லலாம். எப்படியும் அதுல பாதியாவாது கெடைக்க வாய்ப்பு இருக்கு”
“என்ன சார்? அந்தப் பணம் என் அறிவாலயும், உழைப்பாலயும் சம்பாதிச்சது. அதுல எப்படி பங்கு கொடுக்க முடியும்? அவ சேர்ந்து வாழறதா இருந்தாச் சொல்லுங்க. என் சொத்து சுகங்கள அனுபவிக்கலாம். பிரிஞ்சி போறான்னா ஒண்ணும் கெடையாது”
இதை நீதிமன்றம் ஏற்காதே! விவாகரத்துக்கு அவள் என்ன காரணம் காட்டியிருக்கிறாளோ? ஒருவேளை இவர் கொடுமைப்படுத்துகிறார் என்று சொல்லி அதை அவளால் நிரூபிக்க முடிந்தால் இன்னும் சிக்கலாகிவிடுமே!
“என் பொண்டாட்டி செஞ்சதவிட பச்சைப்புடவைக்காரி செஞ்சது இன்னும் பெரிய துரோகம். நினைவு தெரிஞ்ச நாள்லருந்து அவளத்தான் கும்பிட்டுக்கிட்டிருக்கேன். எத்தனை பேர அவ கோயில்களுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிருக்கேன் தெரியுமா? அவளையே நெனச்சிக்கிட்டிருந்ததுக்கு என்ன வச்சி செஞ்சிட்டா சார்”
“ பச்சைப்புடவைக்காரி துரோகம்தான் பண்ணிட்டா. நீங்க என்ன செய்யப் போறீங்க?”
“ஒண்ணும் செய்ய முடியாது. ஆனா என் பொண்டாட்டிய ஆள் வச்சிக் கொல்லப்போறேன். வெள்ளிக்கிழமை காலையில உங்களப் பாக்க வருவேன். பச்சைப்புடவைக்காரி வேற ஏதாவது நல்ல வழி காட்டினா, சரி. இல்ல, என் பொண்டாட்டிய கொன்னுட்டு அந்த ஷேர என் பேர்ல மாத்திருவேன்”
மோகன் வெளியேறினார். நான் பிரமை பிடித்தவனைப் போல் அமர்ந்திருந்தேன் அவருக்கு ஏன் இவ்வளவு சோதனை வர வேண்டும்? இரண்டு நாளாக நான் சரிவர சாப்பிடவில்லை. துாங்கவில்லை. வெள்ளிக்கிழமை காலை காரை நிறுத்திவிட்டு இறங்கியபோது தெருவைக் கூட்டும் ஊழியராக என்னை நோக்கி வந்தாள்.
“குப்பை மீது காரை நிறுத்தியிருக்கீங்க. கொஞ்சம் தள்ளி நிறுத்த முடியுமா?”
“குப்பை அங்க மூணு மாசமா இருக்கு”
“அதற்காக இன்று சுத்தம் செய்யக்கூடாதா? எத்தனை நாள்தான் குப்பையுடன் வாழ்வாய்?”
“தாயே!”
“நானேதான். இன்று அந்த தடியன் உன்னைப் பார்க்க வரும் போது அவனுடைய கடந்தகாலம் உன் கண் முன்னால் தெரியும். நீ என்ன பேச வேண்டும் என்றும் தெரியும்''
அவள் மறைந்துவிட்டாள்.
சொன்னபடி மோகன் வந்துவிட்டார்.
“என்ன சார் ஏதாவது தெரிஞ்சதா? இல்ல, என் மனைவியக் கொல்ல ஏற்பாடு செய்யட்டுமா? பச்சைப்புடவைக்காரி கல்நெஞ்சுக்காரிங்கறது தெரிஞ்சிருக்குமே!”
“வாய மூடுடா! நம்பிக்கைத் துரோகி!”
“என்ன சார் என் பொண்டாட்டிய திட்டுற வார்த்தைகளால என்னப் போய் திட்டறீங்க?”
“எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நெனச்சியா? அந்த அம்பது கோடி ரூபாய் ஷேர் எப்படி வந்ததுன்னு சொல்லட்டுமா? உங்க கம்பெனி பணத்தக் கையாடல் செஞ்ச. அதக் கண்டுபிடிச்சிட்டாங்க. உன் சீட்டக் கிழிச்சிட்டாங்க. நீ அவங்களோட நிதிஅதிகாரியா இருந்ததால அவங்க கணக்குல இருக்கற தில்லுமுல்லுகள் உனக்குத் தெரியும். அத வருமான வரிக்காரங்களுக்கு எழுதிப் போட்டா அதகளமாயிரும்னு உங்க கம்பெனிய மிரட்டின. அப்புறம் பஞ்சாயத்து பேசினாங்க. அவங்க கம்பெனி ஷேர் வேணும்னு கேட்டு வாங்கின. அது உன் பேர்ல இருந்தா வேற ஏதாவது சிக்கல் வரும்னு உன் பொண்டாட்டி பேர்ல வாங்கிக்கிட்ட. நீ உன் கம்பெனிக்கு துரோகம் செஞ்ச. உன் பொண்டாட்டி உனக்கு துரோகம் செஞ்சா. கணக்கு நேராயிருச்சி. இதுக்கும் மேலயும் உன் பொண்டாட்டிய கொலை பண்ணி மாட்டிக்கிட்டு மிச்சமுள்ள வாழ்க்கைய ஜெயில்ல கழிக்கணும்னா
அது உன் இஷ்டம். என்ன வேணும்னாலும் செய். ஆனா என் பச்சைப்புடவைக்காரியப் பழிச்சிப் பேசின நானே உன்ன கொன்னுருவேன், ராஸ்கல்.”
பயங்கரமாகக் கத்துவான் என நினைத்தேன். பெரிதாக அழுதான்.
“பணத்தாசை சார். புத்தி கெட்டுப் போய் செஞ்சிட்டேன். இப்போ என்ன செய்யறது?”
“உங்க மனைவிக்கு டைவர்ஸ் கொடுத்திருங்க. அந்த ஷேரையும் அவங்களே வச்சிக்கட்டும். நீங்க வேலை பாத்த கம்பெனி தலைவரப் பார்த்து மன்னிப்பு கேளுங்க. உங்க சொத்தை எல்லாம் நஷ்ட ஈடா கொடுக்கறேன்னு சொல்லுங்க. அவங்க வாங்கிக்கமாட்டாங்க. உங்க சொத்துக்கள வச்சி உங்க கம்பெனி தலைவர் பேருல நிறைய தர்ம காரியம் பண்ணுங்க. உங்க மிச்சமுள்ள வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும். அடுத்த பிறப்பு நல்லபடியா இருக்கும்”
பிரமை பிடித்தவரைப் போல் அமர்ந்திருந்த மோகன் விடைபெற்று வெளியேறினார்.
அதன்பின் வேலை செய்ய எனக்கு மனம் இல்லை. அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தபோது துாய்மை பணியாளர் வடிவில் இருந்த பச்சைப்புடவைக்காரி காருக்கு அருகில் நின்றிருந்தாள்.
“அவனை நல்வழிப்படுத்திவிட்டாய்”
“தாயே! நான் உங்கள் கையில் உள்ள துடைப்பம். நீங்கள் பெருக்கினீர்கள். அவன் சுத்தமானான். இந்தத் துடைப்பத்தின் தலையில் எதற்கு பட்டுக் குஞ்சலத்தைக் கட்டுகிறீர்கள்?”
“உனக்கு என்ன வேண்டும் என்று சொல்.”
“மோகன் பணிபுரிந்த சூழ்நிலையில் பணத்தாசை தோன்ற அதிக வாய்ப்பிருந்தது. ஆரம்பத்திலிருந்தே எனக்கு அப்படி ஒரு சூழ்நிலை இல்லாமல் பார்த்துக் கொண்டீர்கள். அதனால்தான் நான் நல்லவனாக இருக்கிறேன். என் நிலைமை நீங்கள் போட்ட பிச்சை. இதை நான் என்றென்றும் மறவாதிருக்கும் வரம் வேண்டும் தாயே!”
தன் கையில் இருந்த துடைப்பத்தால் என் தலையில் செல்லமாகத் தட்டிவிட்டு மறைந்தாள் பச்சைப்புடவைக்காரி.
--தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com