
கூடசன் வதம்
அசுரகுலத்துப் பெண்ணுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ஓரிரு ஆண்டுகளில் அந்தப் பெண்ணும் இறந்தாள். குழந்தைக்குத் தந்தை யார் என்று அவள் சொல்லாததால், 'தந்தை யார் என்பதை அறியாத மகன்' என்ற பொருளில் 'கூடசன்' என அவன் பெயர் பெற்றான். அப்படி அழைப்பவரிடம் எல்லாம் கோபத்துடன் சண்டையிட்டான். இருப்பினும் அப்பெயரே நிலைத்தது.
தனக்கு ஏற்பட்ட அவப்பெயருக்கு காரணமானவனைக் கொல்ல வேண்டும் என அசுரன் நினைத்தான். தன் உடல் வலிமையை அதிகமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டான். அதன் பின் தன் உடலும், உயிரும் என்றும் அழியாமல் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டான். அதற்காக பிரம்மாவை நோக்கி தவமிருந்தான். மகிழ்ந்த பிரம்மா காட்சியளித்து, “உனக்கு என்ன வரம் வேண்டும்?” எனக் கேட்டார்.
“நான் விரும்பும் நேரத்தில் என் உடல் வலிமையான பாறையாக மாற வேண்டும். எனக்கு எப்போதும் நேரடியாக அழிவு நேரக் கூடாது. என்னை அழிக்க நினைக்கும் ஆயுதம் (பொருள்) பல துண்டுகளாக உடைந்து சிதறிப் போக வேண்டும். ஆயிரம் முறை முயன்றாலும் அவர்கள் தோல்வியடைய வேண்டும்” என வித்தியாசமான வரம் கேட்டான்.
பிரம்மாவும் வரம் அளித்து விட்டு மறைந்தார். கேட்ட வரம் கிடைத்ததால் அவனும் மகிழ்ந்தான். ஆனால் தன் பிறப்புக்கும் அவப்பெயருக்கும் காரணமான தந்தை யார் என தெரியாத அவனுக்கு, ஆண்கள் யாரைக் கண்டாலும் கோபம் ஏற்பட்டது. தொலைவில் அவன் வருவதைக் கண்டாலே ஆண்கள் அனைவரும் ஓடி ஒளிந்தனர். அசுரனிடம் அடி வாங்கிய ஒருவன், “காட்டில் தவம் புரியும் முனிவர்களுக்கு முக்காலமும் தெரியும். அவர்களிடம் கேட்டால் உன் தந்தையைக் கண்டுபிடிக்கலாம்” என்றான்.
முனிவர்களின் தவத்தைக் கலைத்து, “என் தந்தை யாரென்று சொல்?” என மிரட்டிக் கேட்டான். பதில் சொல்லாத அவர்களைத் தாக்கிக் காயப்படுத்தினான். அவனுக்குப் பயந்த முனிவர்கள் பலர் காட்டை விட்டு வெளியேறி காசியப முனிவரைச் சரணடைந்தனர்.
இதற்கிடையில் காசியபர், அவரது மனைவி அதிதியின் வேண்டுதலுக்காக விநாயகர் அவர்களுக்கு மகனாகப் பிறந்திருந்தார். 'மதோற்கடன்' என்ற பெயரில் விநாயகர் அங்கு வளர்ந்தார். ஒரு முனிவனுக்குத் தெரிய வேண்டிய அனைத்தையும் மகன் மதோற்கடனுக்கு காசியபர் கற்றுக் கொடுத்தார். வேள்வி செய்வதில் சிறந்தவனாக மதோற்கடன் விளங்கினார்.
இந்நிலையில் காசி நாட்டு மன்னன், தன் மகன் திருமணத்தை நடத்தித் தரும்படி காசியபரை வேண்டினான். சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ள இருப்பதால் தனக்குப் பதிலாக மதோற்கடனை அனுப்புவதாகத் தெரிவித்தார் காசியபர். மன்னனும் மகிழ்ச்சியுடன் காசிக்குத் திரும்பினான்.
திருமணத்தை நடத்தி வைக்க மதோற்கடன் காசிக்கு புறப்பட்டார். இடையில் வழிமறித்த கூடசன், “முக்காலமும் தெரிந்த முனிவனே, என் தந்தை யாரென்று சொல்!” எனக் கேள்வி கேட்டு பயணத்தை தடுத்தான். பதில் சொல்லாமல் அசுரனைக் கீழே தள்ளிவிட்டுச் சென்றார் மதோற்கடன். கோபமடைந்த கூடசன் தாக்க முயன்றான். முயற்சி எதுவும் பலிக்கவில்லை. அதனால் அசுரனின் கோபம் அதிகமானது.
அப்போது மதோற்கடன், “காசி நாட்டு மன்னனின் மகன் திருமணத்தை நடத்தி வைக்கச் செல்கிறேன். உன் கேள்விக்குப் பதில் சொல்ல நேரமில்லை. திருமணத்தை முடித்தபின் திரும்பி வரும் போது பதில் தெரிந்தால் சொல்கிறேன்” என்றார்.
“என் கேள்விக்கான பதில் கிடைக்காமல் போக விட மாட்டேன்” எனத் தடுத்தான். கோபமடைந்த மதோற்கடன் அவனைப் பலமாகப் பின்னோக்கித் தள்ளினார். எதிர்பாராத கூடசன் கீழே விழுந்து மயக்கமடைந்தான். மதோற்கடன் காசிக்கு விரைந்து சென்றார். காசி நாட்டு மன்னர் அரண்மனை வாசலில் வரவேற்றார்.
அந்நேரத்தில் மயக்கம் தெளிந்த கூடசனும் காசிக்கு விரைந்தான். பிரம்மாவிடம் பெற்ற வரத்தைப் பயன்படுத்திப் பாறையாக உருமாறி, அரண்மனை வாசலை அடைத்து நின்றான். பாறை வந்த விதம் தெரியாமல் அனைவரும் குழம்பினர். பாறையாக நின்று வாசலை மறைப்பவன் அசுரனான கூடசன் என்பது மதோற்கடனுக்கு மட்டும் தெரிந்தது. “மன்னரே, உங்கள் மகன் திருமணத்தில் சிறிய தடை ஏற்பட்டுள்ளது. அதை போக்க ஆயிரத்தி ஒரு தேங்காய்களைக் கொண்டு வாருங்கள்” என்றார். மன்னனும் தேங்காய்களைக் கொண்டு வரச் செய்தான்.
மகோற்கடன் தேங்காயை ஒவ்வொன்றாக எடுத்து, தன் பணிக்கு இடையூறாக உள்ள பாறையின் மீது எறிந்தார். சிதறு தேங்காய் உடைந்து பல துண்டுகளாகச் சிதறியது.
பாறை உருவிலிருந்த கூடசன் தாக்குதலால் ஏற்பட்ட வலியைப் பொறுத்துக் கொண்டான். பிரம்மா கொடுத்த வரத்தின்படி, ஆயிரம் முறை எப்பொருளைக் கொண்டு தாக்கினாலும், தன் உடலுக்கும் உயிருக்கும் அழிவு வரப் போவதில்லை; தேங்காய் நம்மை என்ன செய்துவிடும்? என நினைத்து அமைதியாக இருந்தான்.
ஆயிரம் தேங்காய்களை உடைத்து, ஆயிரத்து ஒன்றாவது தேங்காயை பாறையின் மீது எறிந்த போது பாறை உருமாறி கூடசனின் உண்மை உருவம் வெளிப்பட்டது. அப்போது பூமி பிளந்து அசுரன் பூமிக்குள் செல்ல பிளவு மூடியது. அசுரன் அழிந்தான். அதன் பின் பாறைக்கும் 'கூடசன்' எனப் பெயர் ஏற்பட்டது.
தன் மகன் திருமணத்திற்கு வந்த தடையை போக்கிய மதோற்கடனை காசி நாட்டு மன்னன் வணங்கினான். அதன் பின் மதோற்கடன் வேள்விகளை நடத்திட காசி மன்னனின் மகன் திருமணம் சிறப்பாக நடந்தது.
சாதுர்மாஸ்ய விரதம்
ஆடி பவுர்ணமி முதல் கார்த்திகை பவுர்ணமி வரை நான்கு மாதம் துறவிகள் உணவு முறையில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வர். இதற்கு 'சாதுர்மாஸ்ய விரதம்' என்று பெயர்.
அப்போது முதல் மாத உணவில் காய், பழங்கள் இடம்பெறும். இரண்டாம் மாதத்தில் பால் தவிர்ப்பர். மூன்றாம் மாதம் தயிரைத் தவிர்ப்பர். நான்காம் மாதம் பருப்பு வகைகளைச் சேர்க்க மாட்டார்கள். இக்காலத்தில் ஒரே இடத்திலேயே தங்கி வேதக் கருத்துக்களை மக்களுக்கு போதனை செய்வர்.
குரு பூர்ணிமா
ஆடி பவுர்ணமியன்று வியாசரை வழிபட்டு, வேதம், வேதாந்தக் கல்வியைக் கற்பித்த குருநாதர்களை போற்ற வேண்டும்.
'குருபூர்ணிமா' என்னும் இந்த நாளில் குருவை மனப்பூர்வமாக வணங்கி தாங்கள் பெற்ற வேதக்கல்வி சிறப்பாக வளர வேண்டும் என வேண்டிக் கொள்வது அவசியம்.
சிதறுகாய் உடைத்தல் மதோற்கடன் எனும்
பெயரில் விநாயகர் பாறையாக உருமாறி, தீங்கு செய்த அரக்கனை சிதறு தேங்காய் உடைத்து தோல்வியடையச் செய்தார். அன்று முதல் திருமணம், வெளியூர் பயணம் போன்ற நிகழ்வுகளிலும், முடிவு எடுக்கத் தடுமாறும் நிலையிலும், முக்கிய தருணங்களிலும் சிதறுகாய் உடைக்கும் வழக்கம்
உண்டானது. தேங்காயை ஓங்கித் தரையில் உடைத்தால் அது சில்லுச் சில்லாகச் சிதறும். அது போல விநாயகரின் அருளால் நம்மை பீடித்த தடை, பாவம், வேதனைகள் சிதறி ஓடும். அதன் பின்பு நாம் செய்யும் செயல்கள் தடையின்றி வெற்றி பெறும்.
-தொடரும்
தேனி மு.சுப்பிரமணி
99407 85925