
ராமாயண சொற்பொழிவு எங்கு நடந்தாலும் அதைக் கேட்க அனுமன் வருவார் என்பதால் ஒரு ஆசனமிட்டு அருகில் வெற்றிலை, பாக்கு, பழம் துளசி மாலையை வைத்திருப்பர்.
இந்த சம்பிரதாயத்தை முதன் முதலில் ஏற்படுத்தியவர் மகான் துளசிதாசர். பின்னாளில் காஞ்சி மஹாபெரியவர் தலைமையில் மத்தியபிரதேசம் ரட்லம் காளி கோயிலில் நடந்த ஆன்மிக மாநாட்டில் ராமாயணச் சொற்பொழிவு நடந்த போது குரங்கு வடிவில் வந்து அனுமனே ராம பக்தர்களுக்கு ஆசியளித்தார் என்பது சமீபகால வரலாறு.
அனுமன் மட்டுமில்லாமல் திருப்பதியில் நடந்த ராமாயணச் சொற்பொழிவைக் கேட்க ஒருமுறை பெருமாளே ஏழுமலைகளையும் கடந்து அடிவாரத்திற்கு வந்திருக்கிறார் தெரியுமா...
துறவியான ராமானுஜர் வைணவ சம்பிரதாயத்தை நாடெங்கும் வளர்த்த பொற்காலம் அது. பெருமாளின் அருள் நிறைந்த திருமலையை காலால் மிதித்தாலும் பாவம் சேரும் எனக் கருதி மலையின் அடிவாரத்தில் பர்ணசாலை அமைத்து அவர் தங்கியிருந்தார்.
எந்த ஒரு நல்ல விஷயத்தையும் குருநாதரின் மூலமாக கேட்டால் முழுமையான பலன் கிடைக்கும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதற்காக தன் தாய்மாமாவான திருமலை நம்பிகள் மூலமாக ராமாயணம் கேட்க விரும்பினார்.
திருப்பதி பெருமாளுக்கு சேவை செய்வதே வாழ்வின் குறிக்கோளாக கொண்டவர் அவர். 18 நாட்கள் தொடர்ந்து ராமாயண உபயன்யாசம் நடத்த ஏற்பாடானது.
ஒருநாள் ராமாயணம் கேட்கும் ஆர்வத்தால் மதியம் உச்சிக்கால பூஜையை செய்ய மறந்து போனார் திருமலைநம்பிகள்.
திருப்பதி ஏழுமலையானே காட்சியளித்து, 'ராமானுஜருக்கு சொல்கிறீரே... எனக்கு சொல்லமாட்டீரா' எனக் கேட்டார். இந்த அற்புதத்தை சிலாகித்து விவரிப்பர் ராமாயணச் சொற்பொழிவாளர்கள்.
திருப்பதி பெருமாளை தரிசிக்க செல்பவர்கள் பெருமாள் ராமாயணம் கேட்ட இடத்தை அலிபிரி என்னுமிடத்தில் தரிசிக்கலாம்.
வந்தாய் என்மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனியான் உன்னை என்றும் விடேனே
என்ற திருமங்கையாழ்வரின் பாசுரத்தைப் பாடி பெருமாளின் திருவடியை சரணடைவோம்.